காட்சி 5 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 5
காட்சி 5
இடம்:- முல்லைக்காட்டு நகரத்தெரு
மூல ஸ்கேன் 19, 20
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(விபீஷணன் ஆட்கள், ஒரு வாலிபனைக் கட்டி இழுத்து வருகின்றனர். (திரை, “எதிர்த்துப் பேசாதே” என்ற அதிகாரக் குரலுடன் ஆரம்பமாகிறது))
“எதிர்த்துப் பேசாதே”
ஒருவன்:- ராஜப் பிரதிநிதி இமயாவின் உத்தரவு. எடு வரியை! (மீண்டும் அடித்தல்)
வாலி:- கடவுளே! இந்த மிருக ஆட்சிக்கு முடிவு கிடையாதா?
முரடன்:- ஹ ஹ ஹா! கடவுள், பக்தர் அவதிப்படுகிறீர்; வந்து காப்பாற்றப்பா!
[வாலிபன் மனைவி ஓடிவந்து, கணவன் மேல் விழுகிறாள். அந்த அடிகளை அவள் வாங்குகிறாள். பிறகு அவன் வீராவேசம் கொண்டு]
மனைவி:- இந்தா! உன் வரி. அவரை உயிரோடாவது விடு!
[தன் தாலியைக் கழற்றிக் கொடுக்கிறாள்]
வாலி:- தாலி, நான் கட்டிய தாலி! ஆ! அக்கிரம ஆட்சியே! உனக்கு அழிவு கிடையாதா?
முரடன்:- இல்லையப்பா இல்லை! இமயாவின் ஆட்சி, சிரஞ்சீவி வரம் பெற்றது.
வாலி:- மகாவீரச் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யத்திலா இந்த மகாபாதகங்கள்? இதைக் கேட்பாரில்லையா? இந்த ஏழையின் கூச்சல் உன் காதில் விழவில்லையா?
முரடன்:- கடவுள் செவிடப்பா செவிடு. (பயங்கர சிரிப்பு)
(ஒரு பகவதர் காலக்ஷேபம்)
பாக:- வாழை, கமுகு முதலிய மரங்கள் வான் நோக்கி நிற்க, வண்ண மலர்கள் வரிசை வரிசையாகத் தோரணம் கட்டி, கனிகளைக் குலை குலையாகவும், கொத்துக் கொத்தாகவும் தொங்கவிட்டு அலங்கரித்த பந்தலில், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் அமர்ந்து யாகம் வளர்த்து, ஆடுகளை வெட்டி, அக்கினிக் குண்டத்தில் குடம் குடமாக நெய்யைக் கொட்டிப் பொசுக்கித் தின்று, சோமரச பானங்களைக் குடித்து, அதிவிரிசையாக, ஆரவமோடு மந்திர கோஷம் முழங்கும்போது, இரக்கமற்ற அரக்கர் கூட்டம் திடீரெனப்புகுந்தது, (விபீஷணன் ஆட்கள் திடீரெனப்பிரவேசித்தல். ஆர்ப்பாட்டம், அல்லல், ரகளை, கொள்ளை, வீடுகள் கொளுத்தப்பட்டு குழந்தை குட்டிகள் ஓட்டம், தொட்டிலில் கிடந்த பிள்ளையைத் தூக்கி எறிந்து கொல்லுதல்)
முரடன்:- வரி கொடுக்காத நாய்களுக்கு வீடு ஏன்? கொளுத்தி எரியுங்கள்!
(ஆணவத்தின் கோரத் தாண்டவம்)