பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 2 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 2

காட்சி 2

இடம்:- விழா மண்டபம்

மூல ஸ்கேன் 9, 10, 11

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(அரசர் மகாவீரர், அமைச்சர், யாளித்தத்தர் மற்றும் சேனாதிபதி, குடிமக்களும், பெண்கள் பகுதியில் குமரி, ரமேலா மற்றும் பலரும், நடனம் நடைபெறுகிறது முடிந்ததும்)

அமைச்சர்:- வணக்கம். அன்புடையீர்! இளவரசர் புத்தரின் பிறந்ததினமாகிய இந்தப் புனிதமான விழாவில், இன்பபுரி மக்களின் சார்பாகப் பல்லாண்டு கூறுகிறேன்.

(சபையில் வாழ்த்தொலி கிளம்புகிறது)

“இளவரசர் வாழ்க!”

யாளித்தத்தர்:- (எழுந்து) பூந்தோட்டத்தின் ராஜப் பிரதிநிதி என்ற முறையில், இளவரசருக்கு இந்தப் பரிசை வழங்குகிறேன். சமத்துவத்தைக் குறிக்கும் இந்தப் பரிசு, எதிர்கால இன்பபுரி பற்றிய என் கனவு! சக்கரவர்த்தி மகாவீரருக்குப்பிறகு மகுடம் சூடப்போகும் இளவரசரின் காலத்தில், என் கனவு பலித்துவிடும் என்று நம்புகிறேன். இந்தப் பிறந்த தினத்திலே நானும் நம் நாட்டின் மேன்மைக்குப் பாடுபடுவதாகப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்வோம். வாழ்க இளவரசர்!

(பாட்டாளி, பணக்காரன், சமங்குறிக்கும் ‘தராசு’ பரிசு தருதல். மற்றும் சேல மாவட்டம், மயில்பண்ணை, வசநாடு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பரிசு வழங்குதல்)

புத்தன்:- அன்புள்ளவர்களே! உங்கள் ஆர்வத்திற்கு என் நன்றி. நண்பர் யாளித்தத்தர் குறிப்பிட்டதுபோல், இது என் பிறந்தநாள் மட்டுமல்ல; இன்பபுரியின் இன்ப வாழ்வுக்காகப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள, ஆண்டுதோறும் நடைபெறும் விழா. இந்நாட்டின் வருங்காலம் யாளித்தத்தருக்குக் கனவு, எனக்கு என் வாழ்வின் லட்சியம். உயர்ந்த லட்சியம். உன்னதமான லட்சியம்! என் உயிரோடு உயிராக உறைந்துகிடப்பது இந்நாட்டு மக்களின் இன்ப வாழ்வு, பேதமற்றப் பெருவாழ்வு, சீமான் ஏழை என்னும் நிலையொழிந்த சிங்கார வாழ்வு. இதுவே என் மூச்சு. என் இதயகீதம். இந்த லட்சியத்தில் வெற்றிபெற, எதையும் தியாகம் செய்வேன். வேண்டுமானால் இன்பபுரியின் மகுடத்தைக்கூட! (கைத்தட்டலும், வாழ்த்தொலியும்) வருங்கால இன்பபுரி சாம்ராஜ்யத்தில், ஏழை, பணக்காரன் இருக்கமாட்டான். ஆண்டான், அடிமை இருக்கமாட்டான். மனிதன் தான் இருப்பான்!

[மீண்டும் வாழ்த்தொலி கிளம்புகிறது. கூட்டம் கலைகிறது. விழா முடிந்து எல்லோரும் செல்கின்றனர் குமரியும், தோழி ரமேலாவும் மட்டும் மிஞ்சுகிறார்கள். பரிசுகளையே கவனித்த குமரியின் முகக்கோணல் ரமேலாவை கவனிக்கிறது]

ரமேலா:- என்னம்மா, விம்முகிறாய்? நீ ஒன்றும் பரிசளிக்கவில்லை என்றுதானே? இளவரசர் உன்னையே பரிசாக ஏற்றுக் கொள்வார், கவலைப்படாதே.

குமரி:- ரமேலா! என் உயிரோடு உயிராக உறைந்துகிடப்பது இந்நாட்டு மக்களின் இன்பவாழ்வு. பேதமற்ற பெருவாழ்வு, சீமான் ஏழை என்னும் நிலையொழிந்த சிங்கார வாழ்வு!

ரமேலா:- ஓ! அதோடு குமரியையும் சேர்த்துக்கொள்ளவில்லை, அதுதானே?

குமரி:- (கோபமாக) ரமேலா!

ரமேலா:- குமரி! கூட்டத்தில் சொல்லும் விஷயமா அது? ஒருகாலம் வரும், அப்போது மஞ்சத்தில் கொஞ்சலோடு சொல்

ளார். அப்போது இந்நாடு, மக்கள், சீமான், ஏழை, எல்லாம் வாயில் வராது. (புத்தன்போல் நடித்துக்கொண்டு) என் உயிரோடு உயிராக உறைந்து கிடப்பது குமரி என்ற குயில்! அவள் அழகு, அவள் மஞ்சம்......

குமரி:- ரமேலா! பேசாமலிருக்கமாட்டாய்?

[குமரி புத்தனின் படத்தில் மெய்மறந்திருக்கிறாள்]

ரமேலா:- ஓ! இளவரசரோடு பேசுகிறாயா? அது படம்.

குமரி:- இந்தப் படத்திற்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால்......?

ரமேலா:- இங்கிருந்து என்னை விரட்டி அடிப்பாய்.

[குமரி பெருமூச்சோடு நகர்கிறாள்]

ரமேலா:- இப்படி வாடுகிறாயே ஒருவார்த்தை அவரிடம் கூறிவிடேன். உன் அத்தான்தானே?

குமரி:- மறுத்துவிட்டால்?

ரமேலா:- மறுப்பது, மனோரஞ்சித மலரையா?

குமரி:- ரமேலா! இளவரசர் எண்ணமெல்லாம்......

(என்று ரமேலாவைப் பார்க்கிறாள் ஆசையோடு)