பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 24 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 24

காட்சி 24

இடம்:- தெருவில்.

மூல ஸ்கேன் 94, 95

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(ஒரு கைகாட்டி மரம். ஒரு புறத்தில் `இன்பபுரிக்கு` என்று எழுத்துக்கள். மறுபுறத்தில் `விபீஷணர் மாளிகைக்கு` என்று எழுத்துக்கள். குமரி இதைப் பார்த்து யோசித்தபடி நிற்கிறாள். பிறகு விபீஷணர் மாளிகைக்கு என்ற வழியில் நடக்கிறாள். நிகைத்து நின்று)

குமரி:- (தனக்குள்) இளவரசரை விடுவிப்பது என் கடமை. பொன்னியைப்பற்றி எனக்கு எதற்காகக் கவலை? பொன்னி

என் ஆசையில் விழுந்த இடி! என் இன்ப வாழ்க்கைக்கு முட்டுக் கட்டை. அவளை விடுவிக்காவிட்டால், இளவரசரின் நெஞ்சம் எனக்குச் சொந்தம். இளவரசரை விடுவிக்கும்போது, அவளும் விடுதலையானால்? சரி, இன்பபுரிக்கே செல்கிறேன். இளவரசரை மகாராஜாவே காப்பாற்றட்டும்.

(திரும்பி இன்பபுரி வழியில் நடக்கிறாள்)

குமரி:- பாவம், பொன்னி அந்தப் பழிகாரன் கையில் அகப்பட்டால்? என்ன இருந்தாலும், என்னைப்போல் ஒரு பெண். என்னைப்போலவே அவரிடம் உள்ளத்தைப் பறிகொடுத்த பெண். பாவம், ஒரே ஒரு கிழத் தகப்பன். அவரும் இறந்தார். அந்த அநாதையைத்தான் காப்பாற்ற வேண்டும். (திரும்பல்) என் பச்சாதாபம், என் காதலைக் கொள்ளும் பலிபீடமாகி விட்டால்...? பொன்னியைக் காப்பாற்றுகிறேன். அவர்கள் இருவரும் காதல் வெள்ளத்தில் நீந்துகிறார்கள். அதை நான் காண்கிறேன். காணுவதா? முடியுமா? முடியாது! (திரும்பல்) முடியாது! நான் அவரை அடையவும் முடியாது. வீண் கனவில், ஒரு ஜீவனை விஷப் பாம்பின் வாயில் தள்ளுவதா? வேண்டாம். அவர்கள் காதல் வாழட்டும். அவர்களுக்காக என் காதலைத் தியாகம் செய்கிறேன். (திரும்பல்) காதல் தியாகம் செய்யக்கூடிய பொருளா? உடல்-பொருள்-ஆவி மூன்றையும் தியாகமாகப் பெறக்கூடிய விலை உயர்ந்த வைரமல்லவா காதல்? காதலுக்காக தியாகம் செய்தவர்களின் கதைகளைக் கேட்டிருக்கிறேன். காதலையா தியாகம் செய்வது? (திரும்பல்) அந்தத் துணிச்சல்காரி, குமரியாகவே இருக்கட்டும். குமரி குமுறுகின்ற உன் உள்ளம் அமைதி பெறட்டும். இளவரசரைக் காப்பாற்றினால், இன்பபுரியைக் காப்பாற்றிய பெருமை! பொன்னியைக் காப்பாற்றினால், காதலைக் காப்பாற்றிய பெருமை! இந்தப் பெருமையை வாங்க, உன் காதலை விலையாகக்கொடு. இனிக் குழப்பமில்லை, அவர்கள் காதல் வாழட்டும். என் காதல் சாகட்டும்... உம். சித்ராவைப் பிடித்தால்தான் நடக்கும்.

(குமரி விபீஷணர் மாளிகை வழியில் செல்கிறாள்)