பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 3 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 3

காட்சி 3

இடம்:- மாளிகையில் ஒருபுறம்.

மூல ஸ்கேன் 11, 12, 13, 14, 15

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(அமைச்சர், அரசர் மகாவீரர்)

அமைச்சர்:- இளவரசரின் எண்ணமெல்லாம், இன்பபுரியின் எதிர்காலத்தைப் பற்றியது. நாட்டை இன்பலோகமாகச்

சிருஷ்டிப்பதே அவரது லட்சியம். அந்தப் பாதையில், யார் குறுக்கிட்டாலும் பொருட்படுத்தமாட்டார்.

மகாவீரர்:- அதுதான் சுத்த வீரனின் பண்பு. அமைச்சரே! இனி நான் சாகமாட்டேன். என் மைந்தனின் புகழ் சீவித்திருக்கும் வரையில், என் பெயரும் சீவித்திருக்கும்.

(புத்தன் வருகிறான்)

புத்தன்:- அப்பா!

மகாவீரர்:- புத்தா! இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக (புத்தன் சுற்று முற்றும் பார்க்கிறான்) ஒருவேலை தரப்போகிறேன் உனக்கு.

புத்தன்:- ஆணை

மகாவீரர்:- முல்லைக்காட்டின், நமது ராஜப் பிரதிநிதியைத் தெரியுமல்லவா?

புத்தன்:- ஆம். இமயா. அவர் இன்று விழாவுக்குக்கூட வரவில்லை.

மகாவீரர்:- வரமாட்டான் வக்கிர மூளைக்காரன். உனக்கு விபீஷணன்கூடத் தெரிந்திருக்குமே.

புத்தன்:- நன்றாகத் தெரியும். இமயாவின் ஆலோசக மந்திரி.

மகாவீரர்:- இருவரும் சேர்ந்துகொண்டு, முல்லைக் காட்டில் கொடுங்கோல் நடத்துகிறார்களாம்.

புத்தன்:- கொடுங்கோல்! நம்பவம்ச வரலாற்றிலேயே இல்லாத வார்த்தை! (ரமேலாவும், குமரியும், அந்தப்பக்கம் வந்தவர்கள் நின்று கவனிக்கிறார்கள்.)

மகாவீரர்:- அதற்காகத்தான் உன்னை அழைத்தேன். நீ

உடனே முல்லைக்காடு சென்று. அந்த அரசியலைத் திருத்தி யமைக்க வேண்டும். கொடுங்கோல் வளரக்கூடாது.

புத்தன்:- ஆணை.

மகாவீரர்:- அவர்கள் செய்யும் அநியாயங்கள், அளவிட முடியாதாம். ஆதாரங்களோடு அகப்பட்டுவிட்டால், ஆயுள் தண்டனைதான் அவர்களுக்குச் சன்மானம்!

அமைச்சர்:- ஆதாரம்!........ அப்படியானால், இளவரசர் மறைமுகமாக இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

மகா:- ஆம். அப்படித்தான் செய்யவேண்டும்.

அமைச்சர்:- முல்லைக் காட்டெங்கும், மூர்க்கர்கள் உலாவுகிறார்களாம். அவர்களைக் கூடவே அழிக்கவேண்டும்.

மகா:- எல்லோரும் இமயாவின் ஆட்கள்தானும். எதற்கும், முதலில் ஆதாரங்கள் தேடுவது அவசியம். இளவரசன் சென்று துப்பறிவதுதான் சிறந்த வழி.

அமைச்சர்:- ஆபத்தான வேலை. அவருக்குத் துணையாக யாரையாவது அனுப்பினால்......

மகா:- உண்மை. யாரை அனுப்புவது?

“நான் போகிறேன்” (என்று கூறியபடி குமரி அருகே வருகிறாள்)

புத்தன்:- இல்லை யாரும் தேவையில்லை. நானே செல்லு கிறேன்.

குமரி:- இளவரசர், யோசிக்காமல் கூறுகிறார் மாமா!

மகா:- ஆம்! இமயாவைப்பற்றி வந்திருக்கும் செய்திகள் அதிபயங்கரமானவை!

புத்தன்:- வேண்டுமானால், சில வீரர்களோடு செல்லுகிறேன்.

மகா:- வீரர்களும் வேண்டியதுதான். அதோடு....

குமரி:- வீரம் போருக்கு முக்கியமானது. ஆனால், சிங்கத்தையும் நரி ஏமாற்றிவிடும்.

புத்தன்:- அதற்காக?

குமரி:- நாமும் நரிகளாய் மாறி நடிக்கவேண்டும்.

புத்தன்:- நடிப்பது பிரமாதம்?

குமரி:- அதில் ஆண்களைவிடப் பெண்கள் திறமைசாலிகள். சதிகாரர்களைப் பிடிக்க, பெண்களின் சாகசம் நல்ல வழி.

மகா:- உண்மை! உண்மை! புத்தா! பகைவரின் நெஞ்சில் நுழையக்கூட பெண்களுக்குப் பயிற்சி உண்டு. அதிலும், குமரி உன் நலத்தையே நாடுபவள்.

குமரி:- மாமா! நான் அவரோடு போகலாமல்லவா?

மகா:- நீ இளவரசனுடனேயே இருக்கத்தானே நான் ஆசைப்படுகிறேன்.

புத்தன்:- கொடுமையாளரின் குகைக்குள் நுழையவேண்டும். அதற்குக் குமரி ஏற்றவளல்ல.

மகா:- குமரியைக் கோழையாக நினைக்கிறாய் புத்தா!

குமரி:- அப்படியில்லை மாமா! பெண் வர்க்கத்தையே பேதைகளாக நினைக்கிறார். மாமா!. அவர் என்னை அழைத்துச் செல்லவேண்டாம். நான் தனியே செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்.

புத்தன்:- வேண்டாம், வேண்டாம். என்னுடனேயே வரட்டும்.

மகா:- புத்தா! ஜாக்கிரதை! குமரியை அழைத்துச் செல்கிறாய். விபீஷணன் இமயா வெறியாட்டங்கள், மது, மங்கை இரண்டுந்தானும்!

(புத்தன் வணங்கிச் செல்ல)

மகா:- புத்தா! ஆதாரமில்லாமல் யாரையும் அவஸ்தைப் படுத்தாதே!

புத்தன்:- தந்தையே! நீதியின் மேல் ஆணை! நேர்மை தவறி நடக்கமாட்டேன்.

மகா:- வாழ்க!......வெல்க!

(எல்லோரும் செல்லல். குமரியை ஜாடையாகப் பார்த்து, ரமேலா சிரித்தல். குமரியின் ஆனந்தகீதம்)