பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 15 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 15

காட்சி 15

இடம்: விபீஷணன் மண்டபம்.

மூல ஸ்கேன் 53, 54, 55, 56, 57, 58, 59

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[சித்ரா இருக்கிறாள்]

விபீஷ:- வீரன் மனைவி வெறுங்கையோடா திரும்புவாள்? வேங்கையின் பத்தினி வெள்ளாடாக இருக்க முடியுமா?

சித்ரா:- அப்படித்தான் சொன்னீர்கள்.

விபீஷ:- யார் என்ன சொன்னீர்கள்?

சித்ரா:- பாம்பின் மனைவி பாம்புதான் என்று, இளவரசர் சொன்னார்!

விபீஷ:- இளவரசன்! இந்தப் பாம்பின் குணந்தெரியாத பாலகன், பாம்பைப் பிடிக்க வந்தவன் படும் பாட்டைப்பார்.

சித்ரா:- நான் என் வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேனல்லவா?

விபீஷ:- வார்த்தையை மட்டுமா? என் வாழ்வு, வாழ்வின் லட்சியம், எல்லாவற்றையும் காப்பாற்றிவிட்டாய்.

சித்ரா:- அன்பா!

விபீஷ:- சித்ரா! என் தயக்கம்? என்ன கேட்கிறாய்?

சித்ரா:- சில கேள்விகள். பதில் வேண்டும்.

விபீஷ:- பரீட்சை வைத்திருக்கிறாயா? கேள்,

சித்ரா:- இந்திரன் அயோக்கியனும்! அதற்குக் காரணம்?

விபீஷ:- காமவெறி என்பார்கள்.

சித்ரா:- இராவணன் தம்பியின் பெயர்?

விபீஷ:- கும்பகர்ணன்.

சித்ரா:- அவனுக்கு இளையவன்?

விபீஷ:- விபீஷணன்!

சித்ரா:- அவனைச் சிலர் வெறுக்கிறார்களே, காரணம்?

விபீஷ:- அண்ணனைக் காட்டிக்கொடுத்தானாம்.

சித்ரா:- இல்லை அதைவிட மேலான, அருமையான நாட்டைக் காட்டிக்கொடுத்தானாம்.

விபீஷ:- சித்ரா! பீடிகை பலமாக இருக்கிறதே!

சித்ரா:- அன்பா! உங்கள் வாழ்வில் வளவு ஏற்பட்டால் என் வாழ்வு வாடிவிடுமல்லவா?

விபீஷ:- நல்ல கேள்வி. நல்ல பதில். சித்ரா! சொல்ல வந்ததைச் சுருக்கமாகச் சொல்.

சித்ரா:- இனிமேலாவது......

விபீஷ: மேலாவது, கீழாவது?

சித்ரா:- துரோகம் பாவமல்லவா?

விபீஷ:- உம்..... வேதாந்த விசாரணை! பிறகு?

சித்ரா - பயங்கரமான இந்தச் சதிவேலை நமக்கே ஆபத்தாக முடிந்துவிட்டால்?

விபீஷ:- சதிவேலை—சித்ரா! சிம்மாசனத்திற்காகப் படை யெடுப்பதும்—ஆளும் அரசனை மாளச் செய்வதும் சதியல்ல; சரியான ராஜதந்திரம். நான் செய்வது சரி. அன்று சந்நியாசிகளாகத் திரிந்து பாண்டவர்கள் கெளரவர்களின் நாட்டைக் கைப்பற்றியதற்கு என்ன பெயர்?

சித்ரா:- அது அவர்களுக்குச் சொந்தமான நாடு.

விபீஷ:- சூதில் தோற்றபிறகு சொந்தங் கொண்டாடுவது சரியான சூதாட்டம். சித்ரா! உன் வாதப்படியே பார்த்தாலும் இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் மகாவீரனுக்கு மட்டும் மகாராஜப் பட்டம் ஏன்?

சித்ரா:- நீங்கள் விரும்புவதும் அந்த மகாராஜப் பட்டம் தானே?

விபீஷ:- சித்ரா! பேசாமலிரு. அரசியல் விஷயங்களில் உனக்கு அனுபவம் போதாது.

சித்ரா:- நீங்கள் தவறி நடந்தால் நான் சொல்லக் கூடாதோ?

விபீஷ:- கூடாது. திரௌபதியைப் பார். அவளையே பந்தயமாக வைத்துச் சூதாடினார்கள். அதில் தோற்றால், தான்

துரியோதனனுக்கு அடிமையாகவேண்டும் என்பது தெரிந்தும் சும்மா இருந்தாள்.

சித்ரா:- கதை வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள்,

விபீஷ:- பேசாதே! அடுத்த மாதம் நீ இளவரசியின் மகாராணி, நான் மகாராஜா!

“இமயா பராக்”

[என்று சேவகன் சொல்ல, சித்ரா போய்விடுகிறாள்]

இமய:- விபீஷணரே! ஒரு புதுமையான பெண் வந்திருக்கிறாள். அடடா! அவள் என்னென்ன வித்தை செய்கிறாள்.

விபீஷ - அது யார் அவள்?

இமய:- நல்ல அழகு, நல்ல முகம், நல்ல உடல்!

விபீஷ:- எங்கே அவள்?

இமா:- அவள் பேச்சு வீணையின் ஓசை! அவள் பார்வை குளிர்ந்த நீரோடை?

விபீஷ:- இப்பொழுது எங்கே இருக்கிறாள்?

இமய:- அவள் நடக்கும்போது அசல் மயிலின் சாயல்தான்.

விபீஷ:- அடக்கம்மே! அவள் எங்கே இருந்து தொலைக்கிறாள்?

இமய:- இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். மிக முக்கியமான விஷயம்.

விபீஷ:- என்ன அது?

இமய:- நடனமாடிக்கொண்டே மதுவைக் கோப்பையில் மொண்டு மொண்டு தருகிறாள் அந்த மங்கையர்க்கரசி.

விபீஷ:- இமயா! இனிப் பொறுக்க முடியாது. அவளைக் காணவேண்டும். ஒரே வார்த்தையில் பதில்; எங்கே அவள்?

இமய:- இதோ வருவாள் (சேவகனிடம்) ஏய்! அழைத்து வா அவளை. (சேவகன் போக ஆரம்பிப்பதற்குள் இளவரசர் புத்தனும், வீரர்களும், குமரியும் பிரவேசிக்கிறார்கள்)

இமய:- (திகைத்து) இளவரசே! அமருங்கள், அமருங்கள்.

விபீஷ:- அமருங்கள். (உபசரிக்கிறாள்)

இமய:- இளவரசே! என்ன திடீர் விஜயம்?

புத்த - உங்களை, அரண்மனை விருந்துக்கு அழைக்க வந்தேன்.

இமய:- விருந்தா? (ஆசையுடன்)

புத்த - ஆம். உங்கள் ஆட்சி முறையைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்துள்ள விருந்து.

இமய:- அதற்கு இளவரசரா வரவேண்டும்? ஓலை அனுப்பினால் ஓடி வருகிறேன்.

புத்த:- ராஜப் பிரதிநிதி இமயாவை அப்படி அலட்சியமாகவா அழைப்பது?

இமய:- உம்...... ஆஹா! என் பாக்கியமே பாக்கியம்.

புத்த:- நீரே தேடிக்கொண்ட பாக்கியம். கையை நீட்டும்.

(சிப்பாயை ஜாடை காட்ட, விலங்கு கண்ட இமயா)

இமய:- ஆ! என்ன?

விபீஷ:- இளவரசர் விளையாடுகிறீர்!

புத்த:- ஆமாம். இதுகூட உம்முடைய விளையாட்டுப் பொம்மைதான்! மாட்டுங்கள், அவருக்கும் நடக்கட்டும். உங்கள் இருவரையும் கைது செய்திருக்கிறேன்.

விபீஷ:- இருவரையுமா?

இமய:- இருவரையுமா? விபீஷணன் மட்டுந்தான் குற்றவாளி.

விபீஷ:- (இமயாவை முறைத்துவிட்டு) இளவரசே! இதென்ன நாடகம்?

புத்த:- நாடகமல்ல நடிகரே! இது விபீஷண புராணம் சிறப்புப் படலம்.

விபீஷ:- கேலி வேண்டாம். கேள்விக்குப் பதில்.

புத்த:- பதில்! உங்கள் பயங்கர ஆட்சியில் படுகொலைக்கு ஆளான பட்டாளிகளின் பிணங்கள் சொல்லும்! பால் கொடுக்கும் தாய் மாண்டுகிடக்க, பக்கத்தில் அழுது அழுது பிராணனை விட்ட பச்சைக் குழந்தைகளின் பரிதாப முகங்கள் சொல்லும்! பதவி மோகம் தலைக்கேறி ஊராள யோக்கியதையற்ற நீங்கள், பாராளத் திட்டம் போட்டு அதற்கென குவித்திருக்கும் சதிக் கடிதங்கள் சொல்லும்!

விபீஷ:- நல்ல கற்பனைகள். நாட்டில் நடக்காத கற்பனைகள். இளவரசே! வீண் பழிகளை வாரி இறைக்காதீர், ஆண்டவனுக்கு அடுக்காத அக்கிரம வார்த்தைகள் அள்ளிவீசாதீர்.

புத்த:- ஆண்டவன்—உன் அக்கிரமத்துக்கு அந்தத் திரையைப் போடாதே! கிழிந்துபோன திரை, அப்பாவி இமயாவுக்கு ஆசைகாட்டி அரசியல் பொம்மலாட்டம் ஆட்டியது போதும்.

இமய:- இளவரசே! எல்லாம் இவர் ஏற்பாடுதான், எனக்கொன்றும் தெரியாது.

விபீஷ:- உஸ் .... கோழையே! பேசாதீர்.

இமய:- பேசவில்லை.

விபீஷ:- பச்சைக் குழந்தைகளாம், பட்டாளிகளாம், பரிதாபமாம், சதியாம், வேலையாம்! புதுப்புது வேடங்கள் இந்த நிரபராதிகளிடத்தில்.

புத்த:- நிரபராதிகள்! பச்சை ருசி பார்த்த வேங்கை, ரத்த நாக்கோடு வேதாந்தம் பேசுகிறது! விபீஷணரே! வரி கொடுக்காதவரை வாழ விடாதே என்று ஆணையிட்ட நீர் நிரபராதி!

விபீஷ:- குற்றவாளி என்பதற்கு என்ன ஆதாரம்?

புத்த:- ஆதாரமா? அதை விசாரணைமண்டபத்தில் அளிக்கிறேன். உம் ..... கொண்டுபோங்கள்!

(வீரர்கள் இழுத்துச் செல்ல)

புத்த:- (குமரியிடம்) குமரி! நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் பிறகு வருகிறேன்.

குமரி:- தனியாகவா?

புத்த:- ஆமாம்.

(போகின்றனர்)