பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 23 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 23

காட்சி 23

இடம்:- விபீஷணன் மாளிகை.

மூல ஸ்கேன் 87, 88, 89, 90, 91, 92, 93, 94

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[விபீஷணன் புத்தனை வரவேற்கிறான்]

விபீஷ:- இளவரசே! உங்களை இப்படியா வரவேற்பது? தாங்கள் வருவதாக இருந்தால் ... தங்கத் தட்டில் வைரக் கற்களால் வரவேற்புப் பத்திரம் எழுதி, இரதகஜதுரகபதாதிகள் அணிவகுத்து நிற்க, ஆட்டங்கள் சூழ, அதிர்வேடிகள் முழங்க, எவ்வளவு ஆடம்பரமாக வரவேற்பேன்!

புத்த:- ஆடம்பரம், எனக்கு அடியோடு பிடிப்பதில்லை.

விபீஷ:- ஆடம்பரத்தில்தானே உலகம் ஆடுகிறது!

புத்த:- ஆடுகிறது என்று சொல்லாதீர். ஆட்டங்கொடுத்திருக்கிறது என்று சொல்லும்.

விபீஷ:- அதென்னமோ! அரசகுமாரரை ஆடம்பரமாக வரவேற்காவிட்டால், என் அதிகாரத்திற்கே பெருமையில்லை.

புத்த:- உமது அதிகாரத்தில், பெண்கள்கூடச் சிறை செல்கிறார்களாமே?

விபீஷ:- ஆம். சட்டத்தைச் சரியானபடி பிரயோகிக்கிறேன். குற்றவாளிகளுக்குச் சண்டமாருத வேகத்தில் நீதி வழங்குகிறேன். ஆண் என்றும், பெண் என்றும் பார்ப்பதில்லை.

புத்த:- போகிறது. ஆண் பெண் சமத்துவத்தை இப்படி யாவது நிலைநாட்டுகிறீரே! சரியான ஆட்சி! நீதி முறை தெரிந்த சமதர்ம ஆட்சி.

விபீஷ:- நாட்டில் கொலை, களவு, பொய், சூழ்ச்சி எந்தப் பிரச்சனை தலை எடுப்பதில்லை ஒரே அமைதி நிலவுகிறது.

புத்த:- சரிதான்.

விபீஷ:- இன்னுகடை ஒரு விபசாரியைப் பாதாளச் சிறையில் போட்டிருக்கிறேன்.

புத்த:- விபசாரியா?

விபீஷ:- ஆம், வேசி. உயர்ந்த குடும்பத்து உதாரப் பையன்களோடு, விபசாரம் நடத்துபவள்.

புத்த:- விபசாரி! விபத்தைவிடக் கொடியது. ஆமாம், அவள் விபசாரி என்பது நன்றாகத் தெரியுமா?

விபீஷ:- சந்தேகம் வேறு?

புத்த:- ஆலோசித்து எதையும் செய்வதுதான் ஆட்சி முறை! அவள் விபசாரி என்பதற்கு என்ன ஆதாரம்?

விபீஷ:- அவள் முகமே சொல்லுகிறதே!

(விபீஷணன் சிப்பாய்களுக்கு ஜாடை காட்டவே — அவர்கள் புத்தனுக்குப் பின் மறைந்து நெருங்குதல்)

புத்த:- முகக் குறிப்பில் குற்றவாளியைக் கண்டு பிடிக்கிறீர். ரேகை சாஸ்திரம் படித்திருக்கிறீரோ?

விபீஷ:- ஆமாம். முகத்தில் காணப்படும் சுருக்கங்கள், அவள் வாழ்வின் அமைப்பைக் காட்டும் ரேகைகள். உதாரணமாக, முகத்தைப் பார்த்ததுமே இது கிழம், இது வாலிபம், என்று

சொல்லுகிறோம் அல்லவா? இளவரசர் இளைஞர். உலகப் படிப்பு போதாது.

(மறைந்து வருபவரில் ஒருவன், இளவரசனின் வாளை விபீஷணனுக்குச் சுட்டிக் காட்டுதல்)

விபீஷ:- இதைப் பாருங்கள் (புத்தன் உறையிலிருந்து வாளை எடுத்து) பார்க்கும்போதே இந்த வாளின் பள பளப்பிலிருந்து இதன் கூர்மை தெரிகிறது.

(புத்தன் நிராயுதபாணியாகக் கை செய்யப்படுதல்)

விபீஷ:- எப்படி ரேகை சாஸ்திர விளக்கம்?

புத்த:- விபீஷணா?

விபீஷ:- ஏண்டா கும்பகர்ணா! எலியே! என் பொறியில் இருக்கிறாய். கத்தாதே! உம். இளவரசர் அவர்களோ வேண்டுமென்று ஒரு வழக்கை சிருஷ்டித்து, என்னை மேற்பதவிக்கு உயர்த்தினீர்களே, அந்த நன்றியை இந்த நாய் மறக்குமா?

புத்த:- விபீஷணா! எரிமலையின் மேல் விளையாடுகிறாய்?

விபீஷ:- விளையாட்டா? இது விளையாட்டா? ஆஹ்ஹ்ஹா! விலங்கு இளவரசே! விலங்கு!

(ஒருவன் விலங்கு மாட்டப் போகிறான்)

விபீஷ:- விலங்கை மாட்டாதே! இன்னும் வேலை இருக்கிறது அந்த வேசியை இழுத்து வாருங்கள். (ஒருவன் போகிறான்) இவனை இந்தத் தூணில் கட்டுங்கள். (இளவரசன் கட்டப்படுதல்)

விபீஷ:- என்னடா புலிபோலப் பார்க்கிறாய்? புயல்போல மூச்சு விடுகிறாய்?

புத்த:- எரிமலையின் குமுறல்!

விபீஷ:- எரிமலையைக்கூட வேரோடு பிடுங்கி எறியும் பூகம்பம் நான்!

புத்த:- நீ தத்திக்குத்திக்கும் தவளை. சிங்கநடை போடாதே!

விபீஷ:- தூண்டுச் சேர்த்துக் கடலில் மிதக்க விடுவேன். நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறிவேன். சதை சதைகளாகக் கிழித்து எடுப்பேன். புத்தா! உன் உயிர் என் கைவிரலில் இருக்கிறது. அளந்து பேசு.

புத்த:- அளந்து பேசுகிறேன். இன்பபுரியின் இளவரசனைத் தூணில் கட்டிவிட்டோமென்ற இறுமாப்பில், வெறியாட்டம் போடுகிறாய்...... விபீஷணா! இதன் விளைவு விபரீதமாயிருக்கும்.

விபீஷ:- ஜோஸ்யரே! உமது ஜாதகத்தை முதலில் பார்த்துக் கொள்ளும். விளைவாவது, அறுவடையாவது, விபீஷணன் பாதையில் வெற்றியைத் தவிர வேறு எதுவும் கிடையாது. புத்தா! நீ சிறுவன். அரசாங்கம் என்றால் என்னவென்று அறியாதவன். இந்த லட்சணத்தில், நீ துப்பறியக் கிளம்பினாய். பார்! துப்பு கெட்டவனே!

புத்த:- துரோகி! நாக்கை மடக்கு.

விபீஷ:- மடக்காமல் பேசமுடியுமா? மடக்கித்தான் பேசுகிறேன். மடமையின் சிகரமே! மதிகெட்ட மன்னனுக்குப் பிறந்த மண்டூகமே!

புத்த:- விபீஷணா! நீ ஓணான் குஞ்சு! ஓதிய மிளார். என் உடைய உணர்ச்சி அலைகளையும், தூணில் கட்டிவிட்டதாக எண்ணி உளறுகிறாய். என் உணர்ச்சி வெள்ளத்தின் முன், இந்தத் தூண் ஒரு துரும்பு!

விபீஷ:- ஓஹோ! விசுவரூபம் எடுப்பீர்களோ? சற்றுப் பொறுங்கள் குட்டி மகாராஜாவே! நீங்கள் எடுக்கிற விசுவரூபத்திற்குத் தகுந்தாற்போல், இந்த மாளிகையை இடித்துக் கட்டுகிறேன். ஒரு வார்த்தை, உங்கள் விசுவரூபத்தின் அகலங்களின் அளவை இப்பொழுதே கூறிவிடுங்கள்.

புத்த:- (ஆவேசத்தோடு) அளவு! உன்னுடைய ரத்தத்தைக் கொட்டிவைக்கும் தொட்டிக்கு அளவெடுத்துக்கொள்! உன் பிணத்திற்குக் கட்டப்படும் பாடைக்கு அளவெடுத்துக்கொள்!

(ஆவேசத்தில், கயிறு தெறிக்கும்படி துள்ளி இளவரசன் வெளிப்படுகிறான். அதற்குள் பல வீரர்கள் அவனைப் பிடித்து, மீண்டும் சங்கிலி முதலியவைகளால் கட்டித் தூணோடு இறுக்கப் பிணித்து விடுகிறார்கள்)

விபீஷ:- அஹ்ஹ்ஹா! கன்றுக்குட்டி துள்ளி ஓடும், கட்டிப் போட்டால் சும்மா கிடக்கும்.

(பொன்னி விலங்கோடு இழுத்துவரப்படல்)

விபீஷ:- வாடி... வா!

புத்த:- (பொன்னியைக் கண்டு வியப்பினோடு) பொன்னி!

பொன்:- ஆ!.... (பொன்னி புத்தனிடம் ஓடிவர எத்தனிக்கிறாள். அதற்குள்)

விபீஷ:- நில்லடி கள்ளி! (தடுக்கிறான் வாளை உருவி)

பொன்:- உன் வாள்!.... கோழைகளைக் தடுக்குமா? நீ வெட்டிப் போடுகிற என் தலையாவது அவர் காலடியில் உருளட்டும். உம். உறையில் போடாதே! நடக்கட்டும்.

விபீஷ:- முதலில்......இந்த வாயாடியின் வாயைக் கட்டுங்கள்.

(பொன்னியின் வாய் கட்டப்படுதல்)

விபீஷ:- இவருக்காக, இந்தத் தூண் காத்திருக்கிறது.

புத்த:- விபீஷணா! சாவோடு விளையாடுகிறாய்.

விபீஷ:- விளையாட்டு சுகமாக முடிந்துவிட்டது. இனி வேலை ஆரம்பம். புத்தா! பூந்தோட்டத்தின் ராஜபிரதிநிதி யாளித்துறை, இங்கு வரப்போகிறார்.

புத்த:- ஏதாவது உளறு.

விபீஷ:- உளறலாகத்தான் தெரியும். ஊர்ஜிதமற்ற செய்தியை விபீஷணன் சொல்லவேமாட்டான் அதை இப்போது நீயே தெரிந்துகொள்வாய். அதுவும் உன்னைக் காண்பதற்காகவே யாளித்துறை வரப்போகிறார்.

புத்த:- வரட்டும்.

விபீஷ:- அப்படியானால் இதை எழுது. (மடல் ஒன்றைக் காட்டி எழுதச் சொல்லுகிறான். புத்தன் அதைத் தள்ளிவிடுகிறான்) அழிவை ஆலிங்கனம் செய்யாதே! நான் சொல்வதை எழுது. பாவம்! பருவத்தோடு கூடிய உன் அழகை நான் பாழ்படுத்த விரும்பவில்லை.

புத்த:- என்ன பரிவு! பாம்புக்குக் கரியின் மேல் பிறக்கிற பரிவு! விபீஷணா! ஒரு அடிமையிடம் பேசுகிற வார்த்தைகளே என்னிடம் பேசுகிறாய். ஒரு கோழையிடம் வீரப் பயமுறுத்தல் கூட, என்னிடம் கொட்டுகிறாய். நன்றாக நினைவுபடுத்திக்கொள். இருதயத்தின் கடைசி துடிப்புள்ள வரையில்...... உன் அதிகாரத்திற்கு புத்தன் அடிபணியமாட்டான்.

விபீஷ:- அதையும் பார்க்கிறேன். (விபீஷணன் வாளை உருவிப் பொன்னியின் மேல் வீசுந்தோரணையில் நின்றுகொண்டு) இப்பொழுது சொல். பொன்னியின் உயிரைப் பந்தயமாகக் காட்டிச் சொல்! என் அதிகாரமா? உன் பிடிவாதமா?

புத்த:- வேண்டாம்! வேண்டாம்!

விபீஷ:- உம்... எழுது. (எழுதும் மடல், புத்தன் வாங்குகிறான்)

அன்புள்ள யாளித்துறைக்கு......

உம். சீக்கிரம் எழுது. (புத்தன் எழுதுகிறான்)

புத்தன் எழுதிய அவசர அழைப்பு. இம் மடல் கண்டதும், இமைக்கொட்டும் நேரங்கூடத் தாமதியாமல், வரும் வீரரோடு வந்து சேரவும். சில முக்கியமான ஏற்பாடுகள் உடன் செய்யப்பட வேண்டியிருக்கின்றன.

உம்... கையெழுத்துப் போடு.

புத்த:- இந்த ஓலை எதற்காக?

விபீஷ:- உன் நன்மைக்குத்தான்.

புத்த:- என் நன்மைக்கா?

விபீஷ:- பேசாதே! வாள் முன் கட்டளை இருக்கிறது. அதற்கு வணங்கு.

புத்த:- வணங்காவிட்டால்?

விபீஷ:- பொன்னி வானுலகம் செல்வாள்.

(வாளை உருவி அவள் பக்கம் நீட்டவே)

புத்த:- நிறுத்து! நிறுத்து.

விபீஷ:- உம் வா வழிக்கு! போடு கையெழுத்தை.

(புத்தன் கையொப்பமிட்டு. அதை ஒரு சிப்பாயிடம் கொடுத்து)

ஏ, முருங்கை! மூன்று நாளிகை நேரத்தில் பூந்தோட்டத் தலைநகர் சென்று, அடுத்த மூன்று நாளிகையில் யாளித்துறை திரும்பி வரவேண்டும். (சிப்பாய் செல்லவே) இவர்கள் அதுவரையில் தூணோடு இருக்கட்டும். இளவரசர் பேசிப் பேசி வாய் வலிக்கிறதாம். அவர் வாயையும் கட்டிவையுங்கள்.

(புத்தன் வாயும் கட்டப்படுகிறது. விபீஷணன் கேலியாக இருவரையும் பார்க்கிறான். ஒரு சிப்பாய் வந்து வணங்கி)

சிப்:- வரி கொடுக்கமாட்டேன்னு புரட்சி செய்தவர்கள் சிலர் வந்திருக்கிறார்கள்.

விபீஷ:- அந்த வம்பாள்களுக்கு வைகுந்தப் பிரயாணச் சீட்டு வேண்டுமாக்கும்?

சிப்:- நம் வசூல் அதிகாரியின் வயிற்றைக் கிழித்தவனைக் கூட இழுத்து வந்திருக்கிறோம்.

விபீஷ:- அந்த நாய்களின் நாக்கைக் கிழிக்கவேண்டும். நானே வருகிறேன்.

(வேகமாகப் போகிறான்)