காட்சி 19 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 19
காட்சி 19
இடம்:- வசந்த மண்டபம்.
மூல ஸ்கேன் 72, 73, 74, 75
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(விபீஷணனும். சித்ராவும் மகிழ்ச்சியோடிருத்தல்)
விபீஷ:- கடல் மடை திறந்ததுமாதிரி கர்ஜித்துவிட்டுக் கடிதங்களை எடுக்கப் பெட்டியைத் திறந்தான். அடடா! என்ன கம்பீரம்! என்ன களிப்பு! அத்தனையும் ஒரே நொடியில் இடி விழுந்ததுபோல் அழிந்துவிட்டன. சித்ரா! இனி முல்லைக்காட்டில் இவர்தான் முடிசூடா மன்னர். என் ஆட்சி ஆரம்பம்.
சித்ரா:- இதுவரை நடந்ததும் உங்களாட்சிதானே?
விபீஷ:- இமயா ஒருவன் குறுக்கே இருந்தான். புத்தன் உதவியால் அவனைப் புதைத்துவிட்டேன். இனி விபீஷணன் விரும்பியபடியே இன்பபுரியின் ரத்ன சிம்மாசனம். பக்கத்தில் நீ!
சித்ரா:- இன்னும் கெட்ட எண்ணம் உங்களை விட்ட பாடில்லை.
விபீஷ:- அதிர்ஷ்டம், தானே வருகிறது சித்ரா!
(ஒரு தோழி வந்து)
தோழி:- ஒற்றர் வந்திருக்கிறார்.
விபீஷ:- வரச் சொல்.
[1-வது காலி வருகிறான்]
விபீஷ:- என்ன விசேஷம் முடிந்ததா?
[1-வது காலி விபீஷணன் காதில் ரகசியமாகச் சொல்லுகிறான் ஏதோ. அதைச் சித்ரா அருகே வந்து கவனிக்கவே அதைக்கண்ட விபீஷணன் ஜாடையாகப் பேசுகிறான்]
விபீஷ:- பெயர் என்ன? பொன்னியா?
1-வது கா:- ஆமாம், மலையன் மகள்.
விபீஷ:- தீண்டப்படாதவள், தாசித்தொழில் செய்கிறாள். பெரிய இடத்தின் பெயர்களைப் பாழ்படுத்துகிறாள். நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?
1-வது கா:- முதலில் வசந்திங்க, பிறகு விசாரித்தேன். இப்ப நான் சொல்றது உண்மைங்க. நான் அவளை நேராகவே பார்த்திருக்கேன். ஊரெல்லாம் சிரிக்குதுங்க.
[சித்ராவிற்காக, ஆத்திரமடைவதுபோல் பசாங்கு செய்து விஷயத்தை கிரகிக்கிறான்]
விபீஷ:- ஊர் சிரிக்கும், விபீஷணன் ஆட்சியில் இந்த விபசாரம் நடப்பதா என்று கைக்கொட்டிச் சிரிக்கும்! உம்....அந்த வேசி விபசாரம் செய்வதற்கேற்ற அழகியோ?
1-வது கா:- அழகிலே மாம்பழந்தாங்க. அதிலேதான் அந்தப் பயல் மயங்கிட்டாங்க.
விபீஷ:- மயங்குவான் மடையன்! அவன் மயங்கியது ஒரு குற்றம். அவள் மயக்கியது பெருங்குற்றம். மயக்கும் அவளுக்கு அவள் இனம் பெண்ணே?
1-வது கா:- பருவமடைந்த பத்தரை மாற்றுப் பொன்னுங்க.
விபீஷ:- பொன்! அழகை வியாபாரம் செய்யும் அரக்கிக்குப் பெயர் பொன்! பொன் என்கிறாயே; அந்தத் துடிச் செருக்கி தங்க நிறமோ?
1-வது கா:- தங்கமே தாங்க! சுருக்கமாகச் சொன்னா, ஒன்பது ரதியை ஒண்ணச் சேர்த்தா எப்படி இருக்குமோ, அவ்வளவு ஒய்யாரமுங்க.
விபீஷ:- ஆடவர்களை வசப்படுத்தும் விபசாரி. அவள் அழகைப்பற்றி வர்ணனை. ஆமாம். அந்த ஆண் மூடனை இழுக்கும் அளவுக்கு அழகாகப் பேசுகிறீரோ?
1-வது கா:- பேச்சிலே கிளிங்க! அடடா! பேச்சா அது!
விபீஷ:- அந்தப் பாசாங்குக்காரி, பாடவும் கற்றிருப்பாள்....?
1-வது கா:- குயில் மாதிரி பாடுவாள்.
விபீஷ:- பெயர் என்ன சொன்னாய்?
1-வது கா:- பொன்னிங்க! மலையன் மகள் பொன்னி!
விபீஷ:- உம்; அவளையும், அவள் அப்பனையும் உடனே அழைத்து வாருங்கள். விபசாரம்! விபீஷணன் ராஜ்யத்தில் விபசாரம்! வரட்டும் பார்க்கிறேன் ஒரு கை.
(1-வது காலி சென்று விடவே)
விபீஷ:- பார்த்தாயா சித்ரா? இளவரசன் புத்தன், இன்ப வேட்டையாடுகிறான். பொன்னியாம் ஒரு விபசாரி, அவளோடு பொழுது போக்குகிறான். யார் தெரியுமா அந்தப் பொன்னி? பறையர் கிராமத்திலவன் மலையன் மகள். தீண்டப்படாத வம்சத்துத்தேள்!. அதன் விபசாரக் கொடுமை நறுக்க, ஆள் அனுப்பியிருக்கிறேன்.
சித்ரா:- இந்தச் செய்தி சுத்தப் பொய்!
விபீஷ:- நீ சொல்லுவாய் என்று எனக்குத் தெரியும். எப்படிப் பொய்?
சித்ரா:- இளவரசர் இம்மாதிரி காரியங்களில் உங்களைப் போலத் தலையிடமாட்டார்.
விபீஷ:- தலையிடமாட்டார். காலியிடுவார்! போ, போ, பைத்தியம்.
சித்ரா:- அப்படியே இருந்தாலும். பொன்னி ஒரு வேசியா இருக்கமுடியாது. புத்தனின் காதலியாக இருக்கலாம்.
விபீஷ:- எந்த எலியாக இருந்தாலும் சரி. இன்பபுரி சாம்ராஜ்ய சட்டப்படி, ஒரு இழிகுலப் பெண்ணை மேல் ஜாதி ஆடவர்கள் நேசிப்பது குற்றம். அதிலும் இளவரசன் நேசிப்பது மாபெருங்குற்றம். சித்ரா! நடக்கப்போவதைப் பார். பொறுத்திருந்துபார்.
(போய் விடுதல், சித்ரா பெருமூச்சு விடுகிறாள்)