காட்சி 25 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 25
காட்சி 25
இடம்: விபீஷணன் மாளிகை.
மூல ஸ்கேன் 96, 97, 98, 99
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(பொன்னி. புத்தன் கட்டப்பட்டிருக்கிறார்கள். விபீஷணன் நின்று கொண்டிருக்கிறான். சில சிப்பாய்களால், யாளித்தத்தர் அழைத்து வரப்படுகிறார்)
விபீஷ:- யாளித்தத்தரே! வருக, வருக.
யாளி:- (புத்தனைக் கண்டதும்) ஆ! இளவரசே! யார் செய்த அநியாயம் இது? விபீஷணரே! என்ன விபரீதம்?
விபீஷ:- பொறும். பொறுத்தார் பூமி ஆள்வார். நான் கூட்டப்பொறுத்திருந்தேன். இப்பொழுது பூமி ஆளப்போகிறேன்.
யாளி:- பேச்சைக் கேட்க நேரமில்லை (வாளை உருவுதல். சிப்பாய்கள் யாளித்தத்தரை வளைத்துப் பிடித்தல்)
விபீஷ:- எனக்கும் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. உம். சீக்கிரம்! (யாளித்தத்தர் தூணில் கட்டப்படல். விபீஷணன் ஒரு மடலை எடுத்து யாளித்தத்தரிடம் நீட்டி) யாளித்தத்தரே! நான் சொல்லிக்கொண்டேயிருப்பேன். நீர் எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும்.
யாளி:- ஏலி, புலிக்கு ஆணையிடுகிறது. ராஜத் துரோகி! உன் வார்த்தையைக் கேட்டு என் விரல்கூட அசையாது.
விபீஷ:- உன் ஆத்மாவையே அசைக்கிறேன் பார் (சிப்பாய்களிடம்) ஏய்! ஆளுக்கொரு வில் எடுங்கள். உம், என்றதும் புத்தன் தலை உருளவேண்டும். (வாளை உருவியபடி புத்தன் தலைக்கு நேராக நீட்டிக்கொண்டு சிப்பாய்கள் நிற்கின்றனர்) என்ன யாளித்தத்தரே! இப்பொழுது என்ன சொல்லுகிறீர்? இளவரசரின் உயிர் என் உதடுகளின் அசைவில் இருக்கிறது. சொல்
லப் போனால் என்னுடைய பிடிவாதம். இவனுடைய உயிரைப் பறக்கடித்துவிடும். சீக்கிரம் எழுது. அல்லது புத்தன் உயிரைப் போக்க சம்மதம் கூறு!
யாளி:- (திகைத்து) விபீஷண! நீதியின் பெயரால் கேட்கிறேன்; இது நேர்மையா?
விபீஷ:- எதன் பெயரால் கேட்டாலும் சரி! என் மனதுக்குப் பட்டதை நான் செய்கிறேன்.
யாளி:- மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்.
விபீஷ:- அறிவுரை கேட்க உத்தேசமில்லை. இது அவசரமான நேரம். என் ஆணையை நிறைவேற்று. உம், எழுது!
யாளி:- என்ன எழுது?
விபீஷ:- சொல்கிறேன்.
இன்பபுரி சாம்ராஜ்ய இளவரசர் அவர்களுக்கு, நிறை வாழ்த்து...
எழுது. (எழுதுகிறார்)
தங்கள் மடல் கிடைத்தது, மகிழ்ந்தேன். மகாராஜா மகாவீரைக் கவிழ்ப்பதென்றால், அவரைக் கொன்றுதான் ஆகவேண்டும்.
[யாளித்தத்தர் எழுதாமல் திகைக்கிறார்]
விபீஷ:- உம். (சிப்பாய்கள் புத்தனுக்கு மேல் வாளை ஓங்கவே, யாளித்தத்தர் எழுத)
அது பயங்கரமான வேலை. ஆனாலும், பக்குவமாகச் செய்துவிடலாம். பதார்த்தங்
களில் விஷத்தைக் கலந்து, காரியத்தை முடித்துவிட்டால் ..
யாளி:- ஆ!
விபீஷ:- உம். வாயைத் திறக்காதே.
இன்பபுரியின் மகாராஜா நீங்கள், பொன்னியின் நிபந்தனையும் நிறைவேறும். பகிரங்கமாக எதுவும் செய்யக்கூடாது. அது நமக்கே ஆபத்து. நம் சூழ்ச்சியில் தலையிடும் விபீஷணனையும், வேலை முடிக்க வேண்டும். தாங்கள் நேரில் வரக்கூடாது. இன்பபுரியின் மந்திரி வேலை எனக்கு என்பதை மறந்து விடாதீர்கள்.
வணக்கம், யாளித்தத்தர்.
உம். தயங்காதே! அங்கே தலை போய்விடும்.
யாளி:- ஏ! மனசாட்சியே! நீ மறைந்துவிட்டாய். ஏ! நெஞ்சத் துடிப்புகளே! நீங்கள் தயவுசெய்து நின்று விடக்கூடாதா?
[இளவரசன் கையிலளித்து]
விபீஷ:- புத்தா! நீ எழுது! பொன்னியின் உயிரில் உனக்கு ஆசையிருந்தால் எழுது!
(பொன்னியின் தலைக்கு நேர்வாள் நிறுத்தப்படல், புத்தன் எழுது ஆரம்பித்தல்)
பூந்தோட்டத்தின் ராஜப் பிரதிநிதி, யாளித்தத்தருக்கு எழுதுவது.
மகாராஜாவின் மரணம், சமீபத்தில் நடக்காது எனத் தெரிகிறது. எனக்கோ வயது ஏறுகிறது. எந்தக் காலத்தில் மகாராஜா ஆவது? நாம் முன்பு போட்ட திட்டப்படி சதி செய்வது, படையெடுப்பது இப்பொழுது சாத்தியமில்லை. காரணம்: நம்மை விபீஷணன் கவனித்துக் கொண்டிருக்கிறான். விபீஷணனே வீழ்த்த நாம் செய்த முயற்சியும் தோற்றது. ஆனாலும் இன்னும் அதற்காக முயன்று கொண்டுதான் இருக்கிறேன். நான் முன்பு குறிப்பிட்ட என் காதலி பொன்னி, நான் அரசன் ஆனால் தான் என்னை மணப்பாளாம். அவள் மகாராணியாக வேண்டும். இதற்கு ஒரு வழி உடனே எழுதுங்கள். மகாராஜாவும் ஒழியவேண்டும். மக்களிடம் நல்ல பெயரும் நமக்கு இருக்க வேண்டும். இது ஞாபகத்திலிருக்கட்டும்.
தங்கள் அன்புள்ள, புத்தன்.
(தகராறுகளுக்கிடையே, இக்கடிதம் எழுதி முடிக்கப்படுகிறது)
விபீஷ:- வேலை முடிந்தது. வெற்றி எனதே. விபீஷண மகாராஜாவுக்கு!
சிப்பாய்கள்:- ஜே! ஜே!
(மீசைமேல் கைபோட்டு. கட்டுண்டவர்கள்மீது பரிகாசப் பார்வை வீசுகிறான் விபீஷணன்)