பொருளடக்கம்நச்சுக்கோப்பை

காட்சி 6 / 18

சீன். 6.

சீன். 6.

மூல ஸ்கேன் 24, 25

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம் : காடு

(ஏகாம்பரம் சாந்தா படத்தை வைத்து அழல்)

சாமியார் பாட்டு.

ஏகா: சாந்தா! நீ என்னை இப்படி ஏமாற்றுவாய் என்று நான் கனவிலும் நினைக்கவில்லையே! எனது குமுறும் உள்ளத்தை உன்னிடம் எப்படிக் காட்ட முடியும் ? நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்? என் உண்மை உள்ளத்தோடு உன்னைக் காதலித்தேன். நீயும் உன் காதலை வாரி வாரி வழங்கினாய். என் உள்ளத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். ஆனால் நீ ஏமாறவில்லை. நான் ஏமாற்றம் அடைந்தேன். அன்று நீ பேசிய கொஞ்சும் மொழி விருந்து இன்னும் என் நெஞ்சை இனிக்கத்தான் செய்கிறது .கரும்பே என்றாய்! கரும்பு இன்று உனக்கு வேம்பாயிற்று! மண்ணும் விண்ணும் வீழினும் மறவேன் என்றாய்!

சாந்தா! நீ என்னை உண்மையாகவே காதலித்தாயோ அல்லது உனது அன்பு வெறும் வேசிகளின் அன்புதானா? காதலாம், கண்ணாம், மூக்காம், அதற்குத் தெய்வீக சக்தியாம்! இதுதானா அந்தச் சக்தி? ஓ!

ஒரு இளைஞனை இன்முகம் காட்டி இழுத்து கண்களால் பேசி, கடிதங்களால் மயக்கி,வாய் மொழியால் வாட்டி கடைசியில் கலங்கவிடுவதென்றால் இதை உலகம் பார்த்துக்கொண்டா இருக்கும்? சாந்தா ! உன் மனமே உனக்கு நீதி வழங்கும். உன்னையே நம்பி உனக்காகவே உலகில் வாழ்ந்து உன்னாலேயே ஏமாற்றப்பட்டு உள்ளம் உடைந்து ஓடும் ஏகாம்பரத்தின் நெஞ்சின் சாபத்தை நீ ஏற்றே தீர வேண்டும். இதிலிருந்து நீ மீளமுடியாது.சாந்தா! அன்பனையா மறந்தாய்? அழகப்பனுக்கா மாலையிட்டாய்? இதோ போகிறேன்-உலகை விட்டு அல்ல, இந்த ஊரைவிட்டு! சாந்தா! உனக்கு உலகம் அளிக்கும் தண்டனையைப் பார்க்காமலா சாவேன். சாந்தா?