பொருளடக்கம்நச்சுக்கோப்பை

காட்சி 13 / 18

சீன். 13.

சீன். 13.

மூல ஸ்கேன் 44, 45, 46

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம் : பொதுக் கூட்டம்

(பழனி-சிவகுரு-பெண்கள்-ஏகாம்பரம் பட்டாளத்திலிருந்து வரல்.)

(பாட்டு)

பழ : அன்புள்ள தோழர்களே! இந்தக் கூட்டத்திற்குச் சிவகுருவைத் தலைமை வகிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சிவ : வணக்கம்! அன்புள்ள தோழர்களே! மாணவர்களே! மாணவிகளே! இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும்படி கேட்டுக்கொண்ட தோழர் பழனியப்பனுக்கு என் வணக்கம். நான் ஏகாம்பரத்தைப்பற்றிச் சில வார்த்தைகள் பேசப் பிரியப் படுகிறேன் சில ஆண்டுகளாக நம்மிடமிருந்து தொண்டாற்றி வந்த ஏகாம்பரம் அவர்கள் காதல் பாதையில் விளைவு ஏற்பட்டு, விளைவு வேதனையாக முடிந்த காரணத்தால் பட்டாளத்திற்குச் சென்ற செய்தி மிகவும் குறிப்பிடத்தக்கதோடு நாட்டுக்கும் சேவை செய்தவராகி விட்டார். அவரது பட்டாளத்துப் பயிற்சி வருங்காலப் போராட்டத்திற்கு ஒரு ஒத்திகை! அவருக்குத் தோழர் பழனியப்பன் வாழ்த்து வாசித்து அளிப்பார்கள்.

(கொடுத்தல்)

வாழ்த்து :

பழனி : வாழ்க தமிழ்! வருக ஏகாம்பரம்! உமது வரவு நல் வரவு ஆகட்டும்! குடிக்கவும், குஷாலாய்ப் பேசவும், சீட்டாடவும்; சிங்காரிகளுடன் உறங்கவும் தமிழர் பலர் உண்டு. ஆனால் தங்கள் வாழ்வு அங்ஙனம் வீழ்தல் கூடாது. வீழாது. தங்கள் வாழ்வை விழைகிறோம். வருக ஏகாம்பரம்! வருக! வருக!!

ஏகா : தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே! வணக்கம்! அன்று நமது தமிழ் நாட்டிலே வாழ்ந்த வீரத்தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைப் போருக்கு அனுப்பிய செய்திகள் நாம் ஒவ்வொருவரும் கேள்விப் பட்டிருக்கிறோம். ஒரு தாய் தன் மகன் முதுகில் காயம் பட்டு அவன் இறப்பானேயாகில் தன்மகனுக்குப் பாலூட்டிய மார்பை அறுத்து விடுவேன் என்று சபதம் கூறிச் சமர்க்களம் சென்று அங்கு தனது மைந்தன் மார்பிலே குருதி வழியக்கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டாள் என்பது தமிழக வரலாறு. பெற்றோரும் உற்றோரும் காதலரும் போர்க்களத்தில் மாண்டனர் என்ற செய்தியைக் கேட்டு முரசொலி கேட்கும் திக்கிலே எதிரிப் படைகளை எதிர்த்துச் செல்வாய் மகனே என்று அனுப்பியது அன்றைய தமிழகத்தின் வரலாறு. அத்தகைய தமிழகம் இன்று பயமிகு படுகுழியாகி விட்டது.

மேலும் அதில் நான் காதல் இழந்த காரணத்திற்காகப் பட்டாளத்திற்கு ஓடி விட்டேன் என்ற செய்தியைக் கேட்டு எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு அளித்தது ஆச்சரியமாய் இருக்கிறது. ஆகையால் இதை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் வணக்கம்.!

சிவ : இத்துடன் கூட்டம் முடிவடைந்தது. எல்லோருக்கும் வணக்கம்.