காட்சி 11 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 11
காட்சி 11
இடம்: விபீஷணன் தனியறை
மூல ஸ்கேன் 41, 42, 43, 44, 45, 46
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(விபீஷணன் "ஹ! ஹ! ஹ!" என்ற உரத்த குரலில் சிரித்தபடி திரை ஆரம்பம். சித்ரா கோபமாக நிற்கிறாள்)
விபீஷ - சித்ரா......வா.
சித்ரா:- போதும், சித்ராவின் வாழ்வைச் சிதைத்தது.
விபீஷ:- சினம் பொல்லாதது. பஞ்சமா பாதகங்களில் அது ஒன்று.
சித்ரா:- பஞ்சமா பாதகம்! அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் ஆசை மகுடைப் பிறந்த நீங்கள், பஞ்சமா பாதகத்தைப்பற்றி பேசுகிறீர்கள்.
விபீஷ:- என்ன! அநியாயமாவது அக்கிரமமாவது. அப்படி என்றால்?
சித்ரா:- பசப்பாதீர்கள்! பச்சைக் குழந்தைகளின் பரிதாப மரணத்துக்குக் காரணமாய் இருந்துவிட்டுப் பசப்பாதீர்கள்! பருவ மங்கைகளின் பரிசுத்த வாழ்வைப் பாழ்படுத்திவிட்டுப் பசப்பாதீர்கள்!
விபீஷ:- அட ஆண்டவனே.
சித்ரா:- ஆண்டவன் கேட்டதாயிருந்தால் உலகத்தில் கொடுமையே முளைக்காதே. ஆண்டவன் குருடன் — அல்லது செவிடன் — அல்லது ஊமையாக இருக்கவேண்டும்.
விபீஷ:- உம்.....! ஒவ்வொன்றுக்குச் சொல்! எண்ணிப் பார்க்கிறேன்.
சித்ரா:- எண்ணிப்பாருங்கள், உங்கள் காமவெறிக்கு ஆளாகி வாழ்விழந்த கன்னிப் பெண்கள் எத்தனையோ? எண்ணிப் பாருங்கள்.
விபீஷ:- கற்பழித்தேனா? இராமனைப்போல் ஏகபத்தினி விரதனையா நான்?
சித்ரா:- இராமனென்ன? கற்பைக் காப்பாற்றுவதில் நீங்கள் இந்திரனுக்கு அண்ணனுயிற்றே. தெரியும்.
விபீஷ:- பெண்கள் அகல்யாவாக இருந்தால் ஆண்களும் இந்திரராக இருக்கவேண்டியதுதானே.....
சித்ரா:- கதை கிடக்கட்டும், உங்கள் காமசேஷ்டைகள் எவ்வளவு கொடுமைகளைச் சிருஷ்டிக்கின்றன. யோசித்துப் பாருங்கள்.
விபீஷ:- என்ன சித்ரா! விளங்காத பாஷைகளே அள்ளி வீசுகிறாய். காமசேஷ்டையாவது, கொடுமையாவது, நானாவது செய்யவாவது, நான் ஏக பத்தினிக் கொள்கையில் சாக்ஷாத் பரந்தாமன்.
சித்ரா:- பரந்தாமன் கொள்கையை கோபிகா ஸ்திரீகளிடமல்லவா கேட்கவேண்டும்!
விபீஷ:- சித்ரா நீ என்னதான் சொல்கிறாய்? உன் கணவன் விபீஷணன் காமாந்தகாரன், காதகன், கடையன், இதுதானே உன் தீர்ப்பு?
சித்ரா:- தீர்ப்பு, இந்த மோதிரத்தைக் கேளுங்கள் சொல்லும்.
விபீஷ:- (திகைத்து) இந்த மோதிரம். (விரல்களத் தடவித் தேடுகிறான்.)
சித்ரா:- தெரு நடனக்காரிக்குப் போட்டமோதிரமே, அந்த திவ்ய மோதிரம்.
(விபீஷணன் ஸ்தம்பித்து நின்றதும், இரவு நினைவுகள் சில உருண்டோடுதல், மயக்கம் தெளிந்தவனாய்.)
விபீஷ - ஏமாற்றம்! எங்கே அவள்?
சித்ரா:- அவள் அப்பொழுதே பறந்துவிட்டாள்.
விபீஷ:- இரு கள்ளிகளும் என்னைச் சதிசெய்திருக்கிறீர்கள்.
[சித்ரா கலகல, விபீஷணன் ஆத்திரம், பயங்கரமான அமைதி நிலவுகிறது. இரு காவிகள் வருதல்.]
1 வது கா:- எஜமானி! நம்மிடமிருந்த சதிக் கடிதங்கள் புத்தனிடம் சிக்கிவிட்டன.
விபீஷ:- புத்தனா? என்ன உளறுகிறாய்?
2 வது கா.- ஆர்! இளவரசர் மாறுவேடத்தில் துப்பறிகிறார். தெரு நடனக்காரி வேடத்தில் ஒரு பெண் கடிதங்களை அபகரித்திருக்கிறாள். (விபீஷணன் மனதில் புயல்.)
விபீஷ:- சித்ரா! சரியான துரோகம் செய்துவிட்டாய். உம். சிங்கத்தின் குகைக்குள்ளேயே சதிநடந்துவிட்டது. சதியை நடத்தியவள் என் மனைவி எதிரியின் கையாள். பத்தினிபோல் வேஷம் போட்ட பாசாங்குக்காரி.
சித்ரா:- வீண் பழி.
விபீஷ:- விஷத்திடாகமே! பேசாதே! விபசாரிகூடத் தன் கணவனை இப்படிக் காட்டிக் கொடுக்கமாட்டாள். என் வாழ்வுக்குத்துணை என்று வந்த வஞ்சகி! என் வாழ்வையே இருளாக்கி விட்டாய் துரோகி!
சித்ரா:- துரோகி! நான் துரோகியா?
விபீஷ:- யாரைக் கேட்கிறாய்? உன் கழுத்தில் பிரகாசிக்கும் அந்தத் தாலியைக் கேள்! முகத்தில் பூசியிருக்கிறாயே! அந்த மஞ்சளைக் கேள்! நெற்றியில் பொறித்திருக்கிறாயே அந்தப் பொட்டைக் கேள்! யாரைக் கேட்டாலும் ஒரே பதில், கணவனைக் காட்டிக் கொடுத்தவள். துரோகி!
சித்ரா:- சுவாமி! நான் காட்டிக்கொடுக்கவில்லை.
விபீஷ - கடிதங்களை மட்டும் எடுத்துக் கொடுத்தாய் சித்ரா! நீ இந்த வேலை செய்வதைவிட விஷத்தை என் உணவில் கலந்திருக்கலாம். நான் தூங்கும்போது என் தலையைத் துண்டித்திருக்கலாம். அல்லது அன்பாக உன்னோடு கொஞ்சும் போது என் நெஞ்சை நெறித்திருக்கலாம்.
சித்ரா:- சுவாமி! எனக்கு ஒன்றுமே தெரியாது!
விபீஷ:- தெரியாது. தெருப்பாடகி போல இரவெல்லாம் என்னோடு நடித்திருக்கிறாயே, இதுகூடத் தெரியாதா?
சித்ரா:- நடித்தது உண்மை, ஆனால்......
விபீஷ:- கடிதங்களைக் கைப்பற்றவில்லை கைகாரி!
சித்ரா:- அவள் களவாடியிருக்கலாம். நான் கவனிக்கவில்லை.
விபீஷ: இரவு, என் ஆசையில் குறுக்கிட்டு அதை அரும்பிலேயே அழித்தாய் தங்க வீணையை மீட்டும்போது அதன் தந்திகளை அறுத்து விட்டாய். அவளைத் தப்பி ஓடச் செய்தாய்.
சித்ரா:- உங்கள் காமவெறியில், களங்கமற்ற ஒரு மலர், கருகிவிடாமல் காப்பாற்ற நினைத்தேன்.
விபீஷ:- ஆம். மலரைக் காப்பாற்றினாய். மணவாளனைக் காட்டிக் கொடுத்தாய். வேறு பெண்ணை விரும்பினேன் என்பதற்காகத்தானே இந்த விபரீதங்கள்?
சித்ரா:- சுவாமி!..... (அழுதல்)
விபீஷ:- பழங்காலப் பத்தினிகளின் பண்புகளைப் படித்துப் பார். ரோகம் பிடித்த கணவனின் மோகம் தணிப்பதற்காக அவனைத் தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி எங்கே? நாக சர்ப்பத்திலும் கொடிய நீ எங்கே?
சித்ரா:- மன்னித்து விடுங்கள்.
விபீஷ:- மன்னிப்பதென்ன, மகுடத்தைக் கைப்பற்ற சதி செய்ததாக நாளை என் மேல் வழக்கு. மரண தண்டனை அதற்குத்தீர்ப்பு.
சித்ரா:- (அழுகை)
விபீஷ:- ஏன் அழுகிறாய்? என்னை உயிரோடு காண வேண்டுமானால் கடிதங்களை மீண்டும் கைப்பற்றவேண்டும்.
சித்ரா - அப்படியானால்......
விபீஷ - இனி ஆலோசிக்கவே நேரமில்லை. இளவரசன் கையில் சிக்கியிருக்கிற ஒவ்வொரு எழுத்தும் என்னைக் குற்றவாளியாக்கும் சாட்சிவாய்ந்தவை. உம்......உன் சாகசம் என் ஊஞ்சலாக்கும் பலிபீடம் என்பதை நான் உணரவே முடியவில்லை.
சித்ரா:- நெஞ்சில் வேலால் குத்தவேண்டாம். உங்கள் கையாலேயே என்னைக் கொன்றுவிடுங்கள்.
விபீஷ:- நீ ஏன் சாகிறாய்? நான் தூக்கு மேடையில் நிற்பதைப் பார்த்துப் பரவசமடைய அவசரப்பட்ட நீ ஏன் சாகிறாய்? சதி செய்த குற்றத்திற்காக, என் சதைத் துணுக்குகளை நாய் நரிகளுக்கு விருந்தாகப் போட்டுப் போவதைப் பார்த்துச் சந்தோஷமடைய எண்ணிய நீ ஏன் சாகிறாய்? புருஷன் தொலைந்தால் புத்தன் மடியில் புது ஆனந்தம் காணலாமெனக் கனவு கண்டுகொண்டிருக்கும் நீ ஏன் சாகிறாய்?
(சித்ரா காதை பொத்திக்கொண்டு அழுகிறாள்.)
விபீஷ:- பாசாங்கு! வெறும் பாசாங்கு! உண்மையாகவே என் வாழ்க்கையில் உனக்கு நல்லெண்ணமிருந்தால், கடிதங்கள் மீண்டும் என் கையில் கொண்டுவந்து கொடுப்பாய்ப்போல்.
சித்ரா:- என்னால் முடியுமா?
விபீஷ:- முடியும். காலன் வாயிலிருந்து கணவனை மீட்ட சாவித்திரியின் தியாகத்தை நினைத்துப்பார். முடியும். ஏன்? இரவு தெரு நடனக்காரியை விடுவிக்கக் கையாண்டிருக்கிறாயே சாகசம், அதை நினைத்துப்பார் முடியும். உன் சக்தியும் புரியும்.
சித்ரா:- இதோ போகிறேன். கடிதங்களோடு திரும்புவேன்.
(சித்ரா செல்ல)
விபீஷ:- (தனக்குள்) நளாயினி-சாவித்திரி! நல்ல சமயத்தில் நினைவுவந்த நல்ல கதைகள்! இல்லாவிட்டால் இவள் போவாளா? பெண்களை ஏமாற்றப் பொருத்தமான கதைகள்! ஆனால்..........
(சிந்தையில் ஆழ்கிறான்)