காட்சி 1 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 1
காட்சி 1
இடம்:- இன்பபுரித் தெரு
மூல ஸ்கேன் 8, 9
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(இளவரசர் புத்தன் பிறந்தநாள் கொண்டாட்டம் ஊர்வலம் வருகிறது மக்கள் புத்தனைக் காண ஆவலாக ஓடி வருதல்)
“இளவரசர் வாழ்க!” “எங்கே இளவரசர்?”
(என்று கூவிக்கொண்டு வரும் மக்கள், மகிழ்ச்சிப் பெருக்கால் சீமான்கள்மேல் மோதி விட, அவர்கள் வெறுப்பும் இருமாப்பும் கொள்கின்றனர்)
ஒரு சீமான்:- அறிவுகெட்டவர்கள், அடித்துவிரட்டுங்கள்!
(ஒரு கிழவனின் மண்டையில் பலத்த அடி விழ, அவன் அலறுகிறான்)
புத்தன்:- நிறுத்துங்கள்! இது என்ன அக்கிரமம்?
சீமான்:- நான் தான் விரட்டச் சொன்னேன். வெறிநாய்கள் மாதிரி வந்து விழுகிறார்கள்.
புத்தன்:- அதற்காக நாமும் அப்படி மாறிவிடுவதா? அதுவும் மகிழ்ச்சிகரமான இந்த நாளில்!
சீமான்:- சாதாரணப் பிரஜை, சமஸ்தானச் சீமான்களின் மேல்......
புத்தன்:- சாதாரணப் பிரஜை! அந்தப் பிரஜையின் ரத்த வியர்வைதான் பிரபுக்களின் மாளிகை, பிரபுக்களின் மகிழ்ச்சி, பிரபுக்களின் வாழ்வு! என்னைப் பார்க்க ஆவலுடன் ஓடிவரும் இந்தப் பாட்டாளிக்கு இதுதானு பரிசு? (என்று கிழவனிடம் நெருங்கி பரிவோடு) பெரியவரே! வருந்தாதீர். அறியாமல் நடந்துவிட்டது. இதை வைத்துக்கொள்ளுங்கள். (முத்துமாலை யளித்தல்)
கும்பலில் ஒருவன்:- (கிழவனிடம்) அடிச்சாலும் அடிச்சாங்க அந்த முகூர்த்தமா உனக்கு அதிர்ஷ்டம் அடிச்சது தாத்தா!
கிழவன்:- புண்ணியவான்! என்ன இரக்கம், என்ன தயவு, என்ன கருணை, நீடூழி வாழணும்!
(ஊர்வலம் மீண்டும் வாத்தியங்களுடனே நகர்கின்றது)