காட்சி 8 / 18
சீன். 8.
சீன். 8.
மூல ஸ்கேன் 32, 33
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம் : ரோடு
(சின்னையா பிள்ளை, கன்னையா செட்டி வருகை)
சின் : ஏனப்பா பழனி, எங்கே போகிறாய்?
பழனி : இன்று ஒரு பொதுக்கூட்டம். அதில் பேச வேண்டும். அதற்காகப் போகிறேன்.
சின் : சாமியைப் பழித்துத்தானே பேசப்போகிறீர்கள்?
பழனி : சாமியைப் பழிக்கிற கயவர்களைப்பற்றிப் பேசப் போகிறேன். ஆமாம், நீங்கள் எங்கே போகிறீர்கள்?
சின் : நாளைக்கு என் பொண்ணுக்குக் கலியாணம். மழை பெய்யக்கூடாதுன்னு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைச்சிட்டு வரலாம்னு போறேன்.
பழனி : அப்போ, செய்யுங்கோ.
(கன்னையா வருகை)
பழனி : என்ன! கன்னையா செட்டியவர்களே, எங்கே இவ்வளவு தூரம்?
கன் : மழையில்லாமே நிலமெல்லாம் வறண்டு விட்டது. நாளைக்கினாலும் மழை பெய்யட்டுமின்னு மாரியம்மனுக்கு ஒரு தேங்காய் உடைக்கப்போகிறேன்.
பழனி : சின்னையா பிள்ளையவர்களே! கன்னையா செட்டி கூறிய வார்த்தைகளைக் கேட்டீரா? நீர் உமது மகளுடைய கல்யாணத்துக்கு மழைபெய்யக் கூடாதுன்னு தேங்காய் உடைக்கப்போகிறீர். அவர் நிலம் வறண்டுவிட்டது. மழை பெய்ய வேண்டுமென்பதற்காகத் தேங்காய் உடைக்கப்போகிறார். இதில் கடவுள் யாருக்கு அனுக்கிரகம் செய்வார்?
சின் : ஏன்? நல்லவாளுக்குச் செய்யட்டுமே!
கன் : அப்படியின்னு நான் கெட்டவனா?
சின் : நாளை தெரிந்துவிடுகிறது.
கன் : ஓய்! சொல்லிக் காட்டாதேயும், உமது பெருமையை. என்னைப்போல் யார் பக்திமான் இருக்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் அனுக்கிரகம் செய்வார்.
சின் : நீர் பெரிய பக்திமானோ?
கன் : நீர் பெரிய பக்திமானோ?
பழனி : ஐயா! வெய்யில் எரிப்பதும் மழைபெய்வதும் இயற்கையின் செயல். இதற்காக நீங்கள் சண்டையிட்டுக் கொள்வது முட்டாள் தனம்!
இருவரும் : முட்டாள் தனம் என்று சொல்லாதேயும்.
பழனி : அதைவிட அழகான வார்த்தை கிடைக்க வில்லையே, ஐயா! நாளை மழை பெய்துவிட்டால் நீர் அயோக்கியன் என்பதை ஒப்புக்கொள்கிறீரா? அல்லது நீர் தான் ஒப்புக் கொள்கிறீரா? மேல் நாட்டிலே மனிதன் யந்திரமும் கையுமாகப் போராடிக் கொண்டிருக்கிறான். நீங்கள் களிமண்ணும் கையுமாக பிள்ளையார் பிடிக்கிறீர்களே, இது அறிவுடையாகுமா?
கன் : சரி. சரி. இப்ப நீ எங்கே போறே?
பழனி : பொதுக் கூட்டத்திற்கு.
இரு : அப்ப நாங்க கோவிலுக்குப் போயி தேங்காயை உடைத்துக் கொண்டு வருகிறோம்.