பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 10 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 10

காட்சி 10

இடம்: பவளமலைச் சாரல்

மூல ஸ்கேன் 37, 38, 39, 40

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(புத்தன். சிந்தனையோடு உட்கார்ந்திருக்கிறான். வீரர்கள் அவனோடு இருக்கிறார்கள்.)

ஒரு வீரன்:- இன்னும் காணவில்லை.

2வது வீரன்:- ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால்?

3-வது வீரன்:- காலையில் திரும்பாவிட்டால், அது ஆபத்தின் அறிகுறி என்று சொல்லிவிட்டுப் போனீர்கள்!

1-வது வீரன்:- இளவரசே! நாம் உடனே புறப்பட்டுத் தேட வேண்டும்.

புத்த:- ஆ! பொன்னி...... பைத்தானே!

திகைத்த 1-வது வீ:- நம் விஷயம் பேசுகிறேன். இளவரசே, குமரி தேவியைக் காப்பாற்றியாக வேண்டும்.

புத்த:- (தெளிந்து) ஆமாம், தாமதிக்கக்கூடாது. நம்மை எதிர்பார்த்துக் குமரி தத்தளிப்பாள்.

(ஒரு வீரன் வருகிறான்)

புத்த:- ஏதாவது புதுச் செய்திகள்?

வந்த வீ:- இமயாவின் ஆட்கள் ஒரு கிராமத்தையே எரித்துவிட்டனர்.

புத்த:- ஆ!

வந்த வீ:- மக்கள் உயிரோடு வெந்துபோனார்கள்.

புத்த:- காரணம்?

வந்த வீ:- வரி கொடுக்கவில்லை.

புத்த:- வரி கொடுக்கவில்லை வீரர்களே! இனி அந்த வஞ்சகரை வாழவிட உத்தேசமில்லை. அதிகார பலிபீடத்தில் அப்பாவி மக்களின் இரத்தம் வழிந்தோடுவதை இனியும் அனுமதிக்க எண்ணமில்லை. இன்பபுரி சாம்ராஜ்யத்தில் கொடுமை! இப்பொழுதே கிளம்புங்கள். அந்த இரக்கமற்றவருக்கு விலங்கு மாட்டுங்கள்.

1-வது வீ - கைது செய்வதானால், ஆதாரங்கள் வேண்டுமே இளவரசே?

புத்த:- ஆ! அக்கிரமக்காரர்கள் ஆடும் கோர ஆட்டங்களைக் கண்ணில் கண்டும், அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்த ஆதாரங்கள் அகப்படவில்லை.

குமரி:- (வந்துகொண்டே) ஏனில்லை? இதோ இருக்கிறது.

புத்த:- குமரி! ஆபத்து எதுவும் ஏற்படவில்லையே?

குமரி:- பூனையின் முன்னே கிளி, ஆபத்தில்லாமல் இருக்குமா?

புத்த:- சிக்கிக்கொண்டாயா?

குமரி:- சிக்கிக்கொண்டேன். சித்ரா விடுவித்துவிட்டாள்.

புத்த:- சித்ராவா?

குமரி:- ஆம், புயல்காற்றைப் புருஷனாகப் பெற்றிருக்கும் தென்றல். இரவு அவள் இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்ளவேண்டியதுதான். விபீஷணன் வலையில் நான் மாட்டிக்கொண்டேன் என்பதைச் சித்ரா தெரிந்து கொண்டாள். நான் அங்கு போனது முதல் என்னிடம் வாஞ்சையாகத்தான் இருந்தாள். அந்தக் கொடியவனுக்கு அவளும் உடந்தையென நான் முதலில் நினைத்தேன். அவள் பேசிய பாகு மொழியில் பாஷாணம் கலந்திருக்குமோ என்ற பலத்தசந்தேகம் எனக்கு. ஆனால் நேற்றிரவு விபீஷணனின் விஷப் பற்களுக்கிடையே அகப்பட்டுக்கொண்ட என்னை வெகு தந்திரமாக விடுவித்தாள்!

புத்த:- அதிருக்கட்டும் நீ போன காரியம்?

குமரி:- வெற்றிதான் இளவரசே! இது மாதவன் எழுதிய கடிதம். (விபீஷணன் காவிகள் இருவர் இதைக் கவனிக்கின்றனர்)

புத்த:- (படித்துவிட்டு) மாதவன் - மனசாட்சியை அடகு

வைக்கும் மனித மிருகம். மகாராஜாவின் சோற்றைத் தின்று அவருக்கே துரோகம் நினைக்கிறான்.

குமரி:- இது சிங்கநாகன் கடிதம்.

புத்த:- சண்டமாருத நடையில் எழுதியிருக்கிறான். இந்தப் புலிகள் புத்தன் இருப்பதை மறந்துவிட்டார்கள்.

1-வது வீர:- இளவரசே! அமோகமான ஆதாரங்கள்.

புத்த:- ஆம்! குமரிக்குச் சரியான பரிசு தரவேண்டும்.

குமரி:- பரிசு வேண்டி நான் பணிபுரியவில்லை.

(தனியிடத்தில் காவிகள் ரகசியமாய்)

1 வது கா:- இளவரசன் புத்தன்!

2-வது கா:- ஆமாம்! அந்தத் தெரு நடனக்காரி யார்?

1-வது கா:- எல்லாம் வேஷம். இதை உடனே விபீஷணரிடம் தெரிவிக்க வேண்டும்.

(இங்கே)

புத்தன்:- சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கைது செய்யவேண்டும். ஆதாரங்களுக்காக அலைந்தோம். அகப்பட்டுவிட்டன. இனி அந்த விஷமக்காரர்களை விட்டு வைக்கக்கூடாது. நாளை காலையில் நமது வேலையை முடிக்க வேண்டும். நாட்டுக்கும் சமூகத்துக்கும் கேடு செய்யும் அந்த நாசசர்ப்பங்களின் நச்சுப்பற்களைப் பிடுங்கி எறியவேண்டும்! தேசத் துரோகிகள், சமூகத் துரோகிகள், நாசகாலர்கள். அவர்களைச் சுட்டெரிக்க வேண்டும்! விட்டுவைப்பது விவேகமல்ல! வீரர்களே!

வீரர்கள் - ஒழிப்போம் துரோகத்தை!

(அனைவரும் முழங்குகின்றனர்)