காட்சி 4 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 4
காட்சி 4
இடம்:- இமயாவின் மாளிகை
மூல ஸ்கேன் 15, 16, 17, 18, 19
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(மது விருந்துக் காட்சி-இரு பெண்களின் சில நிமிட நடனம்)
விபீஷ:- மது, மங்கை, இரண்டுந்தான் கவலை தீர்க்கும் மருந்துகள்.
இமயா:- ஆமாம். மருந்துகள்! கடலெல்லாம் மதுவாகி விட்டால்..........
விபீஷ:- மணல்களெல்லாம் மங்கையராக்கி, மதுக்கடலில் ஜலக்கிரீடை செய்யலாம்!
இமயா:- மாளிகை முழுவதும் மாதர்கள், மாதர்கள் கையிலே மதுக்குடங்கள். விபீஷணரே! அந்த இடம்......?
விபீஷ:- அசல் இந்திரலோகந்தான்! மதுக்கோப்பைகள்;
அதைப் பிடித்திருக்கும் மலர்க் கரங்கள், அடா! டா டா! இன்பம்! இன்பம்! இன்பம்!!
இமயா:- இன்பம்! இன்பம்! இன்பம்!! மதுவை அந்த மாதர்களின் வாயில் ஊற்றி, அதை உறிஞ்சிக் குடித்தால்?
விபீஷ:- மலரில் வழியும் தேனே, வண்டு குடிப்பதுபோல், மநோகரமாய் இருக்கும்.
இமயா:- பேஷ்; விபீஷணரே! கவிஞன்போல் பேசுகிறீர்.
விபீஷ:- (மதுவைக்காட்டி) எல்லாம் இந்த மகேஸ்வரியின் அருள்.
இமயா:- ஆஹா! அருளே அருள்!
(ஒரு பெண்ணின் சிலையை உற்று நோக்க, அது மகாவீரர் போலத் தெரியவே)
இமயா:- மகாராஜா! மகாவீரர் நம்மையே பார்க்கிறார். மடையர்.
விபீஷ:- (சிரித்தபடி) மண்ணங்கட்டி ராஜா!
(சிலையை உதைக்கவே, அது விழுகிறது)
இமயா:- நன்றுகச் சொன்னீர். இந்தச் சிலை இருக்குமிடத்தில், என் சிலையல்லவா இருக்க வேண்டும்?
விபீஷ:- இங்கென்ன! இமயாவை இன்பபுரியின் ரத்ன சிம்மாசனத்தில் இருக்கவைக்கிறேன்.
இமயா:- இருக்கவைப்பீர். ரத்ன சிம்மாசனம்! அதனருகே பொன் குடத்தில் புதிய மது. வைரக் கிண்ணத்தால், அதை மொண்டு என் வாயில் ஊற்றும் வனிதாமணிகள், விபீஷணரே, விரைவில் அந்தப் பதவி வரவேண்டும்.
விபீஷ:- வந்தே தீரும்.
இமயா:- வந்தே தீரும்.
விபீஷ:- வலையை வீசிவிட்டேன். விரைவில் சதிவேலைகள் முடிந்துவிடும். பாக்கியிருப்பது படையெடுப்பு. இன்பபுரிக் கோட்டையின் முற்றுகை! மன்னன் ஓட்டம்! நமது ஆட்சியின் ஆரம்பம்.
இமயா:- புத்தனை மறந்துவிட்டீர்.
விபீஷ:- அவன் கன்றுக்குட்டி, என்னைக் கண்டாலே கலங்கிவிடுவான்.
இமயா:- கலங்கிவிடுவான் கோழை! விபீஷணரே! படையெடுப்பதென்றால், நானும் வரவேண்டுமோ?
விபீஷ:- வேண்டாம், வேண்டாம்!
இமயா:- வேண்டியதில்லை. அற்ப விஷயத்திற்கு நான் வேறு.
விபீஷ:- இமயா! நீர் பாதுகாப்பிலிருக்கலாம்.
இமயா:- பாதுகாப்பென்ன! ஒரு பத்தாயிரம் வீரர்களோடு, ஒரு குகைக்குள் இருந்தால் போகிறது. எனக்கொன்றும் பயமில்லை.
விபீஷ:- நீர்தான் அஞ்சா நெஞ்சம் படைத்த வீர சிங்கமென்று, நாடெல்லாம் சொல்கிறார்களே!
இமயா:- ஆ! அப்படியா சொல்கிறார்கள்? (நெஞ்சைத் தடவிக்கொண்டு)
விபீஷ:- ஆமாம்.
இமயா:- உம். படைத்திட்ட நிறைய பணம் வேண்டுமே!
விபீஷ:- பண வசூல், நடந்துகொண்டுதானிருக்கிறது. போரை முன்னிட்டு, நம் பொக்கிஷத்தைப் பாதி நிரப்பிவிட்டேன். (மதுவைக் கோப்பையில் ஊற்றுகிறான்) எங்கு பார்த்தாலும் நம் ஆட்கள், வரி வசூல் செய்கிறார்கள்.
இமயா:- வரியா?
விபீஷ:- ஆம்! பிறந்தால் வரி, வாழ்ந்தால் வரி! இறந்தாலும் வரி! ஒரே வரி மயம்.
இமயா:- வரி! மகாராஜாவுக்குத் தெரிந்தால், மகா ஆபத்தாயிற்றே!
விபீஷ:- பைத்தியம்! உளறாதீர்! மகாராஜாவின் ஆணிவேரையே பிடுங்க அருமையான திட்டம் போட்டிருக்கிறேன்.
இமயா:- குடிஜனங்கள் சக்ரவர்த்தியிடம் முறையிட்டால்?
விபீஷ:- குடிஜனங்கள்! குடலைப் பிடுங்கிவிடுவேன். வாயைத் திறக்கவே மாட்டார்கள்!
விபீஷ:- உஸ், பேசாதீர்! முல்லைக் காட்டின் சாதாரண ராஜப் பிரதிநிதி............இன்பபுரியின் மகுடம், இதில் எது வேண்டும்??
(இரண்டு மதுக்கோப்பைகளை, தனித் தனியே சுட்டிக் காட்டுகிறான்)
இமயா:- மகுடம்! மகுடம்! இன்பபுரி மகுடம்!
விபீஷ:- மகுடம்!
இமயா:- மகுடம்!
விபீஷ:- மது!
இமயா:- மது!
விபீஷ:- மங்கை!
இமயா:- மங்கை!
விபீஷ:- வேண்டுமானால் எதிர்த்துப் பேசாதீர்.
இமயா:- பேசவில்லை.
(இரண்டு மதுக் கோப்பைகளையும், ஆளுக்கொன்று எடுத்துச் சுவைக்கின்றார்கள்)