பொருளடக்கம்நச்சுக்கோப்பை

காட்சி 5 / 18

சீன். 5.

சீன். 5.

மூல ஸ்கேன் 22, 23, 24

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம் : ஏகாம்பரம் வீடு

(சாந்தா படத்தைப் பார்த்து அழல்)

(பாட்டு, மீனாக்ஷி வந்தல்)

ஏகா — பாட்டு. சாந்தா

(மீனாக்ஷி வரல்)

மீனு: ஏம்பா, ஏகாம்பரம்! இப்படி இரண்டு நாளாய்ப் பட்டினியாய் இருக்கிறாயே, உடம்பு என்னத்துக்கு ஆகும்? வா சாப்பிடலாம்.

ஏகா: அம்மா! எனக்கு இப்பொழுது சாப்பாடு வேண்டாம்.

மீனு: நீ என்னவோ, சாந்தா, சாந்தான்னு அழுது கிட்டு இருக்கே. அவள் என்னவோ சுகமா புருஷன் வீட்டிலே இருக்கிறாள்.இப்ப நீதான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்.சரி! சாப்பிடவா.

ஏகா: ஐயோ! என்னைத் தொந்தரவு செய்யாதிங்களேன் எனக்கு இப்பொழுது வேண்டாம் போங்கள்.

(ஆதிகேச முதலியார் வருதல்)

ஆதி: ஏய் மீனாட்சி! ஏகாம்பரம் சாப்பிட்டானா?

மீனு: அதுக்குத்தான் கூப்பிடுகிறேன். சாப்பாடு வேண்டாமாம்!

ஆதி: சாப்பாடு வேண்டாமா? வேறென்ன, சாந்தா வேணுமா?

ஏகா : அப்பா, மீண்டும் மீண்டும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள், வேண்டாம். விட்டு விடுங்கள்.

ஆதி: என்னவோ சாது எனப் பெயர் வாங்குவாய்ன்னு நினைச்சேன்.

ஏகா : ஆமாம்! சூது செய்பவன் கூடத்தான் சாது எனப் பெயர் வாங்குகிறான்!

ஆதி: அதிகமாய்ப் பேசவேண்டாம் - அதிகப் பிரசங்கி நாயே!

ஏகா : அறிவோடு பேசுங்கள் அப்பா.

ஆதி: அறிவாவது! கிறிவாவது! அடிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் உடைஞ்சுடும்.

ஏகா: அப்பா! ஏன் அடிக்க மாட்டீர்கள். இனி நான் உங்களிடம் பேசத் தயாராயில்லை. பகல் முழுதும் உழைத்து அலுத்த பாட்டாளியின் மனைவி பாம்பு கடித்திருக்கும் சமயம், பட்ட கடனைத் தீர்ப்பாய் என்று பார்ப்பான் வந்து போலவும், கப்பல் மூழ்கிய காரணத்தால் கரையை அடைய கடலில் நீந்தும்போது மகா மீன் வாய் பிளந்து வரவேற்பது போலவும் வேதனையிலே வாடும் என்னிடம் பாதகமாக நீர் பேசுகிறீர். தந்தையே! கட்டக் கந்தையுமில்லையே என்று கதறும் கபோதியிடம் விந்தை மொழி பேசுவரோ? என் செய்வது! போரின் புகைச்சல் நம் ஊரை அணுகும் வேளையில், யுத்த வாடை இந்தியக் கரையை மோதும் நேரத்தில் நாச வேலையை நடாத்திய நேசர்களின் தொண்டர் அல்லவா தாங்கள்! ஏன் பேசமாட்டீர்கள்? இன்னமும் பேசுவீர்கள்.

ஆதி : அடே, சொர்ணை கெட்டவனே! உன்னைப்பெத்து வளர்த்து போதித்து, சோறு போட்டு,இந்தத் தசையை வளர்த்த என்னிடம் இப்படித்தான் பேசவேண்டும். விதி மற்ற வீணனுக்கு வீராப்பு வேறு. உன்னை எவ்வளவோ மரியாதையாக நடத்தணும்னு நினைச்சேண்டா. நீயே கெடுத்துக்கிட்டே. இப்பப் பேசக் கத்துக்கிட்டு மூச்சு விடாமே பேசறே. போடா, மடப்பய மகனே! (உள்ளே போதல்)

மீனு : ஏம்பா ஏகாம்பரம்! அப்பா கிட்டே இப்படிப் பேசலாமா? அப்பாவும் கோவிச்சிக்கிட்டுப் போயிட்டாரு வா, போகலாம்.

ஏகா: அம்மா! எனக்கு வேண்டாம் போங்கள்.

மீனு: உன்னைப் பெத்த வைத்திலே பிரண்டையைத்தான் வச்சுக்கணும். இனி என் மகன் என்பதைத் தொலச்சுட்டேன் போ.

(உள்ளே போதல்)

ஏகா: சண்டாளர்கள்! ஐயோ! காதலியும் கைவிட்டாள். தந்தையோ மந்தை மாடென எண்ணிவிட்டார். தாயோ பேயெனப் பிதற்றுகிறாள். நிலையறியாத கொலைஞர்கள்! இனி இங்கிருப்பது சரியல்ல. எங்காவது ஓடிப்போய் விட வேண்டியதுதான்.