காட்சி 8 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 8
காட்சி 8
இடம்:- முல்லைக்காட்டுப் பகுதி.
மூல ஸ்கேன் 27, 28, 29, 30, 31, 32
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(ஒரு கிராமசந்திரசுற்றுப்புறத்தில் பொன்னியும், அவள் தோழிகளும் கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருக்கிறார்கள் பல பல விளையாட்டுகள், பாடலுடன். காலிகள் ஒருபுறமிருந்து இதைக் கவனிக்கிறார்கள் .)
1-வது கா:- ஏய்! இந்தக் குயிலுக்குக் குறி வையுங்கள்!
2-வது கா:- விபீஷணருக்கு விருப்பமான பறவை!
1-வது கா:- பறந்துவிடப் போகிறாள்.
(பொன்னியின் அருகே நெருங்க, பொன்னி கோஷ்டி வேறு பக்கம் திரும்ப எத்தனிக்க)
1-வது கா:- நில்லுங்கள்!
பொன்:- யார் நீங்கள்?
1-வது கா:- நாங்கள் வேடர்கள்.
2-வது கா:- வேட்டையாடுவதில் வெகு சமர்த்தர்கள்.
3-வது கா:- ஆமாம். எங்கள் குறிக்கு எந்த மானும் தப்பியதில்லை.
பொன்:- இங்கு வந்த விஷயம்?
1-வது கா:- எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான்.
பொன்:- நன்மையா?
2-வது கா:- ஆமாம், நீங்கள் சகல செளபாக்கியங்களோடு, சகல சம்பத்தோடு, சகல செல்வாக்கோடு, சகல சல்லாபங்களும் பெற்று வாழ, நாங்கள் ஆசைப்படுகிறோம்.
பொன்:- வளர்த்தவேண்டாம், சீக்கிரம்.
1-வது கா:- மிடுக்காகப் பேசினாலும், மிக அழகாக இருக்கிறது.
3-வது கா:- விபீஷணரும் இதைத்தான் ரசிப்பார்.
ஒரு தோழி:- (ஆத்திரமாக) நிறுத்து உன் கிண்டலை! இவள் கிராமத் தலைவியின் மகள். பொன்னி! வா போவோம்.
1-வது கா:- பொன்னி, ஹ ஹ ஹ! போகவிட எண்ணமில்லை.
(பொன்னி முதலியோர் நகரவே)
1-வது கா:- நாங்கள் ராஜாங்க அதிகாரிகள். முல்லைக் காட்டில் நாங்கள் வைத்ததுதான் சட்டம்.
2-வது கா:- மயிலே, மயிலே என்றால் இறகு போடாது.
1-வது கா:- உம், அடுத்தது பலாத்காரம்.
(“பலாத்காரம்” ஆண் பெண் போராட்டம் நடைபெறுகிறது. பொன்னியைக் காவிகள் கைப்பற்றி விடுகிறார்கள். பெண்கள் ஓட்டம். திடீரென அங்கு தோன்றிய புத்தன் காவிகளை எதிர்க்கிறான். நீண்ட எதிர்ப்புக்குப்பின், காவிகள் ஓட்டம். பொன்னி தப்புகிறாள். புத்தன் பொன்னியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.)
பொன்:- கரடிக் கூட்டத்திலிருந்து காப்பாற்றினீர்கள்.
புத்த:- கடமையைச் செய்தேன்.
பொன்:- மறக்கமுடியாத உதவி.
புத்த:- மலர் வனத்தில் மாட்டு மந்தை நுழைந்தது. அதை மனிதத்தன்மை தடுத்தது.
பொன்:- மனமார்ந்த என் நன்றி, ஏற்றுக்கொள்ளவேண்டும்.
(மலையன் பொன்னியின் தந்தை, பொன்னியைத் தேடிக்கொண்டு வருதல்)
மலையன்:- பொன்னி! பொன்னி! பொன்னி!
(ஓடி வருகிறாள்)
பொன்:- அப்பா!
மலையன்:- இங்கு என்ன நடந்தது?
பொன்னி:- மந்திரி விபீஷணன்.........
மலையன்:- ஆ! விபீஷணா?
புத்த:- ஆமாம். விபீஷண வண்டுக்குக் காமதாகம்! தேன் மலர் தேடுவதற்காகச் சில பூச்சி வண்டுகள் பறந்துவந்தன.
மலையன்:- என்னு? என்னு? வண்டாவது நண்டாவது? ஏம்மா, இவரு யாரு?
பொன்:- அப்பா! இவர், என்னை இம்சிக்கும்போது......
மலையன்:- ஆ! இம்சித்தானா? சாது போலிருக்கானே? சண்டாளன்!
[பொன்னி தடுக்க, கோபத்துடன் புத்தன்மேல் பாய்கிறான்.]
“பொன்னி விடு என்னை”
பொன்:- அவசரப்படாதீர்கள், இவரில்லை. அந்தப் பேடிகள் ஓடிவிட்டார்கள்.
மலையன்:- இப்பொழுது சொன்னியே, இம்சித்தான்னு.
பொன்:- அவர்கள் என்னை இம்சிக்கும்போது, இவர் காப்பாற்றினார் என்றேனப்பா!
மலையன்:- ஓ! அப்படியா? வணக்கம்! என் மவளே மலைப்பாம்பு வாயிலேருந்து மீட்டிங்க. ஐயோ, நீங்க இல்லன்னு இந்நேரம் என் குடும்பமே நாஸ்தியாகிவிடும். தெரியாம ஏதோ சொல்லிட்டேன்.
புத்த:- பரவாயில்லை, இந்த மாதிரி பாக்கியம் கிடைக்க வேண்டுமே!
மலையன்:- உம், தெய்வந்தான் கண்பார்த்திருக்கு.
பொன்:- ஆமப்பா! இவர்கூட தெய்வலோகத்திலிருந்து...
புத்த:- அப்படித்தான் பொன்னி, உன்னைக்கூட அங்கு பார்த்திருக்கிறேன்; இல்ல, இல்ல உன் ஜாடையாக ஒரு பெண்.
[பொன்னி, புத்தன், பார்வையில் காதல் வெளிப்படுத்தக் காண்கிறான் மலையன்]
மலைய:- பொன்னி! பெரிய இடத்துப் பிள்ளையாண்டான், இவரோட நட்பு இவ்வளவு நாளி நிற்கிறதே பாவம். வா போகலாம்.
புத்த:- வேடிக்கை.
மலைய:- வேடிக்கையில்ல. நாங்கள்ளாம் தீண்டத்தகாதவர்கள்!
புத்த:- தீண்டத்தகாதவர்கள்! தூய உள்ளம் படைத்த நீங்களில்லை. தங்கள் வயிறு நிறைவதற்காக உங்களை ஜாதிவாரியாகப் பிரித்தாளும் வஞ்சகர்கள் தீண்டத்தகாதவர்கள்! நாய்களுக்கு அளிக்கும் உரிமைகூட நாட்டுமக்களுக்கு அளிக்க மறுக்கும் நச்சுக் கொள்கையினர் தீண்டத்தகாதவர்கள்! எந்த மனிதனுடைய உழைப்பைத் தங்கள் வாழ்விற்குத் தேவையாகக் கொள்கிறார்களோ; அதே மனிதனை ஜாதியின் பேரால் அடிமையாக்கி வைத்திருக்கும் சதிகாரர்கள் தீண்டத்தகாதவர்கள்!
மலைய:- என்னமோ, பெரியவங்க சொல்லியிருக்காங்க.
புத்த:- பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள், “சாதி இரண்டொழிய வேறில்லை” என்ற சன்மார்க்க போதனை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனு” மென்ற கீதம்.
பொன்:- ஆம் அப்பா! அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்.
மலைய:- உம். பொன்னி! இவர் வாடை உனக்கும் அடிச்சுட்டுதா? அவர் மேல் சாதிக்காரர், எதும் பேசுவார், நீ பேசலாமா?
பொன்னி:- ஏன்? என்னைப்போலத்தான் அவரும் இருக்கிறார்?
புத்த:- ஆப்! உன்னைப் போலவே நான். உன் உள்ளத்தைப்போலவே என் உள்ளம். ஜாதிவேறுபாட்டால் இவை மாறுவதில்லை.
பொன்னி:- ஜாதிக் கொடுமை, எத்தனையோ ஒன்றுபட்ட உள்ளங்களைத் துண்டித்திருக்கிறதே.
[எங்கேயோ கவனித்திருக்க]
மலைய:- என்ன? என்ன?
பொன்னி:- கதைகளில் படித்திருக்கிறேன், ஜாதியை எதிர்த்து உயிரையே தியாகம் செய்தவர்கள் எத்தனையோ பேர். அதைச் சொல்லுகிறேன் அப்பா.
புத்தன்:- ஆமாம், நானுங்கூடப் படித்திருக்கிறேன்.
பொன்னி:- படிப்பது சுலபம். ஆனால் அதன்படி நடப்பது கஷ்டம்.
புத்த:- நான் அந்த தியாகிகளின் பாதையில் கால்வைத்துப் பல நாட்களாகின்றன.
[மலையன் அவசரமாக]
மலைய:- உம், பொன்னி! புறப்படு (புத்தனிடம்) நாங்க வருகிறோம். உங்கள் உதவிக்கு மறுபடியும்......
புத்த:- வேண்டாம். நீ சென்றால் போதும். பொன்னி! வருகிறேன்.
(பிரியமுடியாத பிரிவு)