காட்சி 16 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 16
காட்சி 16
இடம்:- பொன்னியும் புத்தனும் முன்பு சந்தித்த அதே இடம்.
மூல ஸ்கேன் 59, 60, 61, 62, 63, 64
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(பொன்னியைத் தேடிக்கொண்டு புத்தன் வருகிறான். புத்தன் நினைவில் பொன்னியும் வருகிறாள். ஒருவரையொருவர் கவனிக்கவில்லை. பொன்னி முதல்நாள் புத்தன் நின்ற இடத்தில் நின்று பெருமூச்சு விடுகிறாள். எதிர்பாராமல் இருவரும் பார்த்துத் தங்கள் செய்கைக்கு நாணமடைகிறார்கள்)
புத்த:- பொன்னி!
பொன்:- எங்கே இவ்வளவு தூரம்?
புத்த:- இல்லை. ஒரு கனவு அதில் கலந்து ஓடிவந்தேன்.
பொன்:- கனவா!
புத்த:- ஆம். உன்னை மீண்டும் அந்தக் குண்டர்கள் தூக்கிச் செல்வது போலவும், நீ என்னை அழைப்பது போலவும் பயங்கரமான காட்சி!
பொன்:- அய்யோ! கனவு பலித்துவிட்டது. அதோ மறுபடியும் அவர்கள்!
புத்த:- (பதறி) எங்கே?
பொன்:- அதோ மறைந்து மறைந்து வருகிறார்கள். (புதரைக்காட்டுகிறாள். புத்தன் புதரிடம் ஓடுகிறான். பொன்னி அவனை ஏமாற்றியதற்காகச் சிரிக்கிறாள். ஏமாற்றமடைந்து அங்கிருந்தபடியே)
புத்த:- பொன்னி! உன் விளையாட்டு வீணாகிவிட்டது. இதோ ஈட்டியால் என் மார்பைக்குறிவைக்கிறேன். அசைந்தால் கொன்றுவிடுவதாக ஜாடை காட்டுகிறேன்.
பொன்:- ஆ! ஓடி வாருங்கள். (தவிக்கிறாள்)
புத்த:- ஓடுவதா? பொன்னி! மார்பில் ஈட்டி தாங்கி மடிவேன். புறமுதுகு காட்டமாட்டேன்—(புதரை நோக்கி) உம்.... குத்து, ஏன் பயமுறுத்துகிறாய்? உன் ஈட்டி என் இதயத்தைப் பிளக்கும், அவ்வளவுதானே! உம்...... விட்டெறி. வீரனாகச் சாகிறேன். (திடுக்கிட்ட பொன்னி, அய்யோ என அலறி ஓடிவந்து புத்தனைப் பிடித்துக்கொள்ளவே, புத்தன் இடி இடியெனச் சிரிக்கிறான்)
புத்:- ஒரு பொய், மூன்று பொய்யாக முளைத்துவிட்டது!
பொ:- முதல் பொய் எது?
புத்:- நான் கனவு கண்டேனே அது!
பொ:- உங்கள் வார்த்தைகள் எல்லாமே இப்படித்தானா?
புத்:- விளையாட்டு வேளையில் மட்டும். பொன்னி! உண்மையாகவே அவர்கள் என்னை ஈட்டியால் குத்தியிருந்தால்....?
பொ:- அந்த ஈட்டியில் இரத்தம் காய்வதற்குள், அது என் மார்பில் பாய்ந்துவிடும்!
புத்:- நான் சாவதில் உனக்கேன் பொன்னி கவலை?
பொ:- என்னை அவர்கள் தூக்கிச் செல்வதில் உங்களுக்கேன் கவலை?
புத்:- கண்ணே இமைகள் காப்பது இயற்கை;
பொ:- இமையில் பாயும் ஈட்டி, கண்ணில் பாய்வதும் இயற்கை.
[காதல் கீதம்]
புத்:- பொன்னி ....
புத்:- பொன்னி! நம்மை யாரும் எப்பொழுதும் பிரிக்க முடியாதல்லவா?
பொ:- முடியும். நம்மைப் பிரிப்பதற்கு ஒரு பயங்கரமான கருவி இருக்கிறது.
புத்:- கருவியா?
பொ:- ஆம், அது என் உயிரையே உலகத்திலிருந்து பிரித்துவிடும்.
புத்:- எது பொன்னி! அவ்வளவு பயங்கரமான கருவி?
பொன்:- உங்கள் மறதி,
புத்:- மறதி, மானிலத்தில் பகல் வர மறந்துவிட்டால், மாவீரன் வாளை எடுத்துப்போக மறந்துவிட்டால், மல்லிகை மணம் வீச மறந்துவிட்டால், பொன்னியைப் புத்தன் மறந்து விடுவான்!
பொ:- அன்பா! என்னைப் பிரியவே மாட்டீர்களே?
புத்:- பிரிவதா மணியை விட்டு ஒலி பிரியுமா? ஆனால் இப்பொழுது மட்டும் ஒரு அவசர வேலை.
பொ:- ஆரம்பித்து விட்டீர்களே!
புத்:- இல்லை. போனதும் திரும்பிவிடுவேன்.
பொ:- அப்படி என்ன அவசரம்?
புத்:- அரசாங்க சமாச்சாரம்.
பொ:- அரசாங்கமா! நீங்கள்....?
புத்:- அரசகுமாரன்.
பொ:- அரசகுமாரர்! (தனக்குள்) ஆபத்தான காதல். ஆழம் தெரியாது கால் வைத்துவிட்டேன் அரசகுமார்.....
புத்:- (கலங்கி) பொன்னி! அரசகுமாரன் என்றால் ஏன் அவ்வளவு அருவருப்பு?
பொ:- இல்லை. என் காதல், காலப்பனிபோல் கலைந்து விடுமோ என்று கலங்குகிறேன்.
புத்:- அரசகுமாரன் என்றால் அவனுக்குக் காதலிக்கத் தெரியாது. இது அம்மையார் அபிப்பிராயம், அவ்வளவுதானே?
பொ:- காதலிக்கிற அளவுக்குக் கைவிடவும் தெரியும்.
புத்:- அப்படிக் கதைகள் கேட்டிருப்பாய் பொன்னி! காலமெல்லாம் கரைபுரண்டு வந்தாலும், நம் காதல் அணையைக் கரைக்க முடியாது.
பொ:- அணையில் அந்தஸ்து என்னும் பிளவு ஏற்பட்டால்?
புத்:- தியாகத்தால் அடைத்துவிடலாம். காதலுக்காகச் செய்யும் தியாகத்தில், காதலர் வேண்டுமானால் சாவார்கள். காதல் சாகாது. பொன்னி! நாம் வீணையும் நாதமும்.
பொ:- அன்பெனும் தந்தி அறுந்துவிட்டதே அன்பா?
புத்:- தடாகத்து நீரும், அதன் தெளிந்த அமைதியும் போல வாழலாம்.
பொ:- காலம் அதில் கல்லை வீசிவிட்டதே கண்ணா?
புத்:- இந்தா, இந்தக் கணையாழி நம் காதலின் அறிகுறி. மலைகள் உருண்டுவந்து எதிர்த்தாலும் நிலைகுலையாது நம் காதல். என் மகுடத்தின் மேல் ஆணை. (கணையாழியை விரலில் மாட்டுகிறான்.)
பொ:- சகுந்தலை கதையாகிவிட்டதே?
புத்:- நான் என்ன துஷ்யந்தன்போல குருடனா? அல்
லது துரோகியா? கணையாழி காணாமற் போனாலும், நீ என் காதலிதான். நான் வருகிறேன் பொன்னி!
[பொன்னியின் சேலைத் தலைப்பில் புத்தன் பிரிகிறான்]