காட்சி 7 / 18
சீன். 7.
சீன். 7.
மூல ஸ்கேன் 25, 26, 27, 28, 29, 30, 31
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: அழகப்பன் வீடு
(நண்பர்கள் வருகை. கந்தன் இருத்தல்)
(சிவகுரு, கந்தன், அழகப்பன்,சீட்டாட்டம்: மதுவிருந்து)
அழ: என்ன பிரதர்! இன்னைக்கு பிளே ஒன்றும் சுகமில்லை.
சிவ : பிரதர்!.ராஜால்லாம் ராணியா தெரியுது.ராணி எல்லாம் ராஜாவா தெரியுது. என்ன பிரதர்! இண்ட்ரஸ்டே இல்லை
அழ : ஏய் கந்தா! போடு.
சிவ : என்ன பிரதர்! எங்கே இன்னும் கணபதியும் ஜம்புவும் வரலே.
அழ : வந்திடுவாங்க பிரதர்.
ஜம்: குட்மார்னிங் பிரதர்.
(ஜம்பு வரல்)
அழ : ஓ! குட்மார்னிங்! ஏய் கந்தா! சேர் எடுத்துப் போடுடா. ஏன் பிரதர், இவ்வளவு நாழி?
ஜம்: கொஞ்சம் வீட்ல வேல இருந்தது.
சிவ : எங்கப்பா கணபதியைக் காணோம்.
ஜம்: அவன் கோயிலுக்குப் போயிருக்கான் பிரதர் .
அழ: இன்னைக்கு என்னப்பா புதிசாயிருக்கு; என்னைக்கும் இல்லாத திருநாளாக இருக்கு.
சிவ : ஓ! இன்னைக்கு திருவாதிரை உற்சவமில்ல.
கந்: ஆமாங்க எஜமான்! பட்டுப் புடைவைகள் நடமாட, வாலிபக் கண்கள் தாண்டவமாட பஸ்ட்கிளாசு காட்சியின்னு பேப்பரில் போட்டிருக்கு ஏஜமான்.
சிவ : அது என்னடா பஸ்ட்கிளாசு காட்சி?
கந்: அதுதாங்க எஜமான், பார்வதி பருவம் அடைஞ்சிட்டான்னு அந்தப் பரமசிவம் நெற்றியிலே வழியுது பாருங்க திருச்சாந்து,அடடா! பஸ்ட் கிளாசு காட்சி.
சிவ : என்னப்பா அழகப்பா, உன் வேலைக்காரன் இவ்வளவு மேலே போயிட்டான்.
அழ : அதுவா ! அவன் இப்ப எல்லாம் 'திராவிடநாடு' பேப்பரு படிக்க ஆரம்பிச்சிட்டான். அதனாலேதான் பேசுறான்.
(கணபதி வரல்)
கண: குட்மார்னிங் அழகப்பன்!
அழ : எப்பா,இவ்வளவு நாழி?
கண : கோவிலுக்குப் போயிட்டு அப்படியே நம்ப ஒய்ப் ஊருக்குப் போகணும்னு சொன்னாள்.அப்படியே அனுப்பிச்சிட்டு வர்ரேன்.
அழ: ஏய் கந்தா,அய்யருக்கு போட்டு கொடுடா.
கந்: சாமி,சும்மா சாப்பிடுங்க.
கண : கந்தா! சிகிரெட் எடுடா.
சிவ : பிரதர்! இன்னைக்கு எல்லாம் ஜாலியா இருக்கோம். ஒரு பாட்டு பாடுங்கோ.
அழ : என்ன பிரதர்! என்னைப் பாடச் சொல்றீங்க. நான் பாடி யாரு கேக்கறது. டோன் வேறே கெட்டுடுத்து. சின்னப் பையனாக இருக்கும்போது ஸ்கூல்ல நாடகத்திலே நடிச்சது. கந்தா, என்ன நடத்தினோம்?
கந் : நாடகம் நடத்தினீங்க.
அழ : அப்ப நல்லதங்காள் நாடகம் நடந்தது. அதுலே நான் லோகிதாஸனாக நடித்தேன்.
கந் : எஜமான்! நல்லதங்காவிலே லோகிதாசன்...!
அ: டேய்! கதைப் போக்கு உனக்கென்னடா தெரியும்?
ஜம்: ஏய்! அவரு நடிக்காமேயா சொல்றாரு. அப்போ நீங்க பாடுங்க பிரதர்.
கண : பாடத்தெரிஞ்சா பாடுங்க. இல்லேன்னா கத்துங்க பிரதர் ஜாலியா
சிவ : ஏய் ஜம்பு! நம்ப அழகப்பன் பாடினா கிட்டப்பா எல்லாம் எட்டப்பான்னு போயிடணும்.
அழ: நீங்களும் பாடித்தான் ஆகணும்னு ரொம்ப டிரபுள் பண்றீங்க. பாடலேன்னு நமக்குள்ள பார்மால்டி கெட்டுடும். பாடுறேன்:
"பாலத்தின்மீது ரயிலோடக் கண்டேன் ரயில், மெயிலாச்சுதடி- குயிலே ஸ்டேஷனை விட்டுப் புறப்பட்ட ரயிலும் வேகமாய்ப் போகுதடி - குயிலே "
சிவ : இது தாண்டா ராமலிங்க சுவாமி அருட்பா .
கண: அருட்பாவா. அப்போ பாடுங்க பிரதர்.
(பாட்டு)
அழ : என்ன பிரதர்! நான் அப்போ பாடினேன். நீங்க எல்லாம் கேட்டு ரசிச்சிங்க. இப்போ சாரீரம் கழுதை மாதிரி இருக்கு.
ஜம்: ரொம்ப நல்லா இருக்கு. இந்தப் பாட்டே ரிகார்டு கொடுக்கலாமே.
கண : பிரதர் டைம் ஆச்சி.நான் வர்றேன். அழகப்பன்! நான் வரேம்பா.
அழ: போறிங்களா ... அப்ப போங்கோ.
சிவ : பிரதர்! நான் இன்னிக்கு சினிமாவுக்குப் போகலாம்ணு இருக்கிறேன். நீயும் வாரியா?
அழ: எனக்கு நெஞ்சு வலி ஜாஸ்தியாய் இருக்கு. நீயே போயிட்டுவா.
சிவ: என்னப்பா வருஷம் 300 நாளும் நெஞ்சுவலின்னு சொல்றே இன்னிக்கு ஒருநாளைக்குத்தானே. ஜாலியா போயிட்டு வரலாம்.
அழ : என்ன படம் நடக்குது.
சிவ : தாராசசாங்கம்.
அழ : என்ன பிரதர்! இருந்து இருந்து தாராசசாங்கத்துக்கா போறது? யாரோ எண்ணெய் தேக்கிறாங்களாம், அதுக்கா போறது?
சிவ : புராணப்பட மப்பா புராணப் படம்.
அழ : அப்போ சரி . போகலாம். ஒரு சீட் ரிசர்வட் செய்-பஸ்ட் கிளாஸ்.
கந்: எஜமான்! நானும் வர்றேன்.
அழ : அப்போ இரண்டு சீட் ரிசர்வ் செய்.
சிவ: அவன் சர்வண்ட் தானே.ப்ளோர் போதும்பா.
அழ: அவன் சர்வண்ட் -வேலைநேரத்திலே! மத்த நேரத்திலே என் டியரஸ்ட் பிரண்டு.
சிவ: அப்போ நான் வர்றேன்.
அழ : சிவகுரு! 3 சீட்டா ரிசர்வட் செய். அதோட பஸ்ட்கிளாஸ் செடன்பாடி டேக்ஸ் ஒன்னும் அனுப்பு.
(சிவகுரு போதல்)
அழ : ஏய் சாந்தா! சாந்தா! ஏய் சாந்தா! எங்கே போய்ட்டா அவள்?
சாந்: ஏன்?
அழ : ஏனடி மௌனம் சாதிக்கிறாய்?
சாந் : அதிருக்கட்டும். ஏன் கூப்பிட்டீர்கள்? கூப்பிட்ட சமாச்சாரத்தைச் சொல்லுங்கோ.
அழ : எப்பொழுது பார்த்தாலும் கடுகடுத்த முகம் தானா? வெடு வெடுத்த பேச்சுத்தானா? ஏன் இந்த வெறுப்பு?
சா: ஆ! தாங்கள் நடந்து கொள்ளும் காரியத்திற்காக நான் மகிழ்ச்சியடைய வேண்டுமா?
அழ: மகிழ்ச்சியடையாவிட்டாலும் வெறுக்காமலாவது இருக்கலாம் அல்லவா?
சாந் : அது நானாகச் செய்து கொள்ளவில்லை.
அழ : வேறே யாரு-ஆண்டவன் கீண்டவன் உள்ளே பூர்ந்துவிட்டு உன்னை ஆட்டிப் படைக்குறானா?
சாந்: நான் தாசியல்ல!
அழ : வேறே யாரு ...தேவடியாளா?
சாந்: இதற்கெல்லாம் பதில் சொல்லத் தயாராயில்லை. செய்தியைச் சொல்லுங்கள்.
அழ: நீ என் அடிமை!
சாந்: அன்பிற்கு! அதிகாரத்திற்கல்ல!
அழ : நீ என் வீட்டில் கொட்டிக் கொள்கிறாயே சோறு, அதற்காவது நீ அடிமைப்பட்டவள் தானேடி.
சாந் : சோற்றைக் கண்டு வாலைக் குழைக்கும் பிராணி வேறு. அதிகமாகப் பேசவேண்டாம்.
அழ: சீ! நன்றி கெட்டவளே.
சாந்: ஆ! தாங்கள் செய்த எந்த நன்றியை நான் மறந்தேன். மாட மாளிகையிலே, மணந்தரும் மலர்ச் சோலையிலே காதலைப் பருகக் காமக்கிழத்தியாக்கினீர். இது தானே என்னிடம் காட்டும் அன்பும் வாஞ்சையும்.
அழ : அடேடே டே......இதை யெல்லாம் எப்படி கத்துக்கிட்டே. மாடமாளிகையாம். கூட கோபுரமாம். என்னடிது- சரிதான். உன் அண்ணன் சொல்லிக் கொடுத்திட்டான் போலிருக்கே . எங்கே பிகின்-ஒன்சுமோர்.
சாந்: தங்களைச் சொல்லி என்ன பயன்? என்னை இப்படுகுழியில் தள்ளிய பாதகர்களையல்லவோ சொல்ல வேண்டும்.
அழ : ஓ! போய் கோட்டை எடுத்துட்டு வா
(சாந்தா கோட்டை எடுத்து வரல்)
அழ : ஏய்! என்னைக் கொண்டுபோய் வெளியே விடு. ஏண்டி, என்னை வெளியே அழைச்சிட்டுப் போறையா? கொல்லைப் பக்கம் அழைச்சிட்டு போறயா? என்னை அங்கே அழைச்சிட்டுப்போய் கொல்லப் பார்க்கிறீயா?
சாந் : இல்லை. தெருப்பக்கம்தானே இது?
அழ : தெருப்பக்கமா. நல்லா பாருடி. சரி இப்படியெல்லாம் செய்யாதே. தூங்கும் போது தலையிலே கல்லைத் தூக்கிப்போடு. நான் இப்போ வெளியிலே போறேன் வந்து பேசிக்கிறேன். நீ மதுவருந்தி விட்டுப் பேசுகிறாய் குடிவெறியிலே பேசற. நான் வந்து போகிறேன் பிலடிபகர்.
(போதல்)
சாந் : மதுவருந்தி விட்டுப் பேசுகிறேன். மதுவல்ல எனக்குக் கொடுக்கப்பட்டது. கொடிய நஞ்சு. அதை உண்ட மயக்கத்தில் உளறுகிறேன். துருப்பிடித்துப் போன சமூகமே! நீ கொடுத்த நஞ்சு என்னை உயிரோடு வைத்துக் கொல்லுகிறதே. நானாகத் தேடிக் கொண்டேன் நாச காலத்தை! கடல் அழிந்தாலும் காதல் அழியாது என்றேன். கருத்தழிந்தேன். ஏகாம்பரத்தின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டேன். என் வாழ்வை வெட்டிப் பிரித்த ஏ வேற்றுமைப் பிசாசே! உனக்கு அழிவு காலம் அண்மையில் இல்லையா? இது நீதியா? நியாயமா? நேர்மையா?
சீன் முடிவு.