காட்சி 26 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 26
காட்சி 26
இடம்:- மகாவீரர் தர்பார்.
மூல ஸ்கேன் 100, 101, 102, 103, 104
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(ஒரு தமிழ்ப் புலவர் பாடுகிறார். அவருக்கு பரிசு அளிக்கப்படுகிறது)
மகா வீ:- வாழ்க தமிழ்ப்புலவரே! உணர்ச்சி பொங்கும் உமது கவிதையில், தமிழின் வீரம் தெரிகிறது. தேன் நடை ததும்பும் உமது கவிதையில் தமிழின் இனிமை தெரிகிறது. இந்தக் கவிதை தமிழன்னைக்குப் புதுமாலை! இந்த மரகதமாலை, தமிழ் வளர்க்கும் தங்கள் தடந்தோள்களை அலங்கரிக்கட்டும். தமிழர்க்குப் புதுவாழ்வு தரத் தங்கள் கவிதைகள் பேராறுகளாகப் பெருகட்டும். வாழ்க தமிழ்!
ஒருவன்:- தமிழ்
மற்றவன்:- வாழ்க!
ஒரு:- உலகத்தோடு பிறந்த தமிழ்.
மற்:- வாழ்க!
ஒரு:- இமயங்கொண்ட இளந்தமிழ்.
மற்:- வாழ்க!
(முழக்கம் முடிவதற்குள், மூன்று கருப்பு முக்காடு போட்டவர்களை இழுத்துக்கொண்டு, விபீஷணன் பிரவேசிக்கிறான்)
விபீஷ:- வாழ்க மகாராஜா! இன்பபுரி சாம்ராஜ்ய மகாராஜாவுக்கு வணக்கம். வாழ்க! வாழ்க!
மகா வீ:- விபீஷணர் வருக! வருக! விபீஷணரே! இவர்கள் யார்?
விபீஷ:- இவர்கள் ராஜத் துரோகிகள். சாம்ராஜ்யத்தைச் சிதைக்கச் சதி செய்தவர்கள். மகாராஜாவின் மண்டையை உருட்டத் திட்டம் தயாரித்தவர்கள்!
மகா வீ:- என்ன? என்னையே கொல்லச் சதி செய்தார்களா?
விபீஷ:- ஆம். இந்த முக்காட்டில் இருப்பது, விபசாரமே உருவெடுத்த ஒரு விஷ அருவி. இவள் வலையில் இந்த மீன் சிக்கியது. (ஒரு முக்காட்டைக் காட்டி) மோகஸ்திரத்தில் மயங்கிய இவர், இவளை இன்பபுரியின் மகாராணியாக ஆக்குகிறேன் என்று உறுதி கூறினார். இவள் மகாராணியாக-இவர் மகாராஜாவாக வேண்டுமல்லவா? இவர் மகாராஜா ஆக, மகாராஜா மடிய வேண்டுமல்லவா? அதற்குத் திட்டம் தயாரித்துக் கொடுத்தது, இந்த ராஜவிஸ்வாசிதான். அரசே! இந்த முக்கூட்டு ஒப்பந்தம், தங்கள் முடியைக் கவிழ்க்க முனைந்தது.
மகா வீ:- துரோகிகள், இவர்களைத் தூக்கில் ஏற்ற வேண்டும். விபீஷணரே! ஆதாரமிருக்கிறதா?
விபீஷ:- மகாராஜா! ஒரு விண்ணப்பம்.
மகா வீ:- சொல்லும்.
விபீஷ:- அரசாங்கச் சட்டம், அனைவருக்கும் பொதுதானே?
மகா வீ:- அதில் தடை என்ன?
விபீஷ:- நானே இந்தக் குற்றங்களைச் செய்திருந்தால் கூட, சட்டப்படி நான் சாகத்தானே வேண்டும்?
மகா வீ:- சந்தேகமேயில்லை. நீரென்ன? நானே நாட்டையும், நாட்டு மக்களையும் காட்டிக் கொடுத்தால், மக்கள் மன்றத்தில் எனக்கு மரண தண்டனைதான் தீர்ப்பு.
விபீஷ:- மகாராஜா! இவர்கள் குற்றவாளிகள் என்பதற்கு இதோ ஆதாரங்கள். (கடிதங்களை மகாவீரிடம் கொடுத்து விட்டு) தங்கள் உயிரைக் குடிக்க நடந்த ஏற்பாட்டால், இருவருக்குமிடையில் பறந்துகொண்டிருந்த சதிக் கடிதங்கள், இவைகளை என் ஒற்றர்கள் கண்டுபிடித்தார்கள்.
(மகாவீரர்-படித்து-நடுங்கி திகைத்து)
மகா வீ:- யார்?
விபீஷ:- யாருமில்லை, இதோ பாருங்கள்!
(முக்காடுகள் அகற்ற. வாய்க் கட்டுகளோடு பொன்னி, புத்தன், யாளித்தத்தர் மூவரும் இருத்தல். கட்டுகள் மெல்ல விபீஷணன் அவிழ்க்கிறான்)
மகா:- துரோகிகள்! என் ரத்தம், எனக்குத் துரோகி! நான் வளர்த்த சதை எனக்குத் துரோகி! என் உப்பைத் தின்று வாழ்ந்த இந்தப் பேய், (யாளித்தத்தரிடம்) எனக்குத் துரோகி!
யாளி:- நாங்கள் யாரும் துரோகியல்ல மகாராஜா! யோசித்துப் பார்க்கக் கொஞ்சம் ஒய்வெடுங்கள்.
மகா வீ:- யோசிப்பது. இந்தக் கடிதங்கள் கூறுகிற சாட்சிகள் போதும்.
யாளி:- கடிதங்கள் கற்பனை மகாராஜா!
விபீஷ:- மகாராஜா! கேளுங்கள். மதிப்பிற்குரிய சபையோரே! கேளுங்கள். எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனே! கேள். நீதிதேவா! கேள். தர்மநெறி தவறாத மகாராஜாவைத் தள்ளிவிட்டு, தான் முடிசூட வேண்டுமென்று இளவரசர் எண்ணினார். அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல், நான் குறுக்கே நின்றேன். என்னை ஒழிப்பதற்காக என் மேல் துவேஷப் பிரசாரத்தைக் கிளப்பிவிட்டு, என்னையும் கைது செய்து,
என்னை ராஜத்துரோகி என்ற குற்றத்துக்கு ஆளாக்கி, என்னைக் கொலைப்பார்த்தார். நீதியின் பக்கம் நின்று என்னைக் காப்பாற்றியது மீண்டும் மகாராஜாவைவிட்ட யாளித்தத்தரோடு திட்டம் போட்டு ரகசிய வேலைகள் பல நடந்ததை, நம் ஒற்றர்கள் மூலம் நான் அறிந்து, என் கவனத்தை இளவரசர் பக்கம் திருப்பினேன். அப்போதுதான், இந்த சதிக் கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அடுத்தபடி. யாளித்தத்தரும் இளவரசரும், இந்த விபசாரி வீட்டில் தங்கி, ஏதோ பயங்கரமான சதியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் பறந்தது; நான் இவள் வீட்டை முற்றுகையிட்டேன். கையுங்களவுமாக இவர்கள் பிடிபட்டார்கள். சட்டம் இவர்களைத் துரோகி என்கிறது, ஏன்? இவர்கள் மனச்சாட்சியே இவர்களைத் துரோகிகள் என்கிறது. என் ராஜவிஸ்வாசத்தின் மேல் ஆணையாக நெஞ்சாரச் சொல்கிறேன். மகாராஜா! வேண்டுமானால் இந்த முறை இளவரசரை மன்னித்துவிடுங்கள். ஆனால் துரோகத்திற்கு துணையாக இருந்த யாளித்தத்தரும், துரோகத்தைத் தூண்டிவிட்ட விபசாரி பொன்னியும் தூக்கில் தொங்கியாக வேண்டும்.
மகா வீ:- நீதியில் பேதமில்லை. மகனுக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதி வழங்கும் மரபில் நான் பிறக்கவில்லை. இவர்கள் மூவரும் ராஜத் துரோகிகள். மூவரும் தூக்குமேடை ஏறித்தான் ஆகவேண்டும்.
புத்:- மகாராஜா!
மகா வீ:- பேசாதே! துரோகி.
யாளி:- அரசர் பெருமானே! அவசரப்படுகிறீர்கள்.
மகா வீ:- அநியாயக்காரா? அரைக்கணங்கூட உங்களுடைய அக்கிரம உடல்கள் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது. சுட்டுச் சாம்பலாக்க வேண்டும்.
விபீஷ:- அந்தச் சாம்பலைக்கூடக் கடலில் கரைத்துவிட வேண்டும் மகாராஜா!
யாளி:- மகாராஜா!
மகாவீ:- மந்திரியாரே! மூவருக்கும் தூக்கு. இதுவே தீர்ப்பு.
(அரசன் சென்று விடுதல்)
யாளி:- (ஆவலோடு இளவரசரைக் கட்டிப்பிடித்து) இளவரசே!
விபீஷ:- என்ன இளவரசே!..... உம். இழுத்து வாருங்கள்.
(மிடுக்காகச் செல்கிறான், சபை கலைகிறது)