காட்சி 15 / 18
சீன். 15.
சீன். 15.
மூல ஸ்கேன் 49, 50
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: தடாகம்
சாந்தா தண்ணீர் எடுத்தல்
ஏகாம்பரம் வந்தல்
ஏகா : சாந்தா! உனக்குச் சரியான தண்டனை கிடைத்தது. உலகம் உன்னைப் பழிக்குப் பழி வாங்கிற்று. ஏகாம்பரனை ஏமாற்றினாய். நீ ஏமாந்தாய். என் காதலை மறந்து காசாசை பிடித்து அழகப்பனை மணந்தாய். அதன் விளைவு வேதனையாக முடிந்தது. முறிந்த காதல் விதவைக் கோலத்திலும் அவளுடைய விழிகளின் பாய்ச்சல் நிற்கவில்லை. மறுபடியும் நீ என்னைக் காதலிக்கிறாயா? அல்லது விபசார வாழ்வு நடத்த எண்ணமா? இல்லை! சாந்தா என்னை ஏமாற்றவில்லை. அவள் விழிகளால் காதலை வாரி வாரி இறைத்துச் சென்றுவிட்டாள். காதலா, மன்னிப்பு உண்டா என்று கேட்பதுபோல் இருந்ததே அவள் உதடுகளின் அசைவு! சீர்திருத்த உலகில் தாவ நினைக்கிறாள் அத் தையல். உலகமே நீ கூறு! நான் சாந்தாவை மன்னிக்கலாமா என்று. நான் சாந்தாவை மன்னிக்க உலகம் சம்மதிக்குமா? சீ! என்னை ஏமாற்றிவளையா மன்னிப்பது? உதைத்த காலுக்கா முத்தம்? உமிழ்ந்த வாய்க்கா சர்க்கரை? இல்லை! சாந்தா என்னை மறக்கவில்லை. அப்படி மறந்தால்தான் என்ன? என் இதயத்திலே எரியும் தீப்பொறியல்லவா அவள். எந்தச் சமுதாயம் அவளைப் பணத்திற்காக பலியிட்டதோ அதே சமுதாயம் அவளுடைய வாழ்வைத் துண்டித்தது. எந்தச் சமுதாயம் அவளுடைய வாழ்வைப் பிணைத்ததோ அதே சமுதாயம் அவளுடைய வாழ்வை முறித்தது. எந்த சாஸ்திரம் அவளுக்குத் திருமணம் நடத்தி வைத்ததோ அதே சாஸ்திரம் அவளை விதவையாக்கிற்று. எந்த வைதிகம் அவளது காதலை ஏற்க மறுத்ததோ அதே வைதிகம் அவளது தாலியை அறுத்தது. கணவனை இழந்த சாந்தாவின் உள்ளம் ஒடிந்திருக்கலாம் ஆனால், அவளது உள்ளத்தில் எழும் உணர்ச்சிமாத்திரம் ஓய்ந்துவிடவில்லை. மறுபடியும் என்னை மணக்க விரும்புகிறாளா? ஆம்! சந்தேகமில்லை. உண்மையாகவே விரும்புகிறாள் சாந்தா!