பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 21 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 21

காட்சி 21

இடம்:- விபீஷணன் மாளிகை.

மூல ஸ்கேன் 80, 81, 82, 83, 84, 85

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

விபீஷ:- தீண்டத் தகாதவர்கள் உயர் ஜாதிக்காரனுடன் உட்கார்ந்தால், சாம்ராஜ்ய சட்டப்படி என்ன தண்டனை?

மலை:- சிறையில் தள்ளுவார்கள்.

விபீஷ:- உறவாடினால்?

மலை:- சிரச்சேதம்.

விபீஷ:- விபசாரத் தொழிலில் ஈடுபட்டால்?

மலை:- சித்ரவதை!

விபீஷ:- இத்தனை குற்றங்களும் நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

(மலையன் பொன்னி திகைப்பு)

விபீஷ:- மகளின் அழகை முதலாக வைத்து, மதிப்புள்ள குடும்பங்களின் வாலிபர்களை மயக்கி, மானமற்ற விபசாரத் தொழில் செய்திருக்கிறீர்.

மலை:- விபசாரமா?

விபீஷ:- வேறென்ன, வியாபாரமா?

மலைய:- கடவுளே! இதென்ன காலம்? என் மகள் விபசாரியா?

விபீஷ:- இல்லை, பதிவிரதை! சாஸ்திரப்படி இந்தக் குற்றத்திற்கு நரகலோக தண்டனை. சாம்ராஜ்ய சட்டப்படி மரண தண்டனை.

பொன்:- எங்களைக் கொல்லும் ஆசையிருந்தால், அக்கினி குண்டத்தில் போட்டாவது பொசுக்கிவிடுங்கள், இந்த அபாண்ட வார்த்தைகளால் கொல்லாதீர்கள்.

விபீஷ:- வேசி! வீரம் பேசுகிறாய். பொன்னி! நீ பேசுவது அரசப் பிரதிநிதியிடம். அதை மறந்துவிடாதே.

மலை:- அரசராகவே இருக்கட்டும். அக்கிரம வார்த்தைகளே ஒரு ஆண்டியும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டான்.

விபீஷ:- உம்..... கேட்க வேண்டாம்! இந்த ஜந்துக்களிடம் பேசுவது என் கௌரவத்திற்கு குறைவு. இவனைக் கொண்டு போங்கள்!

(சிப்பாய்கள் இழுத்துச் செல்ல)

பொன்:- அப்பா! அப்பா!...

விபீஷ:- அப்பா!... மாமா!... என்று அழை, (பொன்னி பொங்குதல்) பரந்த சாம்ராஜ்யத்தில் உங்கள் சாண் வயிறு நிரம்ப வேறு வழி இல்லையா? வாலிபத்தை வாடகைக்கு விடுவதைக் காட்டிலும் வீட்டுக்கு வீடு பிச்சை எடுத்து வாழலாமே. (பொன்னி ஆத்திரம் உச்சம்) அழகு, இளமை இவைகளை ஆண்டவன் வியாபாரம் செய்யவா படைத்தான்? பொன்னி! உனக்கு மானம் என்று ஒன்று இருக்கிறதா?

பொன்:- இல்லை! இருந்தால்..... இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டாள்.

(விபீஷணன் சிரிப்பு)

பொன்:- (சிரித்து) என்னைச் சித்ரவதை செய்யவேண்டாம்.

விபீஷ:- சித்ரவதை! நீயல்லவா என் இருதயத்தைச் செதில் செதில்களாகப் பிளந்து சித்ரவதை செய்திருப்பவள்! உன் பரிதாபத்தைக் காணும்போது எனக்கே பரிவு உண்டாகிறது. நீ செய்த குற்றம், பயங்கரமானது. நீ அனுபவிக்க வேண்டிய தண்டனை அதைவிட பயங்கரமானது!

பொன்:- இந்த வார்த்தைகளைவிடவா?

விபீஷ:- உன் வனப்பை வெட்டித்தள்ள நான் விரும்பவில்லை. பாவம் வறுமையின் கஷ்டம், உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டாய். நீ என்ன செய்வாய்? தந்தையே தரகனாக இருக்கும்போது.

பொன்:- போதும், என் தந்தை தங்கக் குன்று. அவரைத் தகாத வார்த்தைகளால் தாழ்த்த வேண்டாம்.

விபீஷ:- இல்லை. உங்கள் இருவரையுமே உயர்த்துவதாக உத்தேசம்.

பொன்:- உயர்த்துங்கள்! இந்த துன்மார்க்க மொழிகளை விட நீங்கள் உயர்த்தும் தூக்குமரம் எவ்வளவோ மேல்!

விபீஷ:- தும்பை மலர் போன்ற உன் மேனியைத் தூக்கு மரத்திலா தொங்கவிடுவேன்? என் உப்பரிகையிலே உல்லாசமாயிருக்கலாம்.

பொன்:- கிண்டல்வேண்டாம். தண்டனை நடைபெறட்டும்.

விபீஷ:- நீ தங்கக் கொடி! தண்டனையால் வாட விடமாட்டேன்.

பொன்:- ஆ!.....

விபீஷ:- பொன்னி! உன்னை மன்னித்துவிட்டேன். ஒரு வார்த்தை சொல். எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்.

பொன்:- முதலில் இந்த எண்ணத்தை மறந்துவிடும்.

விபீஷ:- நீ வேசியல்ல 'வைரச்சிலை!' போதுமா? பொன்னி, "நாதா!" என்று ஒரு அன்புச் சொல்லை உன் பொன்னுதரங்களால் சிந்தினால் போதும், பூரித்துப் போவேன். புளகாங்கிதமடைவேன். பிறகு உன்னைக் குடிசையில் வாழவிடமாட்டேன். கூடகோபுரங்களில் வாழலாம். அந்த மண் வீட்டை இடித்தெறிவேன். மாடமாளிகைகளில் உலாவலாம். ஏன்? உன்னை மகாராணி யாக்கிவிடுவேன்!

பொன்:- கனவு காண்கிறீர். காமவெள்ளத்தில் கருத்திழந்து உளறுகிறீர். கையில் சிக்கிவிட்டேன் என்பதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு பேசாதீர்.

விபீஷ:- பொன்னி! உன் உயிர் என் கையில்!

பொன்:- மானம் பெரிது உயிரல்ல! நான் தமிழச்சி!

விபீஷ:- நானும் தமிழன்தான்.

பொன்:- நீ.... தமிழினத்தில்.... விபீஷணன்!

விபீஷ:- மரியாதை கெட்டுப் பேசுகிறாய், மடநாயே! மானம் பெரிதாம். மானம்! எது பெரிது என்பதை இப்போது காட்டுகிறேன்.

[உள்ளே சென்று மலையனை இழுத்து வருகிறான். வரும்போதே]

மலை:- பூச்சாண்டி காட்டாதீர். பொன்னியை எமன் வாயில் ஒப்படைப்பேன். உமக்கு மனைவியாக்கமாட்டேன்.

விபீஷ:- வலியவரும் அதிர்ஷ்டத்தை, வேண்டாமென்று தள்ளுகிறாய், மலையா! யோசித்துப்பார்.

மலை:- யோசிப்பதென்ன! இதுதான் முடிவு.

விபீஷ:- என்னுடைய முடிவு, கடுமையாக இருக்கும்.

மலை:- எந்த முடிவையும் வரவேற்கச் சித்தமாக இருக்கிறோம்.

விபீஷ:- உன் கண் முன்னேயே பொன்னியைக் கண்ட துண்டமாக்க எனக்கு அதிகாரமிருக்கிறது.

மலை:- அவளைக் கண்டதுண்டமாக்கலாம். அவள் கற்பைக் களங்கப்படுத்தக் கடவுளுக்குக்கூட அதிகாரமில்லை.

விபீஷ:- அதிகாரம்! அது யாருக்கு இருக்கிறதென்பதைப் பார்.

(விபீஷணன் ஜாடை காட்ட. சிப்பாய்கள் மலையனை அடிக்கிறார்கள். பொன்னி அலறுகிறாள்)

விபீஷ:- அப்பாவுக்கும் விடுதலை, உனக்கும் விடுதலை. பொன்னி! ஒருவார்த்தை மட்டும் சொல்லிவிடு.

பொன்:- நாங்கள் இருவருமே சம்மதிக்கிறோம்.

விபீஷ:- (மகிழ்வுடன்) அப்படியா?

பொன்:- உலக விடுதலைக்கு நாங்கள் தயார். உன் கொடுவாளால் எங்களைக் கொன்று குவித்துவிடு. எங்கள் உடல்களைக் துண்டுகளாகக் கிழித்துத் தணலில் போட்டுவிடு. உன் அதிகார வெறியில் என்னென்ன அக்கிரமம் செய்ய முடியுமோ; அதையெல்லாம் செய்துவிடு.

விபீஷ:- அதைத்தான் செய்கிறேன். உம்..! நடக்கட்டும்.

(மலையன் தாக்கப்படவே, பொன்னி மூர்ச்சித்தல்)

விபீஷ:- இவளைப் பாதாளச் சிறையில் தள்ளுங்கள். (மலையன் நோக்கி) இது நடந்துகொண்டே இருக்கட்டும்.

(மீண்டும் அடிகள், மண்டை பிய்ந்து விடுகிறது. பைத்தியம்போல் ஆகிறான்)

விபீஷ:- அடித்துத் துரத்துங்கள்; எங்கேயாவது ஓடிச் சாகட்டும் நாய்!

(மலையன் ஓடுகிறான். அடி தாங்காமல்)