காட்சி 12 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 12
காட்சி 12
இடம்: ஆற்றோரம்
மூல ஸ்கேன் 46, 47, 48, 49, 50, 51
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(மாலை நேரம். குமரி பாடிக் கொண்டிருக்கிறாள். சித்ரா பல்லக்கில் வருகிறாள். இருவரும் சந்தித்துவிடுகிறார்கள்)
சித்ரா:- மின்னல்!
குமரி:- அம்மா! எங்கே இந்நேரத்தில்?
சித்ரா:- அடுத்த கிராமத்தில் தாயார் வீடு, அழைத்திருக்கிறார். அதற்காகப் புறப்பட்டேன். பாதையில் இருட்டிவிட்டது.
குமரி:- புலி அதிகம் அம்மா!
சித்ரா:- ஆமாம். என்ன செய்வது?
குமரி:- அம்மா! காலையில் போகலாம்.
சித்ரா:- நானும் அதைத்தான் நினைத்தேன். ஆனால் தங்குவது?
குமரி:- எங்கள் ஜாகை கிட்டத்தான் இருக்கும்மா. அங்கே தங்கலாம். ஒருவேளை ஏழைக் குடிசை உங்களுக்குப் பிடிக்காது.
சித்ரா:- அதெல்லாம் பார்த்தால் காரியம் நடக்குமா?
குமரி:- நல்லவேளை, நான் பார்த்தேன். இல்லாவிட்டால் காட்டுப் பாதையில் போய் கஷ்டப்படவேண்டும்.
சித்ரா:- ஆமாம். என் நல்ல காலந்தான் உன்னைப் பார்த்தேன்.
குமரி:- அதெல்லாம் கடவுளே காட்டிவிடுவாரம்மா. அன்னைக்கு கடல்மாதிரி என் மனசு கொந்தளிக்கும்போது காப்பாத்தினீங்களே; நீங்கள் செய்த உதவியை மறக்க மாட்டேன்.
சித்ரா:- இப்போது நீ செய்வதுதான் பெரிய உதவி. நீ தென்படாவிட்டால் எங்கெங்கே திண்டாடவேண்டும்தெரியுமா?
குமரி:- சரி புறப்படுங்கள் அம்மா. அதுதான் எங்கள் குடில்.
[பல்லக்குப் புறப்படவே திரைமாறுகிறது.முகாம் உட்புறம் புத்தனுக்கும், மற்றவர்களுக்கும் சித்ராவை அறிமுகப்படுத்திக் கொண்டே குமரி முதலியோர் வருதல்]
குமரி:- இந்தப் புண்ணியவதிதான் என்னைக் காப்பாத்தினங்க.
புத்த:- விபீஷண எஜமானுடைய மனைவியாவார்க்கும். வணக்கமுங்க.
[சித்ராவிடம் புத்தனைக்காட்டி]
குமரி:- இவரு எனக்கு மச்சான் முறைங்க.
[புத்தன் முகத்தில் மாறுபாடு]
சித்ரா:- பார்த்தாலே புரிகிறது!
(பழங்கள் முதலிய ஆகாரங்களைக் கொடுத்துக் கொண்டே)
குமரி:- ஏழை வீட்டுச் சாப்பாடு.
சித்ரா:- நான் சாப்பாட்டை உத்தேசித்து வரவில்லை. உங்கள் அன்பு இருந்தால் போதும்.
(சாப்பிட்டானதும் உள்ளே சித்ராவுக்குப் படுக்கையை விரித்துக்கொண்டே)
குமரி:- நெருப்புக்கோழியை மயில் கல்யாணம் பண்ணிக்கிட்டமாதிரி, நீங்க போயி அவரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டீங்கம்மா!
சித்ரா:- என்ன செய்வது? என் தலையில் கடவுள் அப்படி எழுதிவிட்டான்.
(சித்ரா படுக்கிறாள். வெளியே புத்தனும் வீரர்களும்)
1-வது வீ:- எனக்கென்னமோ சந்தேகமாயிருக்கிறது.
(குமரி வருகிறாள்)
குமரி:- சந்தேகத்திற்கு அவசியமில்லை.
புத்த:- வெடிமருந்துச் சாலையில் நெருப்புக்கு இடந்தருவது தவறு.
குமரி:- நிறை நெருப்பு என்கிறீர்கள். (சித்ரா படுக்கையை விட்டு எழுந்து கேட்டல்)
புத்த:- நீர் - நெருப்பு, இரண்டுமே வெடிமருந்துக்கு விரோதிகள்தான்.
1-வது வீ:- என்ன இருந்தாலும் விபீஷணன் மனைவிதானே?
குமரி:- விபீஷணன் விஷப்பொய்கை. சித்ரா அன்பு ஊற்று.
(உள்ளே)
சித்ரா:- (தனக்குள்) இவள் நம்பிக்கையில் கல்லைப் போடுவதா? பாவம், மாசற்ற மல்லிகை மலர்.
விபீஷணன் குரலும் நிழலும்:-
“ஆம். மலரைக் காப்பாற்றினாய், மணவாளனைக் காட்டிக் கொடுத்தாய்.”
சித்ரா:- இல்லை. என் அன்பரைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்.
(வெளியில்)
புத்த:- உம், பாம்பின் மனைவி பாம்புதான்.
குமரி:- அப்படியிருந்தால் என்னைக் காப்பாற்றியிருக்க மாட்டாள். நீங்கள் நம்புங்கள் இளவரசே!
(உள்ளே)
சித்ரா:- களங்கமற்ற இந்த உள்ளத்தை எப்படி ஏமாற்றுவது? முடியாது, அன்பா! என்னை மன்னித்துவிடுங்கள்.
விபீஷணன் குரலும் நிழலும்:-
“மன்னிப்பதென்ன? மகுடத் தைக் கைப்பற்றச் சதி செய்த தாக நாளை வழக்கு; மரண தண் டனை அதற்குத் தீர்ப்பு”
சித்ரா:- பயங்கரமான தீர்ப்பு! அன்பா! நீங்களில்லாமல் சித்ராவுக்கு வாழ்வு ஏது?
(வெளியே)
குமரி:- சித்ரா, குழந்தை மனம் படைத்தவள். கபடம் இன்னதென்றே தெரியாது. அவளை நீங்கள் நம்பவேண்டும்.
(உள்ளே)
சித்ரா:- குழந்தை மனம்! எனக்கா அவளுக்கா? சூது தெரியாத பெண், இவளிடம் சூழ்ச்சியை ஆரம்பிப்பது?
(தேடித் தேடிப் பெட்டியைத் திறந்து கடிதங்கள் எடுத்தவள், மீண்டும் வைக்கிறாள்)
விபீஷணன் குரலும் நிழலும்:-
“என்னை உயிரோடு காணவேண்டுமானால். கடிதங்களை மீண்டும் கைப்பற்றியாகவேண்டும்”
[கடிதங்களை எடுத்து ஒளித்துப் பெட்டியில் வெற்றுக் கடிதச்சுருள்களை வைத்துவிட்டு, பெட்டியை முன்போல் மூடிவிடுகிறாள். படுக்கையில் படுத்துத் தூங்குவதுபோல் பாசாங்கு செய்கிறாள். புத்தன் குமரி முதலியோர் உள் வந்து படுக்கிறார்கள்]