காட்சி 17 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 17
காட்சி 17
இடம்:- விசாரண மண்டபம்
மூல ஸ்கேன் 64, 65, 66, 67, 68
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(குற்றவாளிக் கூண்டில் இமயாவும், விபீஷணனும்)
விபீஷ:- வரி அளவுக்கு மீறி வசூல் செய்ததாக ஒரு குற்றம். அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததாக ஒரு குற்றம். அரசரைக் கவிழ்க்கச் சதி செய்ததாக ஒரு குற்றம். மூன்று குற்றங்களுக்கும் நான் பொறுப்பாளியல்ல.
புத்:- ஆம். இதுவரையில் உமது கொடுமைகளை மறக்காமலிருந்த நாங்கள் பொறுப்பாளிகள்?
மகாவீரர்:- இமயா சொல்லட்டும். இந்த அக்கிரமங்கள் நடந்தது உண்மைதானே?
இமயா:- இதையெல்லாம் அக்கிரமம் என்று இவர் (விபீஷணனைக் காட்டி) சொல்லவில்லை மகாராஜா!
விபீஷ:- ஆம். அதர்மம் என்று சொன்னேன்.
இம:- இல்லை, ராஜதந்திரம் என்று சொன்னீர்!
மகா:- நாட்டு மக்களை ஆட்டுக்குட்டிகளாக நினைத்து, நரி வேலை நடத்திவருகிறீர்கள், நாசக்காரர்கள்!
விபீ:- நரி வேலை! கனவில்கூட நினைத்ததில்லை மகாராஜா. மக்களின் வாழ்வும், மன்னரின் நலமும்தான் என் இதயக்கனவு. அன்புக்குரிய பிரஜைகளை நான் அடித்துக்கூடப் பேசியதில்லை! எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று படித்தேன்.
புத்:- அதனால் நீரும் மன்னராக நினைத்தீர்.
விபீ:- பழி, வீண் பழி!
புத்:- ஏது பழி? வரி கொடுக்காதவர்களை வாட்டிக் குவித்தீர்களே அது பழி. இஷ்டத்திற்கு இணங்காத இளம் பெண்ணின் இருதயத்தில் ஈட்டி பாய்ச்சினீர்களே அது பழி. ஏன் என்று கேட்ட ஏழைகளின் வீடுகளை எரித்துச் சாம்பலாக்கினீர்களே அது பழி. (இமயாவைப் பார்க்க)
இம:- ஆம்! நான் அப்பொழுதே நினைத்தேன்.
மகா:- பேசாதீர். ராஜப் பிரதிநிதியாக உம்மை நியமித்தால், உமக்கு ஒரு பிரதிநிதி உம். இமயா! நீர் இந்தச் சிம்மாசனத்திற்கு ஆசைப்பட்டது உண்மைதானே?
இம:- எனக்கு ஆசையில்லை இவர் ஆசைப்படச் சொன்னார். நான் பட்டேன்.
விபீஷ:- மகாராஜா தயவு செய்து என் வார்த்தைகளைக் கேளுங்கள். இமயா இன்பபுரிச் சக்ரவர்த்தியாகத் திட்டம் போட்டது உண்மை. மக்களைக் கஷ்டப்படுத்தியது உண்மை. நான் எவ்வளவோ தடுத்து உண்மை நீதி நெறிகளை எடுத்துக் காட்டினேன். சாஸ்திர சம்பிரதாயங்களைச் சமர்ப்பித்துக் கெஞ்சினேன். சட்டத்தைக்காட்டி பயமுறுத்தினேன். இமயா என் வார்த்தைகளுக்குக் காதுகொடுக்கவில்லை. என் உபதேசங்களை அலட்சியப்படுத்தினார். கடவுளாணையாக நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. இந்நாடு, மக்கள் நல்வாழ்வு இவை என் மூச்சு மகாராஜா!
மகா:- சரி சதி வேலைகள் நடத்தியது?
விபீஷ:- அதில் நான் சம்பந்தமில்லை. இமயா சதிசெய்தது உண்மை, அதைத் தடுத்துப் பார்த்தேன். கேட்கவில்லை.
புத்:- துரோகி!
சபை:- துரோகி! துரோகி!
விபீஷ:- துரோகி! ஆலோசித்துப் பேசுங்கள். யார் துரோகி? நிரபராதியான என்னைக் கூண்டில் நிறுத்திவிட்டு, அநீதி பேசுகிறீர்கள் துரோகிகள்! அரசே! இந்நாட்டுச் சட்டப்படி கேட்கிறேன். நான் துரோகி என்பதற்கு என்ன ஆதாரம்?
புத்:- (சிரித்து) ஆதாரம்! மாணிக்கக் கோட்டையின் காவலன் மாதவனுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் சிங்கநாகன் உமக்கு எழுதிய உறுதிமொழிப் பத்திரம். எல்லப்பன் தீட்டிக் கொடுத்த கோட்டையின் ரகசிய வழிகள். போதுமா ஆதாரம்?
விபீஷ:- சபாஷ்! சரியான ஜோடனை! சக்ரவர்த்தி அவர்களே! இளவரசா இந்த ஆதாரங்களைக் காட்டிவிட்டு, அதே கையால் என் தலையை வெட்டி எறியட்டும்.
புத்:- விபீஷணரே! வீணே குதிக்காதீர்; உம்.....குமரி! (குமரி பெட்டியைத் தருதல்) இனி இந்த ஆதாரங்களோடு பேசும்.
(பெட்டியைத் திறக்கவே விபீஷணனின் வெறுஞ் சிரிப்பு)
விபீஷ:- பூச்சாண்டி காட்டுகிறீர்! ஹ ஹ ஹா! இளவரசே! இரண்டு பொய்க் கடிதங்களாவது தயாரித்து வைத்திருக்கக் கூடாதா?
மகா:- இளவரசு?...... (இளவரசன் திகைப்பு)
புத்:- மகாராஜா! கடிதங்கள் கைதவறிவிட்டன.
விபீஷ:- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்!
இம:- சரியான வார்த்தை! இவர் சொல்வது சரியான வார்த்தை.
மகா:- பேசும் இமயா! இன்று முதல் நீர் ஆயுள் தண்டனை அனுபவிக்கவேண்டும்.
இம:- ஆயுள் தண்டனையா?
மகா:- ஆம். ஆட்சிநடத்த அருகதையில்லாமல், மக்களை மிருகங்களாக நடத்தியிருக்கிறீர். உமது பொறுப்பை உணராமல் உல்லாச கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறீர். எனக்கெதிராகச் சதியும் நடத்தியிருக்கிறீர்.
இம:- இல்லவே இல்லை சாட்சி வேண்டுமானால் விபீஷணரையே கேளுங்கள்.
விபீஷ:- நான் அப்பொழுதே தடுத்தேனே, கேட்டீரா? மன்னரைக் கொல்லவே திட்டம் போட்டீரே. நான் இல்லாவிட்டால், குறுவாளே வடிவான கண்ணியமிகுந்த எங்கள் மகாவீர மகாராஜாவை மாளச் செய்திருப்பீரே!
மகா:- மகா பாதகன்!
இம:- நானு?
விபீஷ:- ஆமாம், நீரேதான். உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்த நீரேதான். மகாராஜாவின் உப்பைத்தின்று அவருக்கே துரோகம் நினைத்த நீரேதான்.
மகா:- இமயாவுக்கு விலங்கிடுங்கள். விபீஷணர் குற்றமற்றவர் இமயாவுக்குப் பதில், அவர் இன்று முதல் முல்லைக்காட்டின் ராஜப் பிரதிநிதியாக நியமிக்கப்படுவார்.
விபீஷ:- வாழ்க மகாராஜா! வாழ்க நீதி! சபையோர்களே! வேம்பொடு சேர்ந்த கரும்பும் கசக்கும் என்பதுபோல், இமயா
வோடு சேர்ந்த எனக்கும் இழிவான பெயர் கிடைத்து விட்டது. ஆனால் கடவுளறிய நான் நிரபராதி, என் உடலில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும், இந்நாட்டுக்காகப் பயன்படும். என் கடைசி மூச்சு உள்ளவரையில், இத் தேசத்திற்காக உழைப்பேன். வாழ்க இந்நாட்டு வளம்! வாழ்க மன்னர்! வாழ்க இளவரசர்.
(சபை கலைகிறது)