பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 30 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 30

காட்சி 30

இடம்:- குமரியின் படுக்கை.

மூல ஸ்கேன் 117, 118

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(மகாவீரர், வைத்தியர் நிற்கின்றனர். குமரி மார்பில் பெரிய கட்டோடு திணறிக்கொண்டு படுத்திருக்கிறாள். பக்கத்தில் சித்ராவும், பொன்னியும் இருக்கிறார்கள். புத்தன் வருகிறான். ஆதரவோடு அவளை எடுத்து மடியில் கிடத்தி)

புத்:- குமரி! குமரி!

(கண் விழித்து)

குமரி:- அத்தான்! உங்கள் நெஞ்சில் எனக்கு இடமில்லா விட்டாலும், மடியிலாவது கிடைத்ததே!

புத்:- இந்நாட்டு தமிழர் இதயமெல்லாம் இடம் பெற்று விட்டாய். குமரி! நீ சாகாதவள். என்னை மன்னித்துவிடு. உன் காதலைக் கொலைசெய்த குற்றம் என்னை விடாது.

குமரி:- இதோ. நான் அனுபவிக்கும் இன்பம், உங்கள் குற்றத்தையெல்லாம் பொசுக்கிவிடும். அணையப்போகும் விளக்கின் பெருஞ்சோதியல்லவா இந்த இன்பம்!

புத்:- குமரி!

குமரி:- அத்தான்! எங்கே...உங்கள் உள்ளத்தில் நான் இடம் பெற்றேனென்பதற்கு அடையாளம்? ஆசை முத்தம்... ஆம். ஒரு முத்தம்! ஒரே முத்தம்! நான் பிணமாவதற்குள் ...

புத்:- குமரி! இன்பபுரியின் வரலாற்றில் அழிக்கமுடியாத இடம் பெற்றாய். மக்கள் மனத்தில் மறைக்க முடியாத இடம் பெற்றாய். என் கல்நெஞ்சைக் கரைத்து, என் வாழ்வுக்கே ஒளி தந்த காதல் விளக்காகி, என் ரத்த ஓட்டத்தோடு கலந்து என் இதயப்பெட்டியில் இடம் பெற்றாய். இதோ..... அதன் அடையாளம்........

(முத்தமிடக் குனிவதற்குள், நிமிர் காட்டி)

ஒலி:- “ஒரே முத்தம்”

(அதையொட்டி மெதுவாக எழுகிறது. “சமாதி” அதைச் சுற்றி வருகிறார்கள். நிழல் மாறுகிறது. குமரியின் சமாதிக்கு இளவரசனும், பொன்னியும் மாலையிடுதல். இசைப்பாடல்)

தியாகப் பெருவிளக்கே தீந்தமிழ்ப் பெண்ணமுதே!

காதல் சுவைத்தறியாக் கன்னித் திருமகளே!

சாதிமதம் செய்துவிட்ட நீதிப்பிழை மாற்றிடவோ

நல்லுயிரை இழந்தாயே? நானிலத்தை மறந்தாயே?