நகைச் சுவைப் பகுதி. · காட்சி 1 / 3
முதன்மை நாடகத்துக்குப் பின் மூலம் தனித் தலைப்புடன் அச்சிட்டுள்ள பகுதி: நகைச் சுவைப் பகுதி. இதன் காட்சிகள் 1 முதல் 3 வரை தனியாக எண்ணிடப்பட்டுள்ளன; இவை முதன்மை நாடகத்தின் தொடர் எண்கள் அல்ல.
காட்சி 1
நகைச் சுவைப் பகுதி. · காட்சி 1
இடம்:- சந்தேகம் வீடு.
மூல ஸ்கேன் 119, 120, 121, 122, 123, 124, 125
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(பெரிய குதிர். கோழி, விரட்டி, அடுக்கு, ஏர்க் கலப்பை, மண்வெட்டி இருக்கின்றன. பாஞ்சாலியம்மன் சிலைக்குமுன் சமயோசிதம் பாடிக்கொண்டிருக்க, சந்தேகம் வருகிறான்)
சந்தேகம்:- சமயோசிதம்! சமயோசிதம்! என்ன சமயோசிதம் எப்பப் பார்த்தாலும் பூசையிலேயே இருக்கிறே? புருஷனோடு பேசரத்துக்கு உனக்குப் பிடிக்கலியா? நாம்ம இளந்தம்பதிகள் சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்திலே, சதா பாஞ்சாலியம்மனும் பாட்டுமா இருந்தா, நான் என்னதான் பண்றது?
சமயோசிதம்:- உங்களோட பேசிக்கிட்டே இருந்தா சரியா போச்சாக்கும்? என் மாங்கல்யத்துக்கு ஒரு கெடுதியும் வராமல் பாதுகாக்கத்தான் பாஞ்சாலி அம்மங்கிட்டே தவங்கிடக்கிறேன்.
சந்:- என்னடி! மாங்கல்யம்...கொஞ்சம் அழுத்தமான கயிறுபோட்டா ஒரு கெடுதியும் வராம பத்திரமா இருக்கு! இதுக்கா பயப்படறே?
சம:- என்னமோ, உங்களுக்குப் பரிகாசமா இருக்கு. திடீர்னு உங்களுக்கு ஏதாச்சும் ஆயிட்டா, நான் மஞ்சளிழந்து பூவிழந்து, மாங்கல்யமிழந்து தவிக்கவேண்டாமா?
சந்:- சரிதான். சரிதான்! மஞ்சளும், பூவும் போய்விடுமேன்னுதான் சஞ்சலப்படறே; நான் சாவதைப்பத்தி கவலை இல்லே?
சம:- ஐயோ! என் காதிலே ஈயத்தை காய்ச்சி ஊத்துறீங்களே! உங்க உயிருக்கு ஆபத்துன்னு என் உயிரு இந்த உடம்பிலே தங்குமா?
சந்:- வேறே உடம்பிலே பாஞ்சுடுமாக்கும்?
சம:- (அம்மனிடம்) பாஞ்சாலியம்மா! என் மாங்கல்யத்தை காப்பாத்தடி அம்மா! திரெளபதியாத்தா! என் புருஷன்தான் எனக்குச் சொத்து. நீ அஞ்சு பேருக்கு ஒரு மாங்கல்யம் போட்டிருந்தே. அழியாத பத்தினி! நான் ஒருத்தருக்கு ஒரு மாங்கல்யம் போட்டிருக்கேன். என் மாங்கல்யத்துக்கு ஒரு கொறவும் வராமல் காப்பாத்தடி.
சந்:- மாங்கல்யம் மாங்கல்யம்னு உயிரை விடு. என் மனசுக்குச் சந்தோஷமா ஒரு வார்த்தை பேசறியா? காலையிலே எழுந்திருக்கிறேன், கஞ்சியை குடிக்கிறேன் வயலுக்குப் போயி வெய்யிலே காயறேன். அந்திசாஞ்சிவர்றேன். அகப்பட்டதைத் திங்கிறேன். நீ பூசை பண்ண ஆரம்பிச்சுடறே. உன் பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கறேன். அப்புறம் பொழுது விடியறதுதான் தெரியுது. ஒரு நாளைக்கு என்னோடு சிரிச்சுப் பேசி சிங்காரமா விளையாடி சந்தோஷப் படுத்துறியா? உம்! மழையில்லாம வெடிச்சுப்போய்க் கிடக்கிற வயலும் சரி. என் வாழ்க்கையும் சரி! உனக்குக் கட்டின தாலியை ஒரு மரத்துக் கிளையிலே மாட்டி வைக்கலாம்.
சம:- இந்தா பாருங்க, இதெல்லாம் பேசாதீங்க! நான் சாவித்திரி ஆகப்போறேன்.
சந்:- என்ன! சாவித்திரி ஆகப்போறியா? இதென்னடி வம்பு?
சம:- ஆமாம் சத்தியவான் உயிரை, சாவித்திரி யமன் கையிலேருந்து வாங்கினதுமாதிரி, நீங்க செத்துப்போனாலும், உங்க உயிரை யமன்கிட்டேருந்து வாங்கப் போறேன்.
சந்:- ஆ!...(சந்தோஷம்)
சம:- அதுக்காகத்தான், அம்மாகிட்டே தவம்பண்ணி வரம் கேக்கறேன்.
சந்:- ஏய் சமயோசிதம்! நீ உயிர் வாங்கற வரத்தைப் பரிசோதிச்சுப் பாக்கிறேன்னு, என்னை சாகடிச்சுப் பாத்துடாதே!
சம:- நான் சாவித்திரி மாதிரி சக்தி அடையற வரைக்கும், இப்படிப் பூசை பண்ணிக்கிட்டுத்தான் இருப்பேன்.
சந்:- வேணும்னு. நானாவது உன்னை இனிமேல் சாவித்திரின்னு கூப்பிடறேன். இந்தப் பூசையை விட்டுடு!
சம:- சரி ஆகட்டும், நீங்க வயலுக்குப் போங்க, நேரமாவது.
சந்:- எங்கே...என்கிட்டே ஒருதரம் கொஞ்சு! உம்! கொஞ்சடி! கொஞ்சமாட்டியா?
சம:- போங்க...என் பிராணநாதா!
சந்:- ஆருயிரே! ஆலம்பழமே! ஆக! ஆக!! இந்த ஆசை வார்த்தைகளென்ன இந்திரலோகத்துக்கே இட்டுக்கிட்டுப் போகுதே!
சம:- உம், போதும்! வயலுக்குப் புறப்படுங்க.
[ஏர் கலப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டவன், திரும்பி கோழியைக் கையில் எடுத்து]
சந்:- சமயோசிதம்! இன்னைக்கு கோழிக்கறி சமையல்! தெரியுமா? சீக்கிரம் சமையலை முடிச்சு வயலுக்கு சாப்பாட்டை எடுத்துக்கிட்டு வா!
சம:- பாவம்! ஒரு கோழிதானே மிச்சமிருக்கு!
சந்:- இருந்தா என்ன? வேறே வாங்கிக்கலாம். சீக்கிரம் வேலையைப்பாரு! (கோழியிடம்) ஏ கோழியே! இன்னைக்கு நீ
சாகப்போகிறாய்! இந்த ஏழந்தம்பதிகள் வயிற்றுக்குள் போகப் போகிறாய்! என் பிராணநாயகியே! வரட்டுமா?
[நிற்கிறான். அவள் பாஞ்சாலியம்மனிடம் பூசை செய்வதுபோல் பாட்டு ஆரம்பிக்கிறாள்]
சந்:- (தனக்குள்) ஆக! என்ன கற்பு, என்ன கற்பு! பெரிய பெரிய ரிஷிபத்தினியெல்லாம், கற்பு விஷயத்திலே இவகிட்டே பிச்சை வாங்கணும்!
(போகிறான்)
சம:- அப்பாடா! தொலைஞ்சது பீடை! இதோட அழுக்கு நான் இதோட கொஞ்சிக்கிட்டே இருக்கணுமாம். நல்லவேளை, இந்தப் பாஞ்சாலியம்மனும், இந்தக் குதிரும் இல்லன்னு...
“நம்ப தப்பிக்கவே முடியாது”
(என்று சொல்லிக்கொண்டே குதிருக்குள்ளிருந்து புறப்படுகிறான் அதிர்ஷ்டம்)
சம:- பாவம்! ராத்திரியெல்லாம் ரொம்பக் கஷ்டமா இருந்திருக்குமே?
அதிர்ஷ்டம்:- இல்ல, இல்ல. குளிர்காலம் பாரு, ரொம்ப அடக்கமாயிருந்தது. ஆமாம், உன் புருஷன் ஊருக்குப் போயிருக்கானே, அர்த்தராத்திரியிலே வந்துட்டானே. ஏன் வந்தான்?
சம:- என்னை விட்டுத்தான் அவருக்குப் பிரிஞ்சு இருக்கவே முடியாதே. அதான் உடனே ஓடியாந்துட்டாரு.
அதி:- குதிருக்குள்ளே ஒரு பெருச்சாளி, அது என்கிட்டே காதல் பண்ண வந்துட்டுது... பாரேன். பாதி தலைமயிரைக் கத்திரிச்சுக்கிட்டு போய்ட்டுது!
சம:- உங்களாலே எனக்கு எவ்வளவு கஷ்டம் பார்த்தீங்களா?
அதி:- காதல் பாதை கஷ்டமாகத்தான் இருக்கும். இந்த சிங்காரிக்காக, நான் இந்தச் சிறையிலே கிடந்தேனே, இதை விட ஒரு கஷ்டம் இருக்கா?
சம:- ஆம, உங்களைப் பார்த்தோடனே என் கஷ்டமெல்லாம் ஓடிப்போவது.
அதி:- உன் கஷ்டம் ஓடுது. உன்னைப் பார்த்ததும் என் கஷ்டம் பறக்குது.
சம:- நம்ப ரெண்டு பேரும்...
அதி:- கரும்பும் எறும்பும் போல-இரும்பும் துரும்பும் போல வாழுவோம்.
சம:- விஷயம் வெளிச்சமாயிட்டா?
அதி:- வேற ஊருக்கு ஓடுவோம்.
சம:- அதான் முடியாது. என் புருஷன் பொல்லாதவன். வந்து கொலையே பண்ணிடுவான்.
அதி:- கொல்!... நம்மைக் கொல்லும். நம்முடைய பரிசுத்தமான காதலைக் கொல்லுமா? பிறகு சொர்க்கலோகத்திலே சென்று, நாம் சுகமாக வாழலாம். பயப்படாதே!
சம:- அவரும் தற்கொலை பண்ணிக்கிட்டு சொர்க்கலோகம் வந்தா?
அதி:- வரமுடியாது. கொலைபாதகம் செய்தவன் நரகத்திற்குத்தான் போவான், கள்ளமற்ற காதலராகிய நாம், சொர்க்கத்தில் சொக்கிக் கிடக்கலாம்.
சம:- உங்களை ஆசை நாயகராக அடைஞ்ச என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்.
அதி:- என் பேரே அதிர்ஷ்டந்தானே!
(இருவரும் பாட்டு, மெய்மறந்த நிலை)
சம:- (திடுக்கிட்டெழுந்து) ஐயோ! சமைக்கறதுக்கு மறந்துட்டேனே, சூரியன் கூட மேற்கே சாஞ்சுட்டுதே!
அதி:- இந்த லோகத்திலே பசிவேறையா தெரியுது!
சம:- நமக்குத் தெரியலே! வயலில் கிடக்கிற என் புருஷன்...இந்நேரம் துடிச்சுடுவானே!
அதி:- புருஷன் மேலே அவ்வளவு கவலை இருக்கா?
சம:- கவலை ஒண்ணுமில்லே! பயந்தான்! பசி வந்தா அவன் ராட்சசன் மாதிரிதான்! இதுலே வேறே கோழிக்கறி ஆக்கிக்கிட்டு வரச்சொன்னான்.
அதி:- சரி! இனிமே என்ன செய்யப்போறே? ஒரு மாதிரியா ராத்திரிக்குவந்து சாப்பிடுறேன்.
சம:- ஐயோ! கொலை பண்ணிடுவான்! (யோசித்து) உம். ஒரு வேலை செய்றேன்.
அதி:- நீ இப்ப சமைச்சுக்கிட்டுப் போனாலும், நாழி ஆயிட்டு துன்னு நாலு போட்டுத்தான் போறான்.
சம:- பேசாம இருங்க சொல்றேன்.
(ஒரு கலயத்தில் அரிசியை எடுத்துக் கொட்டிக் கொண்டு, ஒரு சட்டியில் கோழியை வைத்து மற்றொரு சட்டியால் மூடிக்கொள்கிறாள்)
அதி:- இது என்ன வெறும் அரிசியை கொட்டறே?...உயிர்க் கோழியைக் கவுக்கறே?
சம:- அப்புறம் சொல்றேன். (புறப்படுதல்)
அதி:- அப்ப நான் போகட்டுமா? விபீஷணருக்குப் பெண் தேடப் புறப்படணும்.
சம:- நாளைக்கு...?
அதி:- வர்றேன். எலும்புத்துண்டை நாய் மறக்குமா?
(திரும்பிப் பார்த்தவண்ணம் போகிறான்)