காட்சி 7 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 7
காட்சி 7
இடம்: இமயாவின் மது மண்டபம்
மூல ஸ்கேன் 24, 25, 26, 27
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[இமயாவும் விபீஷணனும்]
விபீஷ:- அடுத்த மாதம் படையெடுப்பு. மகா வீரருக்குச் சிறை. புத்தன் சித்திரவதை. இன்பபுரியில் நமது ஆட்சி
இமய:- இன்பபுரிக் கோட்டைக்குள் நுழைவது!....
விபீஷ:- சுலபம், சுலபம்! குதிரைக்குள் எலி இருப்பது போல், கோட்டைக்குள் நமது ஆள் வைத்திருக்கிறேன். கோட்டையை முற்றுகையிடும் வழிகள், இன்று குறித்தனுப்பிவிட்டான், இனிமேல் என்ன?
இமய:- ஒன்றுமில்லை.
விபீஷ:- வெற்றி நமக்குத்தான். சந்தேகமில்லை.
இமய:- ஆமாம். சந்தேகமில்லை. வெற்றி நமக்குத்தான்.
விபீஷ:- இன்பபுரியில் நமது ஆட்சி எப்படி இருக்கும்?
இமய:- எப்படி இருக்கும்?
விபீஷ:- அழியாத ஏகாதிபத்தியமாக இருக்கும்.
இமய:- ஆமாம்! அப்படித்தான் இருக்கும். ஆனால் விபீஷணரே! பிரஜைகள் புரட்சி செய்தால்?
விபீஷ:- செய்யவிடமாட்டேன்.
இமய:- விடமாட்டீர்! அடக்குமுறைச் சட்டத்தைப் போட்டு......
விபீஷ:- அல்ல அல்ல! ஆயுதம் வேறு இருக்கிறது.
இமய:- இருக்கும், இருக்கும், வைத்திருப்பீர்.
விபீஷ:- மக்களைப் பல ஜாதிகளாக இன்னும் பிரித்துக் கொண்டே போகவேண்டும்.
இமய:- ஆமாம். பிரித்துக்கொண்டே போகவேண்டும்.
விபீஷ:- அதுவும் கடவுள் பேரால் செய்யவேண்டும்.
இமய:- ஆமாம்! கடவுள் பேரால் செய்யவேண்டும்.
விபீஷ:- அவர்களுக்குள் புகைச்சல் ஏற்பட்டால்தான், புரட்சி ஏற்படாது. நாம் வாழலாம்.
இமய:- புத்தன் அவர்களை ஒன்று சேர்த்துவிட்டால்?
விபீஷ:- கனவு! கனவு! கள்ளையும், சாராயத்தையும் கலக்க எண்ணுகிறான் மூடன்.
இமய:- மூடன்!
விபீஷ:- பிறகு நாட்டில் அவர்களுக்குள்ளேயே புரட்சி. அரசன் அதை அடக்க ஆரம்பிப்பான். நாம் சுலபமாக உள்ளே நுழைந்துவிடலாம்.
இமய:- அப்படியானால்; அடுத்தமாதம் நான் சக்கரவர்த்தி!
விபீஷ:- சந்தேகமா? முதலில் துரோக வேலையில் வெற்றி பெறவேண்டும். பிறகு சிம்மாசனம் தானே வரும்.
இமய:- தானே வரும்!
விபீஷ:- இந்தக் கொள்கைக்குப் பெயர்தான்.....
இமய:- விபீஷணக் கொள்கை!
விபீஷ:- இமயா! பழைய விபீஷணர் கொள்கையே இது தான்!
இமய:- நல்ல கொள்கை. நாட்டுக்குத் தேவையான கொள்கை.
(குமரி வருகை. 1-வது காலி விபீஷணனிடம் கூறுதல்.)
இமய:- என்ன ரகசியம்?
விபீஷ:- ஒன்றுமில்லை, தனிப்பட்ட விஷயம்.
இமய:- ராஜப் பிரதிநிதி, இமயாவுக்குத் தெரியாத ரகசியமா?
விபீஷ:- இமயாவுக்கு வேண்டியது, இன்பபுரியின் மகுடம்.
இமய:- ஆமாம்! மகுடம்!
விபீஷ - மகுடம்! மங்கை! வேண்டுமானால் பேசாதீர்.
இமய:- பேசவில்லை.
(இமயா வாயில் கைவைத்து பொத்திக் கொள்கிறான்)