நகைச் சுவைப் பகுதி. · காட்சி 2 / 3
முதன்மை நாடகத்துக்குப் பின் மூலம் தனித் தலைப்புடன் அச்சிட்டுள்ள பகுதி: நகைச் சுவைப் பகுதி. இதன் காட்சிகள் 1 முதல் 3 வரை தனியாக எண்ணிடப்பட்டுள்ளன; இவை முதன்மை நாடகத்தின் தொடர் எண்கள் அல்ல.
காட்சி 2
நகைச் சுவைப் பகுதி. · காட்சி 2
இடம்:- வயல் வெளி.
மூல ஸ்கேன் 125, 126, 127, 128
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(குடியானவர் சாப்பிடுதல், சந்தேகம் பசியோடு களைத்து உட்கார்ந்திருக்கிறான்)
கருப்பன்:- ஏண்ணே சந்தேகம்! இன்னும் சாப்பிடாம உட்கார்ந்திருக்கிறே?
சந்:- சாப்பாடு வந்தாவல்ல சாப்பிட.
(கருப்பன் முதலியோர் எழுந்து போகல்)
சந்:- (தனக்குள்) என்ன இன்னும் காணோம்? ஒரு வேளை குழம்பு வைக்க நேரமாயிட்டதோ? உம். பசி வயத்தைக் கிள்ளுதே! அட எழவு வயிறே! செத்த சும்மா இரேன். சமைக்கிறாளா? இல்ல பாஞ்சாலியம்மன்கிட்டே உட்கார்ந்து பாடுறாளா?
கரு:- (வந்து) ஏண்ணே, இன்னும் சாப்பாடு வல்லியா?
சந்:- சாப்பாடு வல்லே, சாக்காடுதான் வரப்போவது.
கரு:- உன் சம்சாரம் யாரோடவாவது பேசிக்கிட்டு இருக்குதோ?
சந்:- பக்கத்திலே கூட வீடு இல்லே. எந்த பொம்பளையோட பேசப்போற?
கரு:- பொம்பளையோடத்தான் பேசணுமா?
சந்:- என்ன சொன்னே?
கரு:- உன் சம்சாரம் ஆம்பளையோடவும் பேசுதுன்னு சொன்னேன்.
சந்:- என் சம்சாரமா? பதிவிரதையைப்பார்த்து அப்படிச் சொல்லாதேடா பாவி! நாக்கு அழுகிப் போயிடும்.
கரு:- பதிவிரதை! (சிரித்து) ஏய் சந்தேகம்! நீ என் கூட்டாளி ஆச்சேன்னு சொல்றேன். சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்றேன். உன் பொஞ்சாதிக்கும், இன்னொருத்தனுக்கும் சிநேகம்.
சந்:- ஆ! நிஜமாவா?
கரு:- ஆமாம்.
சந்:- அப்படிச் சொல்லாதேடா! அவள பாஞ்சாலியம்மன் மாதிரி நினைச்சு இருக்கேன். எப்படிப் பார்த்தாலும் அம்மன் கிட்டேயே தவங்கிடக்கிறாளேடா!
கரு:- எல்லாம் வேஷம்! நீ இளிச்சவாயன். நம்பி மோசம் போறே.
சந்:- ஏய்! உண்மையைச் சொல்லுடா. என்னாலே நம்ப முடியலியேடா!
கரு:- நம்பவேண்டாம். நீயே அவள சோதிச்சுப் பார்த்து தெரிஞ்சுக்க. உன்பேரு மாத்திரம் சந்தேகம்! உன்கிட்டே சந்தேகப்படற குணமே இல்லியே.
சந்:- இன்னிக்கு வரட்டும், சந்தேகப்பட்டுப் பார்க்கிறேன்.
கரு:- பாரு! பாரு!
(போகிறான்)
சந்:- (தனக்குள்) பதிவிரதை மாதிரி பாசாங்கு பண்ணி, என்ன ஏமாத்திட்டாளே பாவிசெருக்கி! வரட்டும் பார்க்கிறேன்.
(உட்காருகிறான். சமயோசிதம் கையில் மூடிய சட்டியுடன் வருதல். சந்தேகம் அவளை ஏற இறங்க உற்றுப்பார்க்கிறான்)
சம:- என்ன பாக்கிறீங்க?
சந்:- சந்தேகப்படறேன், சரியா நில்லு. சண்டாளி! என்ன ஏமாத்திட்டாயே!
சம:- என்ன சொல்றீங்க?
சந்:- என்ன சொல்றுங்க? ஏன் சாப்பாடு கொண்டுவர இவ்வளவு நாழி? பதில் சொல்லு. சந்தேகப்பட்டு கேக்கிறேன்.
சம:- அரிசி வேக மாட்டேன்னுட்டுது!
சந்:- ஏன்? அரிசிக்கு என்ன கோபம்? சந்தேகப்பட்டு கேக்கிறேன், சொல்லடி!
சம:- சங்கடமான சந்தேகமாயிருக்கே!
சந்:- நீ ஒரு ஆம்பளையோட பேசிக்கிட்டு இருந்தியா? சந்தேகப்பட்டு கேக்கிறேன். சொல்லு!
சம:- இருந்தேன்.
சந்:- உம்......அதானே கேட்டேன்! எப்ப பேசிக்கிட்டு இருந்தே?
சம:- காலையிலே பேசிக்கிட்டு இருந்தேன்.
சந்:- உம். அவன் பேரு?
சம:- சொல்லக்கூடாது!
சந்:- சொல்லடி கள்ளி!
சம:- உங்கபேரை நான் சொல்லலாமா?
சந்:- அதைக் கேட்கலேடி அரட்டை! வேறு ஒரு ஆம்பளை உனக்கு ஆசைநாயகன் உண்டா? இல்லையா?
சம:- ஆம்பளையா? அன்னிய ஆம்பளை முகத்தை நான் பார்த்ததே கிடையாதே...
சந்:- பசப்பாதே!... சந்தேகப்பட்டு கேக்கிறேன். பட்டுப் பட்டுன்னு பதில் சொல்லு!
சம:- உங்களுக்காகவே அல்லும் பகலும் அம்பாள்கிட்டே தவங்கிடக்கிறேன். அதிர்ஷ்டம் வரணும் வரணும்னு வேண்டிக்கிறேன். பாஞ்சாலியம்மா! பாவமான வார்த்தையெல்லாம் என் காதில் விழுதே!
சந்:- வேஷக்கார நாயே! விபசாரி!
சம:- இரண்டு பேரு முகத்தைத் தவிர நான் வேறு முகத்தைப் பார்த்ததில்லியே! ஐயோ தெய்வமே!
சந்:- இரண்டு பேரு முகமா? ஆ! ஐய்யோ! என் கொலப் பெருமையே போச்சு!
சம:- உங்கள் முகம் ஒண்ணு. அம்பாள் முகம் ஒண்ணு.
சந்:- வேடிக்கையா பேசறே? இதபாரு! உன் சங்கதி எல்லாம் தெரிஞ்சுபோச்சு, உண்மையைச் சொன்னு பிழைச்சுக்குவே. இல்ல, இந்த மரப்பட்டியாலேயே உன் மண்டையைப் பொளந்துடுவேன் (ஓங்குதல்)
சம:- ஏ பாஞ்சாலியம்மா! என் புருசன் உண்மையை சொல்லச்சொல்லுறு! நான் பதிவிரதை என்பது உண்மையானால் நான் சமைச்சிவந்த சோறு அரிசியாகவும், குழம்பு பச்ச கோழி உயிராகவும் போகக்கடவது!
(தூக்கி வீசுகிறான். அரிசி கொட்டுகிறது. கோழி பறக்கிறது)