பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 9 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 9

காட்சி 9

இடம்:- விபீஷணன் அறை

மூல ஸ்கேன் 32, 33, 34, 35, 36, 37

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(குமரி நிற்கிறாள். விபீஷணன் படுக்கையில் சாய்ந்திருக்கிறான்)

விபீஷ:- பெயர் என்ன சொன்னாய்?

குமரி:- மின்னல்.

விபீஷ:- பொருத்தம், பொருத்தம்! கண்ணின் ஒளியில் மின்னல், கன்னத்தின் விளிம்பில் மின்னல், இடுப்பின் ஒவ்வொரு அசைவிலும் மின்னல், வண்ணத்திப் பூச்சியே! உன்னை வருணிக்க வார்த்தைகளே கிடையாது.

(மதுவைக் கையில் கொடுத்து)

குமரி:- இதை அருந்துங்கள். வார்த்தைகள், உங்களை அறியாமலேயே வந்துவிழும்.

விபீஷ:- ஆமாம், நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?

குமரி:- எனக்குக் கல்யாணம் ஆகாதுங்க.

விபீஷ:- ஏங்க?

குமரி:- ஒரு சபதம் வந்து குறுக்கே நிற்குதுங்க.

விபீஷ:- சபதமா! அதென்ன சங்கடம்?

குமரி:- கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒரு ராஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிறது. இல்லேன்னு, கன்னியாகவே இருந்துடறது.

விபீஷ:- அப்படியானால், உன் சபதம் பலித்துவிட்டது.

குமரி:- நிஜமாகவா?

விபீஷ:- நிஜம், நிஜம்!

குமரி:- (மதுவை ஊற்றிக்கொடுத்து) உம், நிதானித்துச் சொல்லுங்க.

விபீஷ:- இன்று, நான் முல்லைக்காட்டு ராஜப்பிரதிநிதி இமயாவின் பிரதம மந்திரி! அடுத்தமாதம், இன்பபுரி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி.

குமரி:- நல்ல ..... அதிர்வேட்டு! நீங்களாவது அரசராவது ஆகவாவது; விளையாடுறீங்க.

விபீஷ:- விளையாடுகிறேன்! இன்பபுரியின் மகாராணியோடா விளையாடுவேன்? இதைக் கேள், மகாராஜா மகாவீரர் ஆட்சி மங்கிவிட்டது. இன்பபுரியின் மகுடம், இனி விபீஷணன் பரம்பரைக்கு.

குமரி:- கனவா இருந்தாலும், அழகா இருக்குங்க!

விபீஷ:- நீ நம்பமாட்டாய். சக்கரவர்த்தி விபீஷணரோடு சரியாசனத்தில் வீற்றிருக்கப் போகிறாய்! அது வரையில் நம்ப மாட்டாய்.

குமரி:- நாகலோகம் போவதாக தவளை சொன்னால் நம்ப முடியுமா? (மதுவை மீண்டும் தருதல்)

விபீஷ:- விபீஷணன் தவளையல்லடி; கருடன், கருடன்! நாகலோகம் போவான், நாகராஜனையும் கொல்லுவான், (நெருங்கி) மின்னல்! வா!

குமரி:- (ஒதுங்கி) மகாவீரர் இளிச்சவாயரா? அவர் சேனைக்கு ஜவாப்பு சொல்லமுடியுமா? கோட்டைக்குள் நுழையத்தான் ஆகுமா? ஹூஹூம்!

விபீஷ:- நம்பமாட்டாயா என்ன?

குமரி:- ஹூஹூம்! பொய்யெல்லாஞ் சொல்றீங்க. என் சபதத்தைக் கெடுக்க பார்க்கறீங்க.

விபீஷ:- நான் சொல்வது பொய்! சரி, இந்தக் கடிதங்கள் சொல்வது பொய்தானா? கண்ணைத் திறந்து பார்!

[எடுத்துக் காட்டுகிறான்]

மாணிக்கக் கோட்டை தளபதி மாதவனுடைய கடிதம் இது. இன்பபுரிக்கு எதிராக என்னோடு சேர்ந்துள்ள மாபெரும் வீரன். இதோபார், சித்திரக்கோட்டை சிற்றரசன் சிங்கநாகன் கடிதம். அந்தச் சிங்கம் என்ன எழுதியிருக்கிறான் தெரியுமா? பத்தாயிரம் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கிறானாம்; இன்பபுரிக் கோட்டைக்குள் பிரவேசிக்க நேரம், வழி, எல்லாம் தயார்!

குமரி:- கோட்டைக்குள்ளா? ஹூஹூம்.

விபீஷ:- பைத்தியம், பைத்தியம்! இதோ எல்லப்பன் என்ற எலி, கோட்டைக்குள்ளே இருந்தே இதை அனுப்பியுள்ளான். இன்னும் சந்தேகமா? இந்தப் பாதையிலே சென்றால், கோட்டை தவிடுபொடி! ஹ ஹ ஹா!

குமரி:- நான் அதிர்ஷ்டக்காரிதான்.

விபீஷ:- (நெருங்கி) இன்பபுரியின் இராணி, மின்னல்! மின்னல்!

குமரி:- ஒரு வேளை, உங்கள் இமயா அரசராக வந்து விட்டால்?

விபீஷ:- முடியாது, முடியாது. இமயா என் கைப்பொம்மை, காரியம் சாதிக்க ஒரு கருவியாக உபயோகிக்கிறேன். என் வெற்றிக்குப் பிறகு, அவன் கருவேப்பிலை. நாட்டாசையைக் கிளப்பிவிட்டேன், நாக்கைத் தட்டிக்கொண்டிருக்கிறான் மடையன்! மன்னர் பதவிக்கு இவனு லாயக்கு? மண்டூகம்.. மின்னல்! நான் அரசனை அன்றைக்கே, அப்பொழுதே இமயாவின் தலை உருண்டுவிடும்!

குமரி:- நீங்கள் மகாமேதாவி (மது தருகிறாள்)

விபீஷ:- இல்லாவிட்டால் மன்னனைக் முடியுமா? (நெருங்குதல்)

குமரி:- சரி! என் சபதம் நிறைவேற்று நாளைக்கே திருமண நாள் குறித்துவிடுங்கள்.

விபீஷ:- நாள், நட்சத்திரம், பிறகு இருக்கட்டும், மின்னல்! இந்த இரவு வீணாகிவிடுவதா?

குமரி:- ஏ, அப்பா! கல்யாணம் ஆகறதுக்கு முன்னே ஒரு புருஷனத் தொடறது எங்க ஜாதி வழக்கப்படி பாவம்.

விபீஷ:- நீ தொடவேண்டாம்; நான் தொடுகிறேன்.

(வெறியோடு நெருங்க, குமரி நடனமாடுவதுபோல் சுற்றிச்சுற்றி ஆடிக்கொண்டு மதுவை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள். விபீஷணன் காமவெறியில் தள்ளாடுமாறு அவளை பலாத்காரமாய்க் கட்டி அணைக்கிறான். குமரி கத்திவிடுகிறாள். சித்ரா ஓடிவருகிறாள். அப்பொழுது விபீஷணன் மற்றொரு கோப்பை மதுவை மொண்டு குடிக்கிறான். சித்ரா குமரியின் மேலுடையையை வாங்கி அணிந்து கொண்டு விளக்கையும் சிறிது அடக்குகிறாள். அதற்குள் குமரி பறந்துவிடுகிறாள். குமரி ஓடும்போது சதிக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறாள். சித்ராவை குமரி என்று நினைத்த)

விபீஷ:- பைத்தியக்காரி! இன்னுமா வெட்கம்?

சித்ரா:- தொடருங்கள்; கூச்சமா இருக்கு.

விபீஷ:- ஹ ஹ ஹா! மின்னல்! இதோ நீ மின்னல், நான் இடி, வா! காதல் மழை பொழிவோம். வரமாட்டாயா? இன்பபுரியின் மகாராஜா அழைக்கிறேன்.

சித்ரா:- மகாராஜா! என்னை ஏமாற்றத்தானே பார்க்கிறீர்கள்?

விபீஷ:- ஏமாற்றுவதா?

சித்ரா:- ஆமாம், உங்கள் மனைவி இருக்கும்போது......

விபீஷ:- (சிரித்து) மனைவியா? எனக்கா? பைத்தியம். நான் பிரம்மச்சாரி!

சித்ரா:- ஊம், பொய்.

விபீஷ:- கடவுள்மேல் ஆணை! நான் முதல் முதல் பார்த்தது, முதல் முதல் காதல் கொண்ட கட்டழகி நீ ஒருத்திதான். நீதான் என் மனைவி. நீதான் இன்பபுரியின் ராணி.

(சித்ராவை தழுவ)

சித்ரா:- கைவிடமாட்டீர்களே?

விபீஷ:- உனக்காக உயிரை விடுவேன்.

சித்ரா:- அதற்கு அடையாளமாக ஏதாவது?

விபீஷ:- இந்தா, காதலின் அடையாளமாக இந்தக் கணையாழியை அணிந்துகொள்.

(சித்ரா விளக்கை நிறுத்துகிறாள்)