காட்சி 29 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 29
காட்சி 29
இடம்:- அரண்மனை நந்தவனம்.
மூல ஸ்கேன் 112, 113, 114, 115, 116, 117
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(பாடிக்கொண்டே, பெளத்த பிக்ஷுணியாகச் சித்ரா போகிறாள். இளவரசரும், பொன்னியும் வருதல் குறுக்கிட்ட புத்தன்)
புத்த:- சித்ராதேவி! இதென்ன கோலம்?
சித்:- ஆசைக் காதலனைக் காட்டிக்கொடுத்தவளின் அலங்கோலம். தாய் நாட்டுக்காகப் பதிபக்தியைத் தியாகம் செய்தவளின் தவக்கோலம்.
புத்த:- நீங்கள் எங்கும் போகவேண்டாம். அரண்மனையிலேயே சுகமாயிருக்கலாம்.
சித்:- சுகம்! என் சுகத்திற்காகக் கவலைப்பட்டவரின் சுகத்தையே அழித்தேன். இனிமேலா எனக்குச் சுகம்? இனி, இந்த வாழ்க்கையில்தான் சுகம்.
புத்த:- கவலைப்படாதீர்கள். கணவனைக் காட்டிக்கொடுத்த நேரத்தில், இந்த நாட்டைக் காப்பாற்றினீர்கள். ஒரு விபீஷணன் உங்களைச் சபிப்பான். இன்பபுரியின் எதிர்காலச் சந்ததிகள் உங்களை வாழ்த்தும்.
சித்:- இளவரசே! பெண்கள் சமுதாயம் “புருஷனைக் காட்டிக்கொடுத்தவள், காட்டிக் கொடுத்தவள்” என்று தலைமுறை தலைமுறையாக என்னைத் தூற்றும். அதற்கு இதுதான் பிராயச்சித்தம்.
புத்த:- அப்படியானால் தலைநகரிலேயே நீங்கள் தங்குவதற்கு, ஒரு இடம் அமைத்துத் தருகிறேன்.
சித்:- சந்நியாசி வேஷத்தில் ஊரை ஏய்ப்பவர்களுக்கெல்லாம் உட்கார்ந்துகொள்ள ஒரு இடம் வேண்டும்! என் மன ஆசைகள் குமுறிக்கொண்டிருக்கும் வரையில், இப்படி அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன். இளவரசே! ஒரு வேண்டுதல். உங்கள் இருவரையும் ஒன்று சேர்க்க ஓயாது கஷ்டப்பட்டவள் குமரி, அவள் மரணப் படுக்கையில் கிடக்கிறாள். அவளை மறந்து விடாதீர்கள்.
(பாடிக்கொண்டே செல்கிறாள்)
பொன்:- அன்பா! மன்னருக்கு நம் காதல் பிடிக்கவேயில்ல, என்ன இருந்தாலும் நான் பறைச்சியல்லவா?
புத்த:- சிப்பியில் முத்து, அதை மகுடத்தில் வைப்பார். சேற்றில் செந்தாமரை, அதன் அழகை ரசிப்பார். ஆனால், மனித குலத்திலேயே பிறந்த உன்னை வெறுக்கிறார். பொன்னி! உலகமே எதிர்த்தாலும் நம்மைப் பிரிக்க முடியாது.
பொன்:- நம்மை ஒன்றுசேர்க்க, சித்ரா கணவன் இழந்தாள், குமரி...காதல் இழந்தாள்.
(மகாவீர மன்னர் வருதல்)
புத்த:- (தனக்குள் சோகமாக) உயிரையும் இழந்துவிடுவாள் போலிருக்கிறது......குமரி....கொய்யாக்கனி! சாவு அவளைக் கொய்துவிடும் போலிருக்கிறது.
மகாவீ:- (பிரவேசித்து) புத்தா! இந்நாட்டு மன்னன் என்ற முறையில் உன்னிடம் ஒன்று கூறவேண்டும்.
(பொன்னி மறைந்துவிடல்)
புத்த:- அரசே!
மகாவீ:- நீ அரச குடும்பத்தில் பிறந்தவன். வேற்று நாட்டு வேந்தர்களின் போற்றுதலுக்கு ஆளாக வேண்டியவன். இந்த நிலையில் நீ.....பொன்னியைக் காதலிப்பது பொருத்தமாகத் தெரியவில்லை.
புத்த:- பாதாளத்தைக் குடைந்து, படாத பாடுபட்டு, பசும் பொன்னெடுத்தவன் பார்த்து, அதை வீசி எறிந்துவிட்டு அப்பனே என்பதுபோல் இருக்கிறது உங்கள் பேச்சு.
மகாவீ:- உன் தந்தை என்ற முறையில் நான் இதை ஆமோதிக்கிறேன். மன்னன் என்ற முறையில் சட்ட ரீதியாக உங்கள் காதல் செல்லாது என்கிறேன்.
புத்:- ஒரே பிரச்சினை. அதற்கு இரண்டு முறை. தந்தையே! சட்டம், நியாயம் இரண்டுக்கும் தொடர்பு இருப்பதுதானே ஆட்சி?
மகா:- உனக்காகச் சட்டத்தை மாற்றியமைப்பதை, சுய நலம் என்று உலகம் சொல்லும்.
புத்:- இல்லை. என் காதல், சமத்துவப் பாதைக்கு ஒரு கைகாட்டியாக அமையும். உளுத்துப்போன வழக்கங்களைக் கட்டியாளும் உலகத்தினருக்கு ஒரு உயர்ந்த வழி வகுக்கும்.
மகா:- நீ விரும்புகிற கலப்புமணம் உன் மகுடத்திற்குத் தடையாக நிற்கும். நாட்டை ஆளவேண்டியவன் நீ! கேவலம், ஒரு பெண்ணுக்காக முடி இழப்பதா?
புத்:- முடி! காதல் சுதந்திரம் பெறமுடியாத எனக்கு ஏன் முடி? அரசே! இதை என் தன்னலம் என்பீர்கள். இல்லை! ஒரு பெண்ணைத் தவிக்க விட்டுவிட்டு இந்தப் பேரரசுக்கு முடிசூட்டிக் கொள்வதுதான் தன்னலம். சிம்மாசனத்திற்காக என் சிந்தையில் குடியேறியவளை விலக்கினால், இந்த உலகம் உள்ளளவும் தூற்றும்.
மகா:- அப்படியானால்...?
புத்:- காதலுக்காக...மகுடத்தை தியாகம் செய்கிறேன்.
மகா:- யோசித்துப் பார். மக்களுக்காக உழைக்கிறேன் என்ற உன் கொள்கை, ஒருமங்கைக்காகத் தவிடுபொடியாகிறது.
புத்:- மன்னனை இருந்துதான் மக்கள் தொண்டு ஆற்ற வேண்டுமென்று சட்டமில்லை. ஒரு கூலிக்காரனாக இருந்துகூட அந்த வேலை செய்யமுடியும்.
மகா:- அப்படியானால் மகுடமிழக்க மனந்துணிந்து விட்டாயா?
புத்:- ஆம்.
மகா:- புத்தா! (கெஞ்சி) உன்னை நம்பி வாழ்ந்தேன். நீ ஏமாற்றி விட்டாய், இந்த நாட்டாட்சியை யாரிடம் கொடுப்பேன்?
புத்:- மக்களிடத்தில் கொடுங்களப்பா! உங்கள் அவசரத் தீர்ப்பின்படி அன்று நான் அழிந்திருந்தால்?
மகா:- நீயே ஒரு வழி சொல். பிறநாட்டு வேந்தர் நம்மை வெறுக்காத வழி சொல்!
புத்:- தந்தையே! இந்த ஆட்சியை என்னிடம் கொடுத்தால்கூட நான் அரசனாக இருந்து ஆளமாட்டேன். மக்களாட்சியாக மாற்றுவேன். மக்களின் பிரதிநிதியாக இருந்து பணி செய்வேன். மன்னராட்சியை ஒழிப்பேன்.
மகா:- மக்களாட்சியிலும் மண்டைகர்வம் பிடித்தவர்கள், மமதைக்காரர்கள், அதிகாரங்களை அள்ளி வீசுவார்கள்! மன்னராட்சியே போதும் என்று மக்கள் நினைக்குமளவுக்குக் கொடுமைகளைக் கொட்டும் கோராட்சியாக மக்களாட்சி அமைந்தால்...?
புத்:- மாற்றி அமைக்கும் அதிகாரம் மக்கள் கையில். அக்கிரமம் செய்பவர் ஆண்டுவேரோடு பிடுங்கி எறியப்படுவார்கள்.
மகா:- என்ன இருந்தாலும்...
புத்:- மகுடப் பைத்தியம் உங்களை விடவில்லை. அப்பா! சாகும்வரை நீங்களே மன்னராக இருங்கள்.
மகா:- அதன் பிறகு நீ...?
புத்:- நான் மக்களோடு கலந்து வாழப்போகிறேன். மக்களுக்காகத் தொண்டு செய்யப் போகிறேன். மக்களின் மனமயக்கத்தை ஒழிக்கும் வரையில் எனக்கு ஓய்வு கிடையாது.
மகா:- என் காலத்திற்குப் பிறகு நாடு?
புத்:- நாசமாகி விடாது. கவலைப்படாதீர்கள். நல்லதொரு மக்களாட்சி மலரும். அந்த மலர்ச்சி கருகிவிடாமலிருக்க...... நான் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துகிறேன்.
மகா:- மைந்தா! உன் தியாக புத்தி இந்த உலகிற்கே ஒரு உதாரணம்.
(காவலாளி வந்து)
காவ:- மன்னர் மன்ன! குமரிதேவிக்கு ரொம்ப ஆபத்தாயிருக்கிறது, கூப்பிடருங்க.
புத்:- ஆ!...
(பரபரப்போடு புறப்படுகிறார்கள்)