காட்சி 6 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 6
காட்சி 6
இடம்:- முல்லைக்காட்டில் ஒரு வீடு.
மூல ஸ்கேன் 21, 22, 23, 24
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[புத்தன். குமரி, சில வீரர்கள், குமரி தெரு நடனக்காரி வேடத்தில் இருக்கிறாள். வீரர்கள் அவள் சொந்தக்காரர்போல் இருக்கிறார்கள். புத்தன் சாதாரண உடையில் காணப்படுதல்)
புத்தன்:- பத்திரம்! பவளமலைச் சாரலுக்கு வந்து சேருங்கள். நானும் இரவு அங்கு வந்துவிடுகிறேன்
குமரி:- எதிரிகள் கையில் சிக்கிவிடாமல்......
புத்தன்:- எல்லாம் தெரியும், நீங்கள் ஜாக்கிரதை!
குமரி:- ஒருவேளை அரண்மனைக்குள் நுழையவேண்டி இருந்தால்?
புத்தன்:- தந்திரம் அதிகம் வேண்டும். முடிந்தவரையில் முயற்சித்துப்பார். நான் வருகிறேன்.
(புத்தன் போய்விடுகிறான். ஒருவன் மிருதங்கம் அடிக்கத் துவங்குகிறான்)
மற்ற:- எல்லாரும் வாங்க! ஆடப்போறுங்க, ஆடப்போறுங்க! (கூட்டம் சேர்கிறது. குமரி தெருக்கூத்துப்போல் ஆடுகிறாள். இன்னொருவனும் ஆடுகிறான். குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்கிறது. விபீஷணன் காலிகோஷ்டி என்பது தெரிகிறது மக்களுக்கு.)
ஒருவன்:- ராஜாங்கத்து காலிகள்.
மற்ற:- விபீஷணன் ஆட்கள்.
ஒருவன்:- சரி, இந்தக் குட்டியை சனியன் பிடிச்சது!
மற்ற:- (கோபமாய்) என்னப்பா! வாரானுங்க. பார்த்து கிட்டிருக்கிறீங்க?
இன்னு:- ஏன்? என்ன செய்ய?
மற்ற:- வாங்க, ஓடிப்போயிடுவோம்!
(காவலன் வந்து தூர நின்று, நடனத்தை ரசித்தல்)
1-வது கா:- மயில் மாதிரி ஆடுகிறாள்!
2-வது கா:- புயலைப்போல மிளிர்கிறாள்!
3-வது கா:- கச்சிதமான முகம், கட்டுக்கோப்பான தேகம்.
1-வது கா:- இந்த ரம்பையை, நம்ம எஜமானிடம் கொண்டுபோனால்?
2-வது கா:- உயிரை விட்டுவார்.
1-வது கா:- நமக்குச் சரியான பரிசு கிடைக்கும்!
2-வது கா:- சரி, நம்மவளிலே ஒரு மான் விழுந்தது, வாங்க, வாங்க.
1-வது கா:- (அருகே வந்து) நீ ஆடினாயே, அதற்குப் பெயர்?
குமரி:- நாட்டியம்.
1-வது கா:- உம், கேலி செய்யவும் தெரியுமா?
குமரி:- கொஞ்சம் தெரியும்.
1-வது கா:- உன் நாட்டியக் கலையின் கௌரவத்தையே கெடுத்துக்கொள்கிறாய். இந்த ஆபரண நாட்டியத்தை, இப்படித் தெருவிலா ஆடுவது?
குமரி:- ஏழைகள்! வேறெங்கே சாமி, அரண்மனையிலா ஆட முடியும்?
1-வது கா:- பொம்புள மனம் வைத்தால், அரண்மனை மட்டுமல்ல, அரசர் தலையிலேயும் ஆடலாம்.
2-வது கா:- பரமசிவன் தலையிலே, கங்காதேவி ஆடுற மாதிரி.
குமரி:- அதற்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுங்க சாமி.
1-வது கா:- அதிர்ஷ்டம், உன் மாதிரிப் பெண்களுக்குத்தானே முதலில் அடிக்கும். இதோ பார், நீ இந்தமாதிரி கந்தலுங் கிழிசலுமா உடுத்தி, சங்கு மணிகளை மாட்டிக்கொண்டிருப்பதை என்னால் சகிக்க முடியவில்லை! உன் உடம்பெல்லாம் ரத்தின மாலைகள் போட்டுப் பார்க்கவேண்டும்.
குமரி:- ஆசை இருக்கு. ஆனா, ஆளு என்னுட்டந்தான் இருக்குங்க!
1-வது கா:- (குமரியை அருகே கூப்பிட்டு மெதுவாக) எங்கள் எஜமான் விபீஷணர் உன்னைக் கண்டால், கடித்துத் தின்றுவிடுவார்.
குமரி:- ஆ! ராட்சஸன் போல் இருக்கு!
1-வது கா:- இல்லை. உன் அழகிலும், ஆட்டத்திலும், அப்படியே மயங்கி, அள்ளி அள்ளிக் கொடுப்பார்.
குமரி:- நிஜமாகவா?
1-வது கா:- அவர் ஆஸ்தியா செலவாகுது? இன்பபுரி சாம்ராஜ்யத்துப் பணம். அதற்கு ராஜப்பிரதிநிதி இமயாவிடம் இரும்புப்பெட்டி; விபீஷணரிடம் திறவுகோல். அவர் இஷ்டம்போல் செலவு. இன்பச் செலவு. அதிலும் உனக்குப் பொன்னபிஷேகம் செய்யச் சொல்றேன். போதுமா?
குமரி:- அப்படியானால் நீங்கள் எல்லாம் யார்?
1-வது கா:- நாங்கள் வரி வசூலிக்கும் உத்தியோகஸ்தர்கள். வழியில் உன்னைப்போல யாராவது அகப்பட்டால், எஜமானுக்குப் பரிசாகத் தருவது வழக்கம்.
குமரி:- பெண்கள் வர மறுத்தால்...?
1-வது கா:- குரங்குக் கையில் அகப்பட்ட பூமாலைதான்! ஆனால் நாங்கள் சொல்வதைக் கேட்டுவிட்டால், கண்ணை இமை காப்பது போல் காப்பாற்றி, விபீஷணரிடம் விடுவோம்.
குமரி:- நீங்கள் ரொம்ப நல்லவங்க.
1-வது கா:- (2-வது காவியைக் காட்டி) ஆமாம்! இவன் கூட அப்படித்தான் சொன்னான்.
2-வது கா:- சரி புறப்படு.
குமரி:- (தனிந்த குரலில்) நல்ல சந்தர்ப்பம். நரியை அதன் வளையிலேயே சந்தித்து நசுக்கிவிடலாம்.
ஒரு வி:- விபீஷணன் சண்டாளன்! ஏதாவது சதி செய்து விட்டால்?
குமரி:- தந்திரமாகத் தப்பித்துக்கொள்வேன். இளவரசர் வந்ததும், இதைச் சொல்லுங்கள்: நாளை காலையில் நான் திரும்பாவிட்டால், அது ஆபத்தின் அறிகுறி.
[காவலரோடு புறப்படுகிறாள் குமரி]