பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 18 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 18

காட்சி 18

இடம்:- விசாரண மண்டபத்துக்கு வெளியே.

மூல ஸ்கேன் 68, 69, 70, 71, 72

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

விபீஷ:- இளவரசே! உங்கள் முயற்சியால் எனக்கு ஒரு நல்ல பதவி கிடைத்தது. நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

புத்த:- பறக்காதீர்! அக்கிரமம் அழியாத வரம்பெற்றதல்ல, இது அழிவின் முதல் அத்தியாயம்.

(புத்தன் போய்விடுதல்)

விபீஷ:- பிள்ளைப்பூச்சி. இதன் தலையை முதலில் கிள்ளி எறிய வேண்டும்.

(இதே காட்சியில். புத்தன்-குமரி-வீரர்கள்)

புத்த:- தீயில் விழுந்த புழு தப்பித்துக்கொண்டது ஆச்சரியம்! ஆதாரக்கடிதங்கள் அபகரித்து அந்த சித்ராவாகத்தான் இருக்க முடியும்.

குமரி:- தவறுன கருத்து. வழியில் கண்ட சித்ராவை வலுவில் அழைத்துவந்தது நான், களவாடும் நோக்கம் அவளுக்கு இருந்திருந்தால், தூங்கும்போது குடிசைக்குத் தீ வைத்திருப்பாள்.

1-வது வீ:- எப்படியோ ஒரு துரோகி பிழைத்துவிட்டான். இளவரசர் வார்த்தைக்குக்கூட மகாராஜா மதிப்பு வைக்கவில்லை.

புத்த:- சாம்ராஜ்ய சட்டப்படி மன்னர் நடந்தார். ஆதாரமில்லாமல் அவனை என்ன செய்யமுடியும்? இமயா முட்டாள். சதி செய்ததை ஒப்புக்கொண்டான் விபீஷணனும் காட்டிக் கொடுத்தான். துரோகம் வெற்றியடைந்தது.

குமரி:- தெரிந்திருந்தும், விபீஷணனை மேல் பதவிக்கு உயர்த்துவது கூடவே கூடாது. அது மாமா செய்த மாபெரும் தவறு.

புத்த:- அப்பா போக்கே அலாதி! வெறுத்ததெல்லாம் அவருக்குப் பால்! விபீஷணன் விஷப்பேச்சில் விழுந்துவிட்டார். அதையே நீதி என நம்பியும்விட்டார்,

குமரி:- விபீஷணனை விட்டுவைத்தால்......

புத்த:- விட்டுவைத்தால், முல்லைக்காட்டையே எரிக்க விட்டுவைத்ததாக அர்த்தம்! கோழிப் பண்ணைக்குக் குள்ளநரியைக் காவலுக்கு விட்டுவைத்ததாக அர்த்தம். இன்பபுரிச் சிம்மாசனத்தில், அவனை ஏற்ற விட்டுவைத்ததாக அர்த்தம்.

குமரி:- மீண்டும் அவனைப் பிடிப்பதென்றால்,......?

புத்த:- அந்தக் கடிதங்களில் இருக்கிறது அவன் வாழ்வு அவைகளை நாம் கைப்பற்றாவிட்டால், இன்பபுரியின் அழிவை அனுமதித்தவர்களாவோம்.

1-வது வீ:- அப்படியானால்?

புத்த:- நாளை பயணம், அதற்கு ஆயத்தம் செய்யுங்கள்,

(வீரர்கள் செல்ல)

குமரி:- நாம் இருவர் சென்றால் போதுமல்லவா?

புத்த:- நீ வேண்டியதில்லை. நான் மட்டும் போகிறேன்.

குமரி:- நான் வருவதால், உங்களுக்கு இடையூறு இல்லையே?

புத்த:- இருக்கிறது.

குமரி:- விபீஷணன் விஷயமாகத்தானே பயணம்......?

புத்த:- இன்னும் ஏதாவது இருக்கும்.

குமரி:- ரகசியமாக்கும்......?

புத்த:- தேவையில்லாத கேள்வி

குமரி:- வழியில் வருகிற துணையை, வேண்டாமென்று தடுப்பது......?

புத்த:- தடுப்பது சுயநலம். தடுத்தும் கேளாது?

குமரி:- என் சுயநலம். இளவரசே! நீங்கள் தனியாகச் சென்றால், எனக்கு நிம்மதி இருக்காது.

புத்த:- நல்ல கதை.

குமரி:- கதையல்ல, வாழ்வெல்லாம் உங்களுக்குத் தொண்டாற்ற நான் காணும் கனவு.

புத்த:- கனவு கனவாகவே இருக்கட்டும்.

குமரி:- என்னைப் புறக்கணிக்கிறீர்கள்.

புத்த:- உன்னையல்ல, உன் எண்ணத்தை.

குமரி:- என் எண்ணம்! அது ஆலகாலமா?

புத்த:- அமிர்தமாயிருக்கலாம். ஆனால் என் கருத்தோடு கலக்க வழியில்லை.

குமரி:- அநியாயமாக. ஒரு பெண்ணின் மனக்கோட்டைகளை மண்ணுக்குகிறீர்கள்.

புத்த:- அநியாயமாக, ஒரு பெண்ணின் மனக்கோட்டைகளை மண்ணுக்கமாட்டேன்.

குமரி:- அப்படியானால்?

புத்த:- நினைப்பை அகற்றிவிடு.

குமரி:- ஏமாற்றந்தான் எனக்கு வெகுமானமா?

புத்த:- புத்தன் ஒரு பெண்ணை ஏமாற்றமாட்டான்.

குமரி:- ஒரு வேலைக்காரிபோல உங்களோடு வரக்கூட உரிமையில்லையா?

புத்த:- வருவது அவசியமில்லை.

குமரி:- இளவரசே! விபீஷணனிடமிருந்து நான் கடிதங்களை அபகரித்துவரும்போது சொன்னீர்களே.

புத்த:- என்ன சொன்னேன்?

குமரி:- குமரிக்குத் தகுந்த பரிசு தரவேண்டுமென்று!

புத்த:- ஆமாம்.

குமரி:- அந்தப் பரிசு இப்போது வேண்டும்.

புத்த:- அப்படியென்றால்......என்ன பரிசு?

குமரி:- நான் உங்களோடு வர அனுமதி.

புத்த:- நல்ல சங்கடம். உம்....., ஆகட்டும் புறப்படு.

குமரி:- (புன்னகையோடு) மிக்க நன்றி.

(பிரிகின்றனர்)