பொருளடக்கம்நச்சுக்கோப்பை

காட்சி 14 / 18

சீன். 14

சீன். 14

மூல ஸ்கேன் 46, 47, 48

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம் : மணியப்பன் வீடு

(சாந்தா அழல். பாட்டு)

பழனி : அன்புள்ள தங்கையே! காலத்தின் வேகத்திலும், மூட உலகத்தின் சதியிலும் உன் வாழ்வு வெட்டப் பட்டு விட்டது. நீ இன்பம் துய்க்க வேண்டிய நாள் இன்னும் அதிகம் இருக்கிறது.

சாந் : அண்ணா! உலகம் என்னைத் தூற்றுதா?

பழனி : உலகம் உன்னைத் தூற்று, அது உனக்கென்ன வார்சா? உலகம் ஒரு பொறாமைப் பூச்சாண்டி! அநீதியும் அக்கிரமும் சூழ்ந்த இந்த உலகத்திற்காக நீ அஞ்சுவதும் அடங்குவதும் மடமை! இந்த உலகம் தூற்றுமே என்ற கவலையைத் தவிர உன் உள்ளம் மற்றொரு மணம் புரிந்து கொள்வதை மறுக்க வில்லை என்பது எனக்கு தெரியும். சாந்தா! நீ மாத்திரம் அல்ல; உன்னைப்போன்ற கோடிக் கணக்கான விதவைகளும் இந்த உலகத்திற்காகத்தான் அஞ்சிச் சாகிறார்கள். ஆற்றங்கரைமேட்டிலும், நாணற்காட்டிலும், குப்பைத் தொட்டிகளிலும் காணப்படும் சிசுக்களின் சவங்கள் விதவைகள் பெற்றெடுத்தவையல்லவா? இந்த உலகம் எத்தனை பெண்களின் கழுத்தை முறித்திருக்கிறது என்பதாவது உனக்குத் தெரியுமா?

சாந் : அப்படியானால்...?

பழனி : உன் மனத்திற்கேற்ற மணவாளனைத் தேடு. மாலை சூடு. உன் வாழ்க்கையைத் தொடங்கு.

சாந் : அப்பா இணங்க மாட்டாரே.

பழனி : நான் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். அவர் நம்பும் புராணங்களில் உள்ளபடியே கூறினேன். அவர் வைதிகம் என்ற கோட்டைக்குப் பிடிவாதம் என்ற அகழ் அமைத்து விட்டார்

சாந் : அண்ணா! நம் குடும்பமோ ஏழ்மை நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. அப்பாவோ பைத்தியம் பிடித்தவர்போல் பிதற்றிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அப்பாவை எதிர்ப்பது முறையாகத் தெரியவில்லையே!!

பழனி : அப்பாவை எதிர்க்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்ததினால்தானே இக்கதி நேர்ந்தது. அப்பொழுதே ஏகாம்பரத்தைத் தவிர வேறு ஒருவரையும் மணக்க மாட்டேன் என்று கூறியிருந்தால், இக்கதி நேராதே சாந்தா!

சாந் : அப்பா இணங்கினால்....?

பழனி : இணங்கமாட்டார்.

(அப்போது அங்கு மணியப்பர் வருதல்.)

மணி : எதற்கு இணங்கமாட்டார்? என்ன திட்டம் போடுகிறீர்கள்?

பழனி : சாந்தாவின் வாழ்வைப் பற்றித் தான்!

மணி : என்னடா முடிவாகியது?

பழனி : அப்பா! சாந்தாவின் கணவன்! இறந்தது உண்மை ஆயினும், அவள் காதல் உள்ளம் இறக்கவில்லை. சாந்தா வாழ்வை இழந்தது உண்மை. ஆனால், அவள் தளிர் உடலை இழக்கவில்லை. சாந்தா மீண்டும் வாழ்வு நடத்த வேண்டும். அப்பா! இதுவே தான் முடிவு.

மணி : டேய்! நீ புலியுடன் போராடுகிறாய்.

பழனி : அடடே! அது என்னை என்ன செய்யும்? கிழித்துத் துண்டுகளாக்கும். அவ்வளவுதானே!

மணி : உனக்குத்தான் அச்சம், மானம் ஒண்ணுமில்லை. அவளுக்கு யாருடா உன்னைப் புத்தி புகட்டச் சொன்னது.

பழனி : அப்பா! நான் சொல்வதைக் கேளுங்கள். சாந்தாவுக்குப் பிடித்த கணவனுக்கே மறு விவாகம் செய்து வையுங்கள்.

மணி : என்ன! மறுமணமா? இனி அதைப்பற்றிப் பேசினால் உதைதான் கிடைக்கும். சாந்தா! நீயுமா மறு விவாகம் செய்துக்கொள்ள நினைக்கிறாய்? உனக்கு மானமில்லை, வெட்கமில்லை, தூ. என் முன் நில்லாதே.

பழனி : என்ன கடுமையான சொற்கள். சாந்தா சாகும் வரையில் கைம்பெண்ணாக வாழவேண்டுமா என்று கேட்டதற்குக் கிடைத்த பதில் இதுதானா? உதை கிடைக்கும் அப்பா! என் உறுதியை நிலை நாட்டியே தீருவேன்! இது உறுதி. இல்லையேல் என் உயிருக்கே இறுதி. பார்க்கிறேன்.

(போதல்)

மணி : மடப்பயல்கள்! என்னிடமா நடக்கும்.