பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 22 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 22

காட்சி 22

இடம்: பொன்னியின் குடிசை.

மூல ஸ்கேன் 85, 86, 87

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(புத்தன் ஆத்திரமாக அமர்ந்திருக்கிறான். குமரி, சோகமாக இருக்கிறாள்)

மலை:- (ஓடி வந்துகொண்டே) பொன்னி! பொன்னி!

புத்த:- ஆ! பொன்னிக்கு என்ன ஆயிற்று?

மலை:- பொன்னி போய்விட்டாள்! பொன்னி போய் விட்டாள்!

புத்த:- எங்கே போய்விட்டாள்?

மலை:- விபீஷணன் சிறையில், நீங்கதான் முன்னே அவளைக் காப்பாத்தினீங்க. இப்ப காப்பாத்துங்க, கடவுளே! என் குல விளக்கு அணைஞ்சு போகாமல் காப்பாத்துங்க! (சாய்கிறான்)

புத்த:- பொன்னி இருக்குமிடம்?

மலை:- புலியின் வாயில்! அந்தப் பொல்லாத விபீஷணன் கையில் என் பொன்னி அகப்பட்டுக் கொண்டாள்.

புத்த:- (திகைக்கும் குமரியிடம்) குமரி! இவரைப் பார்த்துக்கொள். நான் வருகிறேன்.

(புத்தன் செல்ல, குமரி மலையனைத் தூக்கிப்படுக்க வைத்தல்)

மலை:- பொன்னி! பொன்னி!

குமரி:- அப்பா! பொன்னி உங்கள் மகள்தானே?

மலை:- என் மாணிக்கம் அம்மா, என் மாணிக்கம்.

குமரி:- பாவம். கவலைப்படாதீர். பொன்னிக்கு எந்த ஆபத்தும் வராது. பெரியவரே! இவரை உமக்கு முன்னமேயே தெரியுமா?

மலை:- இவரால் வந்த வினைதானம்மா இது. இவர்தான் என்மகளை மயக்கி, கடைசியிலே விபசாரிப் பட்டம் வாங்கிக் கொடுத்தாரு. விபசாரி! விபசாரி! பொன்னி நம்ம வம்சத்திலேயே இல்லாத பட்டம். என் கண்ணே! நீ விபசாரியா? உலகமே! நீ சொல்! பாரபட்சமற்ற ஏ சூரியனே! நீ சொல். காற்றே! நீ சொல். என் மகள் விபசாரியா? ஏழையென்று பெயருண்டு, அடிமை என்று பெயருண்டு, முட்டாள் என்று பெயருண்டு, இந்தப் பரம்பரையில், விபசாரி என்று பெயர் கிடையாதே! அய்யோ! அடிவயிறு எரிகிறதே! அய்யோ!......

குமரி:- அழாதீர்! ஆத்திரத்துக்கு முடிவு உண்டு. அந்த முடிவைக் காண்பதற்காகத்தான் நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். அய்யா! பொன்னியை இவர் மணந்துகொள்வதாகச் சொல்லிவிட்டாரா?

மலை:- அம்மா! நாங்களோ தாழ்ந்த சாதி. இவரோ ராஜ குடும்பம். இரண்டும் ஒத்துவராதுன்னு பொன்னிக்கு எவ்வளவோ உதாரணம் சொன்னேன்; அவள் ஊ...கும்.. கேட்கவேயில்லை. கடைசியில்......

குமரி:- இளவரசர் பொன்னியைக் கைவிடமாட்டார். பயப்படாதீர்.

மலை:- நான் செத்தாலும் கவலையில்லை. என் மகள் மன இச்சை சாக அடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்களம்மா.

குமரி:- உம், படுத்துக்கொள்ளுங்கள்

(படுக்க வைத்து சிகிச்சை செய்தல்)

மலை:- இளவரசுக்கு நீங்க......?

குமரி:- தங்கை!

(குமரி பெருமூச்சு விடுகிறாள்)