காட்சி 20 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 20
காட்சி 20
இடம்:- மலையன் வீடு.
மூல ஸ்கேன் 75, 76, 77, 78, 79, 80
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(பொன்னி மோதிரத்தைப் பார்த்துப் பாடிக் கொண்டே புத்தனை நினைந்து உருகுகிறாள். ஏதோ சுவடியைப் படித்துக்கொண்டிருந்த மலையன், அதைப் பார்த்துவிட்டு)
மலை:- அம்மா! இந்த மோதிரம் ஏது?
பொன்:- அவர் கொடுத்தார் அப்பா.
மலை:- எவர் கொடுத்தார்? என்ன உளறே?
பொன்:- அன்று என்னைக் காப்பாற்றினாரே, அவர்.
மலை:- அளவுக்கு மீறிவிட்டாய் பொன்னி. ஆபத்தை வரவழைத்துக்கொள்ளாதே!
பொன்:- என்னப்பா சொல்கிறீர்கள்?
மலை:- சொல்வது! கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்லியும், நீ கெட்டுப்போகவே துணிந்துவிட்டாய்.
பொன்:- என் வாழ்வு கெடும்படி அவர் விடமாட்டாரப்பா!
மலை:- உம். உன் தலையெழுத்தை யார் மாற்றமுடியும்? எங்கேயோ வழியிலே வந்தவன் அவராம், இவராம், விடமாட்டாராம்!
பொன்:- வழியில் வந்தவரல்ல. அவர் யார் தெரியுமா?
மலை:- யாராயிருந்தால் என்ன? உன் சாதியும், அவன் சாதியும் ஒத்துக்குமா?
பொன்:- எங்கள் உள்ளங்கள் ஒத்துவிட்டன.
மலை:- அப்படித்தான் முதல்லே அளப்பான்! அப்புறம் ஆள் போன இடம் தெரியாது போய்விடுவான்.
பொன்:- அவர் வாக்குத் தவறமாட்டார்.
மலை:- அரிச்சந்திரனுக்கும்!
பொன்:- அரசகுமாரர் அப்பா!
மலை:- அரச குமாரனா? ஆ! பொன்னி! கெட்டாய்! அசத்தியம், அரச குடும்பத்தோடே பிறந்தது.
பொன்:- அப்படிச் சொல்லாதீர்கள். அரசாட்சியின் மேல் சத்தியம் செய்திருக்கிறார்.
மலை:- அரசாட்சியாவது, சத்தியமாவது. அத்தனையும் நடிப்பம்மா, நடிப்பு! அரசாட்சியின் மீது ஆணையிட்ட இவர் யார்? அரசாங்கம் சாஸ்திர சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டது.
சாஸ்திரத்திலே, சாதி கெட்டவளைக் கல்யாணம் செய்யக்கூடாதென்றால்? உம்...... என்ன நடக்கப் போகிறதோ!
(விபீஷணன் சிப்பாய் இருவர் வருதல்)
சிப்பாய்:- மலையன் நீர்தானே?
மலையன்:- ஆமாம்.
சிப்:- இந்தக் கிராம அதிகாரிதானே?
மலை:- ஆமாம். ஏன்?
சிப்:- நீரும் உமது மகள் பொன்னியும், உடனே விபீஷணர் மாளிகைக்கு வரவேண்டும்.
மலை:- ஏன்?
சிப்:- விபீஷணர் உத்தரவு.
[சிப்பாய்கள் நகர]
மலை:- ஒன்றும் புரியலையே...உம். புறப்படு பொன்னி!
(திரையில் ஒரு இருள் மீண்டும் ஒளி, அதே காட்சியில் குமரியும் புத்தனும் வருகிறார்கள். புத்தன் சுற்று முற்றும் பார்க்கிறான். அதைக் கண்டு சந்தேகமுற்று)
குமரி:- யாரைத் தேடுகிறீர்கள்?
புத்த:- யாரையுமில்லை. இளைப்பாறலாம்.
(குமரியும் புத்தனும், வேறு உடைகளில் இருத்தல் குமரி சாதாரணப் பெண்ணாகவும். புத்தன் சாதாரண மனிதனாகவும் காட்சியளித்தல்)
குமரி:- கரடு முரடான பாதை! இளவரசே! கவிஞர்கள் காட்டுப் பாதைக்கு ஏதோ உவமானம் சொல்வார்களே!
புத்த:- ஆமாம். வாழ்க்கைப் பாதை!
குமரி:- அது வைத்துக் கவிஞர் சொல்வது நான் கேட்டது வெளிநாட்டுக் கவிஞரின் உவமானம்.
புத்த:- காட்டுப் பாதைக்கு உவமானம்! உம்... காதல் பாதையைச் சொல்வார்கள்.
குமரி:- அதுவும் இவ்வளவு கஷ்டமாக்கும்.
புத்த:- இதைவிடக் கஷ்டம்.
குமரி:- உறுதி என்னும் குதிரையில் சென்றால்?
புத்த:- உடைப்பெடுத்த காட்டாறுகள், கரை புரண்டோடும்.
குமரி:- கடமை என்னும் கட்டுமரத்தில் ஏறிக்கொண்டால்?
புத்த:- பேதமென்னும் பெருங்காற்று வீசும்.
குமரி:- பிராணத்தியாகம் செய்யவும் தயாராகிவிட்டால்?
புத்த:- காதலில் தோல்வியும், வாழ்வில் நாசமும் வந்து சேரும்.
குமரி:- அந்தக் காதலர்களின் புகழ், அணையாத ஜோதியல்லவா?
புத்த:- காதலர்கள் என்றால் சரி. தனியே ஒரு ஜீவன், காதலுக்காக வாழ்வைக் கருக்கிக் கொள்வது பைத்தியக்காரத்தனம்.
குமரி:- அந்த ஜீவனைத் தனியே தவிக்கவிடுவது?
புத்த:- தவிப்பு அவர்களாகத் தேடிக்கொள்வது? அதற்கு யார் பொறுப்பாளி?
குமரி:- மனதிற்குக் கடிவாளம் போடுவது சாமான்யமில்லை.
புத்த:- மற்றவர் மனதை மாற்ற நினைப்பதும் அப்படித்தான்.
குமரி:- காதல், காந்தம் என்கிறார்கள். உள்ளங்களை ஒன்றாக இணைக்கும் கயிறு என்கிறார்கள். எல்லாம் பொய்யா?
புத்த:- எல்லாம் உண்மை. ஆனால் காதலன் காதலியைக் கைவிட்டு விட்டால், அவளுக்கு இதெல்லாம் பொய்யாகிவிடும்.
குமரி:- அப்படியானால், நீங்கள் காதலியைக் கைவிட மாட்டீர்களே? (சந்தோஷமாய்)
புத்த:- அதெப்படி முடியும்? கடல் பாலைவனமானாலும், கதிரவன் பனிக்கட்டியானாலும், என் காதலியைக் கைவிட மாட்டேன்.
குமரி:- (ஆவலாக) அத்தான்! (தழுவச் செல்ல)
புத்த:- தூ! விடு என்னை. நீ பெண்ணா? அல்லது பிரம்ம ராட்சசி என்பார்களே, அதுவா? காமவெறி தலைக்கேறி ஒரு ஆடவனை வலுவில் அணைக்கும் நீ ஆண்கள் இருக்கும் உலகத்திலே இருக்க அருகதையற்றவள்!
குமரி:- மன்னித்துவிடுங்கள். கேவலம், ஒரு விபசாரியைப் பேசுவதுபோலப் பேசாதீர்கள். என் காதல்! பிரம்மராட்சசப் பேயாட்டமல்ல, இதயத் துடிப்பு! அதை எடுத்துச் சொன்னது குற்றமா? அணை போட்டுத் தடுக்க முடியாத ஆசை வெள்ளம். அதில் தத்தளித்த இந்த அபலையின் மனஅலைகள், காதல்! காதல்! என்று ஒலிக்கின்றன. காதலைக் காட்டியதற்கு இவ்வளவு கர்ணகடூரமான சொற்களா? இன்பபுரியின் இளவரசரா இப்படிப்
பேசுவது? என் நெஞ்சாரக் காதலித்தவரா என்னை நெருப்பில் தள்ளுவது? வேண்டாம். இந்த அனாதையைக் காப்பாற்றுங்கள்.
புத்த:- பேசாதே!
[திரையில் இருள். அடுத்த காட்சித் தோற்றம்]