காட்சி 42 / 47
காட்சி 42
காட்சி 42
மூல ஸ்கேன் 145, 146, 147, 148, 149, 150, 151, 152
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(மக்கள் மன்றம் - எல்லாரும் இருக்கிறார்கள், கலாராணி தவிர. பொன்னழகன் குழப்பத்துடன் பேசிக் கொண்டிருக்கிறான்.)
பொன்: மாற்றாரும் மலைத்திடும் அளவுக்கு மகோன்னத வளர்ச்சி பெற்றிருக்கிறது நமது மக்கள் மன்றம் என மகிழ்ந்திருந்தேன்! இந்த மன்றத்தை அழித்திட யாருக்கும் துணிவு பிறக்காது என இறுமாந்திருந்தேன்! மகிழ்ச்சி - இறுமாப்பு - பெருமிதம் - அத்தனையும் தூள் தூளாகப் போய் விடக் கூடிய சூழ்நிலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன! எதிர் தரப்பிலே இருந்து அல்ல! நமக்குள்ளேயே நாச எண்ணங்கள் தலைதூக்குகின்றன. கோட்டைக்குள்ளேயே குத்தும் வெட்டும் உருவாகக் கூடிய சந்தர்ப்பங்கள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன! அணைபோட்டுத் தடுக்க முடியாத துரோக வெள்ளம்! ஆம், தோழர்களே! ஐந்தாம் படைகள் இங்கேயே இருக்கின்றன! எந்த நேரத்திலும் இந்த மன்றத்தின் வாழ்வை தீர்த்துக் கட்டக் கூடிய அரசனுடைய கையாட்கள் நமக்குள்ளேயே உலவுகிறார்கள்!
(அல்லி எதுவும் புரியாமல்)
அல்லி: ஐந்தாம் படை? அரசனின் கையாள்? யார் அவர்கள்? பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்! இப்போதே நடவடிக்கை எடுப்போம்!
பொன்: நான் யாரைச் சொல்லுவது அல்லி? என்னையே நான் நம்பமுடியவில்லை! நீ கூட துரோகியாக இருக்கலாம்!
அல்லி: ஆ!
பொன்: உதாரணத்துக்குச் சொல்கிறேன்! என்னைக் கூட அரசன் தன்னுடைய கங்காணியாக ஆக்கிவிடக் கூடும்! ஆக்கி இருக்கலாம்! நீ கூட அரசனுடைய அழகில் மயங்கியிருக்கலாம்! அவனது அரண்மனை - ஆடம்பரம் - அந்தஸ்து இவைகளில் இருதயத்தைப் பறிகொடுத்திருக்கலாம்! அதன் காரணமாகவே, அவனது உயிரைக் கூட நீ காப்பாற்றியிருக்கலாம்?
அல்லி: என்ன சொல்லுகிறீர்கள்?
பொன்: முன்பே சொன்னேனே, உதாரணம் என்று! யாரை யார் நம்ப முடிகிறது அல்லி? - கண்களைக் கூட எவ்வளவோ பாதுகாப்பாகத்தான் வைத்திருக்கிறோம் - அவயவங்களிலேயே முதலிடம் அதற்குத்தான் தருகிறோம் - தூங்கும் போது கூட இமைக்கதவால் மூடி, துரும்பு விழுந்து துன்பத்தைக் கூட அதற்குத் தர மனமின்றி அவ்வளவு அருமை பெருமையாக அரவணைத்துக் காப்பாற்றுகிறோம்! ஆனாலும் அந்தக் கண்ணிலே - உள்ளுக்குள்ளே ஒரு சிறு கோளாறு ஏற்பட்டாலும் போதும்! அப்பப்பா! உபத்திரவம் தாங்க முடிகிறதா? மனிதன் தப்புவதுதான் சாமான்யமாயிருக்கிறதா? அதனால்தான் போலும் கண்களையும் பெண்களையும் ஒப்பிட்டுக் கூறுகிறார்கள்? இரண்டும் அழகானவை! அதுபோல இரண்டும் ஆபத்து நிறைந்தவை!
அல்லி: உங்கள் பேச்சு அர்த்தமற்றது என்று நான் கூற மாட்டேன்? ‘உதாரணத்திற்காக’ - என்பதையும் நான் நம்பத் தயாராயில்லை! எதையோ மறைக்கிறீர்கள்! மறைக்காமல் சொல்லுங்கள்!
பொன்: நான் ஏன் மறைக்க வேண்டும்? மங்கையராகப் பிறந்து மன்னனைக் காதலித்தால் அல்லவா - மக்கள் மன்றத்திலே விசாரணையின் போது மறைக்க வேண்டும்!
அல்லி: ஓகோ! கலாராணியைப் பற்றிப் பேசுகிறீர்களா? ஆமாம் - அவளை நாமென்ன மன்ற உறுப்பினராகவா ஆக்கியிருக்கிறோம்? நம் மன்றத்திலே ஒரு கைதி அல்லவா அவள்? ஐந்தாம் படை - துரோகி என்பதெல்லாம் அவளுக்கு எப்படிப் பொருந்தும்?
பொன்: என்னமோ சொன்னேன்! யாருக்குப் பொருந்துகிறதோ அவர்கள் அதைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளட்டும்! ஆனால் ஒன்று! அல்லி! ஐந்தாம்படை வேலையினால் இந்த மன்றத்தை அழித்து விடலாம் என்று மட்டும் யாரும் கனவு காண வேண்டியதில்லை! மக்கள் மன்றம், இன்று அழியலாம்! பொன்னழகனும் அவன் தோழர்களும் தூக்கு மேடையிலே உரிமைக்குரல் எழுப்பியபடி ஊசலாட நேரிடலாம். ஆனால், நாளை மறுநாள் - அதற்குப் பிறகு - மக்கள் மன்றமே தோன்றாது என்று எந்த ஆதிக்க வெறியனாவது மனக்கோட்டை கட்டினால் நிச்சயம் ஏமாந்தே போவான்! அல்லி! இனியொரு முறை பேச சந்தர்ப்பம் கிடைத்தால், அந்த முட்டாள் அரசனிடம் இதை ஞாபகப்படுத்த மறந்து விடாதே!
அல்லி: என்ன? அரசனை நான் சந்திப்பதா?
பொன்: ஆமாம்! நீதானே சொன்னாய்? - அவனைக் காப்பாற்றிய அன்றைய தினம் அவன் உன்னோடு பேசிக் கொண்டிருந்தான் என்று!
அல்லி: அரசனைக் காப்பாற்றியதைப் பற்றி அடிக்கடி நினைவூட்டுகிறீர்கள்! அதை ஒரு பெரிய குற்றமாகக் கருதுகிறீர்கள் போலும்! அது தவறானால், மன்றத்தின் தீர்ப்புக்கும், தண்டனைக்கும் தலைவணங்கத் தயாராயிருக்கிறேன்!
பொன்: அதை நானும் தவறாகக் கருதவில்லை - மன்றமும் கருதவில்லை! அரசனைக் காப்பாற்றியதென்ன? நீ அவனோடு காதல் கீதம் பாடினாய் என்று யாராவது சொன்னால் கூட நான் தவறாகக் கருத மாட்டேன்!
அல்லி: புரிகிறது தலைவரே - புரிகிறது! உங்கள் புதுமையான போக்கிற்குக் காரணம் புரிகிறது! தனிப்பட்ட கோபத்தைத் தங்களைப் போன்ற தலைவர்கள், இப்படிப் பொதுவான இடங்களில் தணித்துக் கொள்ளக் கூடாது என்பதை தயவாகக் கேட்டுக் கொள்கிறேன்!
பொன்: என்னம்மா பேசுகிறாய்...? மக்கள் மன்றத்துத் தலைவனிடம் பேசுகிறோம் என்பதை மறந்து விடாதே! மன்னனிடமல்ல; ஞாபகமிருக்கட்டும்!
அல்லி: ஞாபகமிருக்கிறது! நன்றாக ஞாபகமிருக்கிறது. தலைவரே! தங்கள் சகோதரி போல் பாவித்த என் மீது சதிப் பேச்சுக்களை வீசுவதின் மர்மம் என்ன? நான் என்ன குற்றம் செய்தேன்? அதைச் சொல்லுங்கள்! மக்களின் நல் வாழ்வுக்காக - பொன்னழகின் தலைமையிலே அணிவகுத்து நடப்பது என்ற உறுதியிலே இருந்து எள்ளவும் தவறியவளல்லவே இந்த அல்லி! மரண மேடையா? மன்னன் ஆணையா? - எதுவாயினும் தகர்த்தெறிந்து போர்க்கொடி உயர்த்தும் புரட்சிக் கொள்கையிலே இருந்து அணுவும் பின்வாங்கியதில்லையே இந்த அல்லி! பிறகேன் தலைவரே - என் மீது இந்த அபாண்டமான குற்றச் சாட்டுகள்? அக்கிரமமான பழிகள்? வேண்டாம் - இப்படியெல்லாம் பேசாதீர்கள்! (அழுகிறாள்) உங்கள் தங்கை - இதுபோன்ற தாக்குதல்களைத் தாங்க மாட்டாள், தலைவரே - தாங்க மாட்டாள்!
பொன்: உன் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லுகிறாயா அல்லி? நம்பித்தான் இருந்தேன்! இந்த உலகத்திலே யாரையும் விட அதிகமாக உன்னைத்தான் நம்பியிருந்தேன். நம்பியவனைத்தான் நடு ஆற்றில் விட்டு விட்டாய் அல்லி!
அல்லி: எதைப்பற்றி பேசுகிறீர்கள் என்று புரிகிறது - தலைவரே! உங்களை நான் சந்தித்த நாள் முதல் சகோதரனாகவே, கருதுகிறேன்!
பொன்: ஆமாம்! எனக்கு அது தெரியாமல்தான் போய்விட்டது! பொன்னழகனைச் சகோதரனாகவும், புவியாளும் மன்னனைக் காதலனாகவும் எண்ணுகிற ஒரு சதிகாரி எனக்குத் தங்கையாக வந்திருக்கிறாள் என்பது தெரியாமல்தான் போய்விட்டது!
அல்லி: ஆ! அய்யோ! அரசனின் காதலியா நான்! அக்கிரமமான குற்றச்சாட்டு! இந்த வார்த்தைகளை உடனே திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்...!
பொன்: முடியாது!
அல்லி: ஏன் முடியாது? என்னையும் அரசனையும் தொடர்புபடுத்தி அநியாயமான பொய்யைச் சொல்வதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?
தோழர்கள்: ஆமாம், அல்லி குற்றவாளி என்பதற்கு தலைவர் என்ன ஆதாரங் காட்டுகிறார்?
பொன்: நானே நேரில் கண்டேன்!
தோழ: அதற்கு சாட்சி?
பொன்: நானேதான்!
தோழ: வாதியே சாட்சியாக வரும் விசித்திரம் எந்த வழக்கு மன்றத்திலும் கிடையாது! அல்லியம்மாள் மீது வேண்டுமென்றே சாட்டுகிற குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம்!
தோ. அனைவரும்: ஆமாம், சரியான சாட்சியமில்லாமல், சதிக் குற்றம் சாட்டுவதை அனுமதிக்க முடியாது! முன்பொரு முறை இப்படித்தான், புதுமைப்பித்தனை சந்தேகப்பட்டு அவனது நெருங்கிய தொடர்பையே நமது மன்றம் இழந்து விட்டது என்பதை இப்போது ஞாபகப்படுத்துகிறோம்!
அல்லி: தலைவரே!, அல்லி ஒரு அசட்டுப் பெண் என்று கூறுங்கள்; கேட்டுக் கொள்கிறேன்! அகம்பாவக்காரி என்று அழையுங்கள்; ஆத்திரப்படவில்லை! பிடிவாதக்காரி என்று பேசுங்கள்; பெரிதுபடுத்திக் கொண்டிருக்க மாட்டேன்! பேதை - முட்டாள் - பேய்க்குணம் படைத்தவள் - பெண்ணல்ல, பிசாசு - இப்படியெல்லாம் பேசுங்கள்; ஆனால், இந்த மன்றத்திலே நாய் போல பணியாற்றிய என்னை - நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாதவள் என்று மட்டும் கூறாதீர்கள்! துரோகிப் பட்டம் சூட்டுவதைவிடத் தூங்கும் போது கல்லைப் போட்டுக் கொன்று விடுங்கள்..! என்னையா துரோகி என்கிறீர்கள்? இந்த மன்றம் வலிவும் பொலிவும் அடைய வாழ்க்கையைத் தத்தம் செய்திருக்கிற என்னையா துரோகி என்கிறீர்கள்? கல்லடியும் சொல்லடியும்பட்டுக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளைக் கனவிலும் மறவாது உயிரைத் திரணமாக மதித்து உங்களோடு அணிவகுத்து நிற்கும் - இந்த அபாக்கியவதி அல்லியா துரோகி? (அனைவரையும் பார்த்து)... நீங்கள் சொல்லுங்கள் தோழர்களே - அல்லி, துரோகியா? - அல்லி துரோகியா? - அல்லும் பகலும் அனவரதமும் உங்களோடு போர்க்கொடி பிடித்து அலையும் இந்த அல்லி துரோகியா? அல்லி துரோகியா? அல்லி துரோகியா?
அனைவரும்: இல்லை! இல்லை!! இல்லை!!!
பொன்: ம்.. பரவாயில்லை! தற்போதைக்கு அல்லி ஜெயித்து விட்டாள்! காலம் வரட்டும் - காரிருள் மறையும்... உண்மைக் கதிரவன் நிச்சயம் தோன்றுவான்!
கவி: (கவிஞர் வந்தபடி) கதிரவன் தோன்றுவதற்குள் நம் கதியெல்லாம் அதோகதிதான்!
பொன்: கவிஞரே!
கவி: மக்கள் மன்றம் தடை செய்யப்பட்டு விட்டது - சட்ட விரோதமாக்கப்பட்டு விட்டது!
பொன்: என்ன?
அல்லி: ஆ - மக்கள் மன்றத்துக்குத் தடையா?
கவி: அதுமட்டுமல்ல, இரவோடு இரவாக ரகசியமாகக் கூடியிருக்கும் சீமான்கள் சபையில் நம் அனைவரையும் நாளைக் காலையில் கைது செய்ய உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது!
பொன்: ஆ!
அல்லி: கைது செய்ய உத்தரவு?
கவி: அதோடு முடியவில்லை - அடக்குமுறை தர்பார்! நினைக்கவே நெஞ்சம் வெடிக்கிறதப்பா - புதுமைப் பித்தனின் பிணத்தைக் கொண்டு வருபவருக்குப் பரிசளிக்கவும் ஏற்பாடாகி விட்டது!
அல்லி: ஆ!
கவி: கண்ட இடத்திலே அந்தக் காம வீரனை யார் வேண்டுமானாலும் சுடலாம்!
அல்லி: அய்யோ! அவரையா? - சுடுவதா? கவிஞரே உடனே அவசரமாக நாம் காரியத்தில் இறங்க வேண்டும் - தோழர்கள் தங்களுடைய அபிப்பிராயத்தை வெளியிடலாம்.
பொன்: அபிப்பிராயம் என்ன? தலைக்கு மேல் வெள்ளம் வந்து விட்டது! இனி அரசனின் தலையைக் கிள்ளி எறிய வேண்டியதுதான்!
தோழர்கள்: ஆமாம், அதுதான் சரி!
கவி: சரியான யோசனை! காலையிலே அவசரச் சட்டம் வெளியாவதற்கு முன்பு - மன்னனின் மரணச்செய்தி வெளியாக வேண்டும் - கிழக்கு வானத்து சிகப்பை, கிள்ளி எறியப்பட்ட அரசனின் ரத்தச் சிகப்பு தோற்கடிக்கவேண்டும்! மல்லிகை பரப்பிய மஞ்சத்திலே - செம்பருத்தி இதழ்கள் சிதறிக் கிடப்பது போல அரசனின் செங்குருதி சிதறிக் கிடக்க வேண்டும்! ம்.. புரட்சி அத்தியாயத்தின் சிறப்பாயிரத்தை எழுத ஆரம்பியுங்கள்!
பொன்: எழுத ஆரம்பிக்கலாம் - எழுத்தாணியை முதலில் எடுப்பது யார் என்று தெரிய வேண்டுமே? இன்றிரவே அரசன் பிணமாக வேண்டும்! அந்தக் காரியத்தைச் செய்ய ஆள் யார்? அது தெரிய வேண்டாமா?
கவி: ஏன் வழக்கம் போல் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்! யாருடைய பெயர் வருகிறதோ - அவர்கள் அரசனைக் கொல்ல வேண்டும்!
பொன்: (அல்லியிடம் திரும்பி) தலைவின் சம்மதம் எப்படியோ?
அல்லி: நான் தயார்! சீட்டுக் குலுக்கிப் போடுங்கள்! இன்று அரசன் சாகாவிட்டால் நாளை புதுமைப்பித்தன் சாக வேண்டும் - பிறகு நாம் சாக வேண்டும், நாமும் அவரும் தப்ப வேண்டுமானால், அரசன் சாவதே நல்லது! கவிஞரே, சீட்டுகள் தயாராகட்டும்!
கவி: இதோ தயார்.
(கொண்டு வருகிறார்)
பொன்: உம்.. குலுக்கிப் போடுங்கள்!
(கவிஞர் குலுக்கிப் போடுகிறார் - ஒருவன் எடுக்கிறான் அதைப் பிரித்து கவிஞர் படிக்கிறார் - பயங்கர இசை.)
கவி: அல்லி! அல்லிதான் அரசனைக் கொல்ல வேண்டும்!
(தோழர்கள் கரகோசம்.)
அல்லி: இப்போதே நான் தயார்! தோழர்களே, விடை கொடுங்கள்! கவிஞரே - வெற்றியோடு திரும்புகிறேன்! தலைவர் அவர்களே - தங்கள் சந்தேகத்தை நீக்கத் தகுதியான சந்தர்ப்பம் உடனடியாகக் கிடைத்து விட்டது எனக்கு! வருகிறேன் - வணக்கம்!
பொன்: ம்... போய் வா அல்லி! இந்தா!
(என்று கைத்துப்பாக்கியை எடுத்துத் தருகிறான் - அதை அவள் வாங்கிக் கொண்டு புறப்படுகிறாள்.)
பொன்: (தோழர்களிடம்) தோழர்களே - அல்லியின் மீது எனக்குள்ள சந்தேகம் இன்னும் நீங்கியபாடில்லை! வாருங்கள்; நாமும் அவளைத் தொடர்ந்து செல்வோம்! அல்லி நம்மை ஏமாற்றி விட்டால், நாமே - இன்றிரவே அரசனைத் தீர்த்துக் கட்ட வேண்டும்! புறப்படுங்கள்!
(புறப்படுதல்)