பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 28 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 28

காட்சி 28

இடம்:- தூக்குமேடை.

மூல ஸ்கேன் 106, 107, 108, 109, 110, 111, 112

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(மக்களை சிப்பாய்கள் தடுத்து ஆவலை அதிகப் படுத்துகிறார்கள். ஒரே பரபரப்பு. கூச்சல் தூக்கு மேடையில் மூவரும்)

புத்த:- அமைதியாயிருங்கள். நான் சாகும்போது உங்கள் அமைதியையாவது காண்கிறேன். (கூட்டத்தில் ஒருவன்) இளைய மகாராஜா! இந்த அநியாயத்தை நாங்கள் காணவேண்டுமா?

புத்த:- காணவேண்டாம். போய்விடுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் சாகப்போகும் நாங்கள், இந்தக் குழப்பத்தால் இப்பொழுதே செத்துவிடுவோம். உங்கள் ஆத்திரத்தால் எங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது உங்கள் அனுதாபத்தால் எங்கள் லட்சியத்தைப் பூர்த்தி செய்யுங்கள். பேதமற்ற பெருவாழ்வு சீமான், ஏழை என்ற நிலை ஒழிந்த சிங்கார வாழ்வு; சமத்துவ வாழ்வு. சமாதான வாழ்வு, இதற்காக அடிகோலினோம். அழியப்போகிறோம், இதோ ஒரு தீண்டத்தகாதவன்; சாதி கெட்டவன்; அவளும் நானும் ஒன்றாக உயிர் விடுகிறோம். எங்கள் பிணங்களைக் கண்ட பிறகாவது சாதி உணர்ச்சி ஒழியட்டும். எதிர்காலத்தில் எங்கள் கல்லறைகளின்மீது சாதி உணர்ச்சி ஒழியட்டும். எதிர் காலத்தில் எங்கள் கல்லறைகளின் மீது சாதியை விரட்டிய சமரசக் காதலர்கள் சாந்திகீதம் பாடட்டும்.

(ஒரே அமைதி)

சேதி:- இளவரசே! கடைசியாக சொல்லவேண்டியது.

புத்த:- எதை......? யாருக்குச் சொல்லப் போகிறேன்! என் நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டேன். ஏ! தூக்குமேடையே! நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு மரணதண்டனை பெற்ற எத்தனையோ துரோகிகளின் பிணங்களை

முத்தமிட்டிருக்கிறாய். இன்றைக்கு இந்த நிரபராதிகளின் பிணங்களுக்கும் பஞ்சணையாகப் போகிறாய்! சதி செய்தவர்கள்-கொலை புரிந்தவர்கள்-ராஜத்துரோகிகள் இத்தனை பேரையும் கழுத்தை நெறித்திருக்கிறாய். இன்றைக்கு எங்களையும் கட்டித் தழுவப் போகிறாய். கோரமான குற்றவாளிகளின் உன் கோரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறாய். இந்நாட்டில் கொந்தளிப்பை ஒழிக்கப் புறப்பட்ட எங்களையும் சுவை பார்க்கப் போகிறாய். சுவைத்துப் பார்! எங்கள் ரத்தத்தில் துரோக உணர்ச்சி இருக்கிறதா என்று சுவைத்துப்பார்! எங்கள் இருதயத்தில் சதியாலோசனை தேங்கியிருக்கிறதா என்று சுவைத்துப்பார்! எங்கள் எலும்புக் கூட்டில் சூழ்ச்சி எண்ணம் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்று சுவைத்துப்பார்!!

சேதி:- (யாளித்தத்தரிடம்) நீங்கள் ஏதாவது?

யாளி:- இளவரசரோடு சாகிறேனே என்ற பெருமை. மகாராஜாவின் தீர்ப்புக்கேற்ப மடிகிறேனே என்ற திருப்தி என் நாட்டு தமிழர் முன்னிலையில் என் உயிர் விடை பெறுகிறதே என்ற ஆறுதல் சேதியாரே! சாவற்குமுன் ஒரு வேண்டுகோள். இளவரசருக்குமுன் நான் சாகவேண்டும். அந்த உத்தமரின் உயிர் தூக்குமரத்தில் துடிப்பதை நான் காணமாட்டேன். வாகை மாலை சூடவேண்டிய அவர் கழுத்தில் சாவுக்கயிறு இறுக்கப்படுவதை நான் காணமாட்டேன். சிம்மாசனத்தில் அமர வேண்டிய இவர் பொன்மேனி சவமாக இந்த மண்ணில் சாயும் கோரத்தை நான் காணமாட்டேன். நானே முதலில் சாகிறேன்.

பொன்:- நானே முதலில் சாகிறேன். இளவரசரைத் தூக்குமேடையில் நிறுத்தியது நான்! நாணில்லாவிட்டால் இந்த நாட்டுக்கே இந்த நாசம் வந்திருக்காது. என்னுடைய காதல், இளவரசரின் பலிபீடம். நான் ஒருத்தி நாட்டில் பிறந்தேன். ஆம்! இந்த நாட்டையே அழிக்கப் பிறந்தேன். நானே முதலில் சாகிறேன்.

"யாரும் சாகவேண்டியதில்லை"

(என்ற குரல்கேட்டு எல்லோரும் திரும்புதல். குமரி பிரவேசித்தல். எதிர்ப்புறத்தில் மகாவீரர், விபீஷணர் பிரவேசித்தல்)

குமரி:- நிறுத்துங்கள். அவர்களைத் தொடாதீர்கள்.

மகாவீ:- ஏன் நிறுத்தவேண்டும்? குமரி! நீயும் வீணாய் சாகாதே!

விபீஷ:- புரட்சியின் தலைவி, மகாராஜா! இதுவும் ஒருவகையில் ராஜத்துரோகம்.

குமரி:- ராஜத்துரோகம்! மகாராஜாவுக்குத் தன் மகனிடத்திலிருந்த மாறாத அன்பு உள்ளத்தை அறுத்தெறிந்துவிட்டு, ஆளப்பிறந்தவருக்குத் துரோகி என்ற பட்டம் சூட்டி, தூக்கு மேடையில் நிறுத்திவிட்டு, இன்பபுரியின் நீதியையே கொலை செய்யத் துணிந்தீரே! அது கலப்பில்லாத ராஜபக்தி!-நான் செய்வது ராஜத்துரோகம். அப்படித்தானே?

விபீஷ:- குமரி! கொலைக்களத்தில் கூக்குரலிட உன்னை யாரும் கூப்பிடவில்லை. அரசர் பெருமானுக்குத் தெரியாத நீதியை எடுத்துரைக்க உன்னை யாரும் அழைக்கவில்லை.

குமரி:- யாரும் என்னை அழைக்கவேண்டியதில்லை. இது நான் ராஜகுடும்பத்திற்குச் செய்யவேண்டிய கடமை! நாட்டுக்குச் செய்யவேண்டிய வேலை! இளவரசருக்காகச் செய்யவேண்டிய தியாகம்.

விபீஷ:- காமவெறிக்காகச் செய்யவேண்டிய சாகசம் என்று கூறு, பொருத்தமாயிருக்கும். (அரசிடம்) மகாராஜா! நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பயங்கரமானது குமரி ஏதோ முன்னேற்பாட்டோடு வந்திருக்கிறாள். தாமதித்தால் புரட்சி நடக்கும். உடனே மாளிகைக்குப் புறப்படுங்கள்.

மகாவீ:- (கொலையாளிகளிடம்) உம். நடக்கட்டும். (மரளி கையை நோக்கித் திரும்பல்)

குமரி:- அரசே! கொஞ்சம் பொறுங்கள். இளவரசர் நிரபராதி என்பதை நிரூபிக்கிறேன்.

மகாவீ:- அவன் ஒரு நீசன் என்பதைப் பொன்னியின் காதலும், ஒரு துரோகி என்பதை விபீஷணரிடமிருந்த கடிதங்களும், நிரூபித்துவிட்டன.

குமரி:- மகன் என்ற வாஞ்சைகூட இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட்டதே.

மகாவீ:- நான் நீதி தவறாதவன்.

குமரி:- ஆனால் அவசரக்காரர்.

விபீஷ:- உம். நடக்கட்டும்.

("நிறுத்துங்கள்" என்ற ஒலியுடன் சித்ராவின் பிரவேசம்)

விபீஷ:- சித்ரா! இங்கே வந்தாய்?

சித்:- கணவனுக்குத் துரோகம் செய்ய, நாட்டுக்கு நன்மை செய்ய!

விபீஷ:- சித்ரா!

சித்:- அன்பாக அழைக்கவேண்டாம். நான் உங்கள் எதிரி. இந்தச் சதி வேலைகள் உங்கள் சுயநலத்தின் அளவோடு இருந்தால்-சித்ரா உங்களுக்குப் பகையாக வந்திருக்க மாட்டாள். உங்கள் பயங்கர எண்ணத்திற்குப் பட்டத்து இளவரசர் பலியாவது, அதை நான் அனுமதிப்பது, நாட்டுக்குச் செய்யும் பாவமல்லவா?

மகாவீ:- என்ன? என்ன?

விபீஷ:- ஒன்றுமில்லை மகாராஜா! ஏதோ மாயாஜாலம். என் மனைவியையும் மயக்கிவிட்டார்கள்.

சித்:- என்னை யாரும் மயக்கவில்லை. நிதானத்தோடுதான் பேசுகிறேன். இளவரசர் நிரபராதி!

மகாவீ:- எப்படி?

சித்:- இன்பபுரியைக் கைப்பற்ற என் கணவர் எழுதிய சதிக் கடிதங்கள். (அவரிடம் நீட்டி) இவைகளை முன்பு ஒருமுறை இளவரசர் கைப்பற்றி, மீண்டும் இழந்தார். அவைகளே இந்தக் கடிதங்கள்.

(மகாவீரர் வாங்கிப் படித்தல்)

விபீஷ:- அரசே! என்னவோ மாயம் நடக்கிறது. நீங்கள் நம்பாதீர்கள்.

மகாவீ:- (படித்து முடித்து) நான் நம்புவதா? விபீஷணரே! பயப்படாதீர். நீதி தவறி நடக்கமாட்டேன். நீர் செய்த உதவிக்குத் தகுந்த பரிசு அளிக்கப் போகிறேன்.

விபீஷ:- (மகிழ்ந்து) பரிசு எனக்குப் பெரிதல்ல. நாடுதான் பெரிது.

மகாவீ:- அப்படிச் சொல்லாதீர். இது நான் தரும் பரிசல்ல. இந்நாட்டுச் சட்டம் தரும் பரிசு.

விபீஷ:- சட்டமா?

மகாவீ:- இளவரசன் ஸ்தானத்தை உமக்கு அளிக்கப் போகிறேன்.

விபீஷ:- (இளித்தபடி) இளவரசர் ஸ்தானமா?

மகாவீ:- ஆம். இந்த ஸ்தானம். (தூக்குமேடையைக் காட்ட, விபீஷணன் திகைக்கிறான்)

மகா:- திகைக்காதீர்! மாணிக்கக் கோட்டை காவலன், மாதவன் எழுதிய கடிதம் பாரும். “மன்னனைச் சாய்த்து மணி முடியை விபீஷணர் தலையில் வைக்காத வரையில், மாதவன் தூங்கமாட்டான்.” இதோ படையெடுக்கத் தயாரித்த படம். விபீஷணரே! நல்ல முயற்சிகள்.

விபீஷ:- இவை பொய்க் கடிதங்கள் மகாராஜா!

சித்:- இல்லை. இளவரசர், யாளித்தத்தர், பொன்னி, மூவரையும் சூழ்ச்சியாக வரவழைத்துத் துணில் கட்டி, ஒருவரைக் கொல்வதாக ஒருவருக்கு பயங்காட்டி, தயாரித்த, உங்கள் கடிதங்கள்தான் பொய்!

விபீஷ:- இதெல்லாம் என்ன மாயை?

மகாவீ:- துரோகி! பாம்பைப்போல் நெளிந்து, என் பரம்பரையைப் பாழாக்கப் பார்த்தாய். நாளை உனக்கும், உன் கூட்டாளிகள் மாதவன், எல்லப்பன், மற்றவர்களுக்கும் விசாரணை. புத்தா! என்னை மன்னித்துவிடு.

[தழுவிக் கொள்கிறார்]

புத்:- மக்கள் உங்களை மன்னிப்பார்கள்.

மக்கள்:- இளவரசர் வாழ்க! மகாராஜா வாழ்க!

மகாவீ:- சித்ரா! நாட்டுக்காக நீ செய்த தியாகத்தை, இன்பபுரி உள்ளளவும் மறக்காது.

விபீஷ:- தியாகம்! இல்லை, இளவரசன்மேல் உள்ள மோகம். சண்டாளி செய்த சதிக்குப்பெயர் தியாகம். ஆசை நாயகனுக்காகச் சொந்த நாயகனைக் காட்டிக்கொடுத்த சூனியக்காரியின் சூழ்ச்சிக்குப்பெயர் தியாகம்!

[சித்ராவின் கண்களில் நீர்]

மகாவீ:- உம். இந்த விபீஷணனுக்கு விலங்கிடுங்கள்!

(விலங்கிட வந்த காவலர்களின் கட்டாரியை இழுத்து விபீஷணன், அது இளவரசன்மேல் பாய்வதற்குள், குமரி குறுக்கிட்டுத் தன் மார்பில் தாங்குகிறாள்; காவலர் அவனை இழுத்து நிறுத்துகின்றனர்)

மகாவீ:- இந்தப் பழிகாரனை இப்பொழுதே பலியிடுங்கள்.

(விபீஷணன் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டு குமரியைப் பொன்னியும், சித்ராவும் வாரி எடுக்கிறார்கள்)

மகாவீ:- எங்கே அரண்மனை வைத்தியர்?

(கூட்டத்திற்குள் இருந்த வைத்தியர் வெளிப்பட்டு)

வைத்:- இதோ, இருக்கேனுங்க.

மகாவீ:- வைத்தியரே! குமரி பிழைக்கவேண்டும். அவசர சிகிச்சை தேவை. கொண்டு செல்லுங்கள் அரண்மனைக்கு.

(குமரி எடுத்துச் செல்லப்படுகிறாள். கூட்டம் கலைகிறது)