காட்சி 43 / 47
காட்சி 43
காட்சி 43
மூல ஸ்கேன் 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(சீமான்கள் சபை - அரசன், அமைச்சர், சீமான்கள், கைதி, உலகப்பன்)
அமை: குருநாதர் இவ்வளவு பெரிய மோசக்காரர் - சூழ்ச்சிக் காரர் என்று எனக்குத் தெரியாது! அவர் செய்த அக்கிரமத்திற்குச் சரியான தண்டனை, அவராகவே அளித்துக் கொண்டார்!
அரி: போதுமய்யா, மந்திரியாரே - நிறுத்தும்! நீர் என்ன பெரிய ஒழுங்காம்? சீமான்களே! செத்துப் போன குருநாதரை குற்றவாளி எனக் கூறும் இந்த அமைச்சர் யார் தெரியுமா? ஊர் பெயர் தெரியாத வழிப்போக்கனைப் பிடித்து அரசனைப் போல ஜோடித்து அவனைத் தன் இஷ்டப்படி ஆட்டி வைக்கும் மாயாவிதான் இந்த மந்திரியார்!
அமை: பொய், பொய்..! அரிஹரநாதர் பேசுவது விபரீதமான பொய்!
சீமா: (அரிஹரநாதரிடம்) என்னய்யா உளறுகிறீர்? ஏன் மன்னரையும் மந்திரியையும் இழித்துப் பேசுகிறீர்?
அரி: நான் பேசவில்லை! இதோ, இந்தக் கடிதம் பேசும்! இது யார் எழுதியது தெரியுமா? மணிமகுடபுரியின் உண்மையான அரசன் மணிமாறன் எழுதியது! படியுங்கள் - எல்லாம் புரியும்!
(சீமான் படித்துவிட்டு)
சீமா: என்ன மன்னர் முன்பே வெளியேறி விட்டாரா?
அரி: ஆமாம்.. ஆமாம்..! சந்தேகமேன்? - என் பேச்சையும் கேட்க வேண்டாம் - மந்திரி பேச்சையும் கேட்க வேண்டாம். (அரசனிடம்) அவனையே கேளுங்கள்! ஏய் நீ உண்மையான அரசனா? மந்திரி உண்டாக்கிய அரசனா? மறுக்காமல் சொல்! உம்..!
அர: சாமி, சாமி! என்னை விட்டுடுங்க! நான் உண்மையான ராஜா இல்லேதான்!
அரி: கேட்டீர்களா? - இன்னும் கேளுங்கள்! இந்தப் போலி அரசனை வைத்துக் கொண்டு கல் நாட்டு விழாவிலே பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரமனைத்தும் தன் பெயருக்கு மாற்றிக் கொள்ள அமைச்சர் திட்டம் போட்டது உண்மையா, இல்லையா?
அமை: நம்பாதீர்கள் - எல்லாம் பொய்!
அரி: ஏய் நீ சொல்! உண்மைதானே?
அர: ஆமாங்க - உண்மைதான்! ராஜா மாதிரி நடிடான்னு, மந்திரிதான் சொன்னாருங்க!
சீமா: என்ன, மந்திரியாரே - விழிப்பு?
அமை: விழிப்பு ஒன்றுமில்லை - அரசன் ஓடிவிட்டான்! இந்தச் செய்தி நாட்டிலே பரவினால் குழப்பம் ஏற்படுமே என்றுதான் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தேன்!
சீமா: அந்த ஏற்பாட்டைச் செய்ய உமக்கு என்ன அதிகாரமிருக்கிறது? சீமான்கள் சபையை ஏமாற்றியிருக்கிறீர்! இது பெருங் குற்றம்! போலி மனிதன் ஒருவனுக்கு பொன்னாபரணம் பூட்டிப் பொம்மலாட்டம் நடத்தியிருக்கிறீர் - மிகப் பெரிய குற்றம்! யாரும் செய்யத் துணியாத சதி! சீமான்கள் சபை, இவரை உடனே கைது செய்ய வேண்டும்!
(அனைவரும்)
சீமான்கள்: ஆமாம் - கைது செய்யத்தான் வேண்டும்!
பெரிய சீமான்: ம்.. உலகப்பா... நடக்கட்டும்!
(மந்திரி கைது செய்யப்படுகிறார்.)
பெ.சீ: (அரசனைக் காட்டி) இந்தப் போலி அரசனையும் காராக்கிரகத்தில் தள்ளிக் கடுந்தண்டனை விதிக்க வேண்டும்!
அர: பிரபுக்களே! என்னைக் கைது செய்வதற்கு முன்பு ஒரு வார்த்தை! சிறிது நேரம் பேச எனக்கு அனுமதி வேண்டும். சில உண்மைகளை இங்கு வெளியிட விரும்புகிறேன்!
சீமா: நீயோ பொய்யன் - புளுகன் - போலி மனிதன்! உன்னிடம் ஏதடா உண்மை?
அர: நான் பொய்யனுமல்ல - புளுகனுமல்ல - போலி மனிதனுமல்ல! நானே உண்மையான அரசன்!
சீமா: என்ன?
அரி: நம்பாதீர்கள் - நம்பாதீர்கள்! இவன் ஒரு நடுத்தெரு நாராயணன் - குப்பை மேட்டுப் பயல்! இவனைக் கொண்டு போய் கோபுரத்தில் ஏற்றியது இம்மந்திரி! அவ்வளவுதான்! இவன் மன்னனுமல்ல; மண்ணாங்கட்டியுமல்ல!
அர: நான் போலி அரசன் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது, பத்திரிகாசிரியரே?
அரி: ஒரே ஆதாரம் - உனக்கு எழுத்துத் தெரியாது! கையெழுத்துப் போடவும் கையாலாகாதவன் நீ! அரசனைப் போல உனக்கு கையெழுத்துப் போடத் தெரியாததால்தான் - முதல் நாள் சீமான்கள் சபையில் சித்தங் கலங்கியவனைப் போல நடிக்கச் சொன்னார் மந்திரி!
அர: உண்மைதான்! சபையோர்க்களே, கேளுங்கள்! அரண்மனையிலே அமைச்சர், மதகுரு, இந்த அரிஹரநாதர் மூவரும் செய்யும் அக்கிரமங்கள் தாங்காது - மன்னன் மணிமாறன் வெளியேறியது உண்மைதான்! ஆனால் நாட்டைத் துறந்த மணிமாறன் - இவர்களின் கேட்டை விளக்குவதற்காக மாறுவேடத்தில் திரிந்தான்! மணிமகுடம் ஏடு விற்பனை செய்யும் வாலிபனாக மாறினான்! அரசாங்கக் காவலர்கள் அவனைக் கைது செய்து அமைச்சர் முன்னே நிறுத்தினார்கள்! அமைச்சருக்குத் தெரியாது; தன் முன் நிற்கும் அனாதை இளைஞன் அரசன் தானென்று! அரசன் காணாமற் போன நேரம் - இந்த மூவரும் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்த வேளை - அந்த சமயம் நான் கொண்டு போய் நிறுத்தப்பட்டேன், எனக்கு ராஜா வேடம் கட்டினார்கள்! ராஜாவைப் போலவே நடந்து கொள் என்று மிரட்டினார்கள் - மணிமாறனாகிய என்னை - மணிமாறனைப் போல நடிக்கச் சொல்லி துப்பாக்கி போட்டார்கள்! அரசனைப் போல கையெழுத்துப் போடச் செய்ய அமைச்சர் எவ்வளவோ முயன்றார்! ஒரேயடியாக நான் நடித்து விட்டேன் - கையெழுத்தே போடத் தெரியாதென்று! ஏமாளிப் பையன் ஒருவனை ஏமாற்றி விட்டதாகவும் - சீமான்கள் சபையின் கண்ணை மறைத்து விட்டதாகவும் எண்ணி, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டார்கள். இந்த முற்றிப் போன ஏகாதிபத்தியப் பித்தர்கள்! எத்தனை நாளைக்கு ஏமாற்றி வாழ முடியும்? இருள் மறையும் நேரம் வந்து விட்டது! உதயசூரியனின் ஒளி அதோ கண்ணுக்குத் தெரிகிறது! இனியும் இருட்டடிப்பு செய்யும் அரிஹரநாதர்களும் - அறிவை விரட்டியடிக்கும் மதகுருக்களும் - அடக்கு முறை கொடுங்கோள்களுக்கும் இவர் போன்ற அமைச்சர்களும் உலவுவதற்கு உலகத்திலே எந்த மூலையிலும் இடமில்லை!
அரி: சபை இவனை நம்பிக் கெட வேண்டாம்! இவன் அரசனேயல்ல! அரசனாயிருந்தால் கையெழுத்துப் போடட்டும்; பார்ப்போம்!
அர: கையெழுத்து! ஒன்று போதுமா? ஓராயிரம் வேண்டுமா? இந்தா!
(கையெழுத்துக்களை சிறு சிறு தாள்களில் மளமளவென்று போட்டுப் பறக்க விடுகிறான்.)
கையெழுத்து மட்டும் போதாதென்றால் இதோ இன்னும் ஆதாரம் (மார்பைத் திறந்து) நான்தான் மணிமாறன் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம்! மருதலாங்கானத்து சோழன் மணிமுடிக்காரியோடு போர் தொடுத்த போது ஏற்பட்ட காயத்தின் அடையாளம்! களந்தந்த வடு! போர்த் தழும்பு! போதுமா ஆதாரம்? இன்னும் வேண்டுமா?
சீமா: போதும் - போதும்! அரசே! எங்களை மன்னித்து விடுங்கள்! அரிஹரநாதரின் பேச்சை நாங்கள் இனியும் நம்ப மாட்டோம்!
(குருநாதரின் கையளாக இருந்த கைதி)
கைதி: ஆமாங்க! குருநாதரும், இந்த அரிஹரநாதரும் சேர்ந்துதாங்க அரசரைக் கொல்லும்படி என்னை அனுப்பினாங்க!
அரி: அய்யகோ! ஓரே பொய் மயம் ஜகத்! நாளைக்கே என் பத்திரிகையில் இதற்கெல்லாம் மறுப்புக் கொடுக்கிறேன்!
சீமா: அதுவரை உம்மை விட்டுவைக்க உத்தேசமில்லை! உம்! இப்போதே இவரையும் கைது செய்யுங்கள்!
(உலகப்பன் கைது செய்தல்.)
அரி: அட, ஆண்டவனே! பரமசிவம்! ஓடிவந்து என்னைக் காப்பாற்று!
உல: ம்.. அவரால் ஓடிவர முடியாது! ரிஷப வாகனத்துக்குக் கால் ஒடிந்து விட்டதாம்!
அரி: அட முருகா! இந்த நாஸ்திகனிடமிருந்து என்னைக் காப்பாற்று!
உல: ம்.. அவர் எங்கேயிருக்காரோ? வள்ளி வீடோ? தெய்வயானை வீடோ? இந்தக் கத்தல் காதில் விழற நேரமோ, என்னமோ?
அரி: மகாவிஷ்ணு - நீயாவது வாடப்பா!
உல: ஊஹூம் அது அவசரத்துக்கு நடக்காது! கருடன் மலையில் மோதிக்கிட்டு ரெக்கை ஒடிஞ்சு போச்சாம்!
சீமா: இழுத்துப் போங்கள். எல்லாரையும்! மந்திரி - அரிஹரநாதன் - இந்தக் கொலைகாரன் மூவரும் ஒரே கூண்டில் கிடக்கட்டும் - ம்.. கொண்டு போங்கள்.
(உலகப்பன் மூவரையும் ஒன்றாகக் கட்டி இழுத்துப் போகிறான்.)
அர: மதிப்பு வாய்ந்த பிரபுக்களே! மணிமகுடத்திலே கப்பியிருந்த காரிருளின் ஒரு பகுதி நீங்கி விட்டது! மிச்சமிருக்கும் கறையும் நீங்குவதற்கு உங்கள் அனைவரின் மனமும் இளக வேண்டும்! இந்த நாட்டுத் தலை எழுத்தை நிர்ணயிக்கக்கூடிய சபை இது! நாடாளவும் - நாட்டுக்கு நன்மை புரியவும் - அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சபை இதுவரையில் - மதகுருவின் ஆலோசனைகளுக்கு அடிபணிந்தும், மந்திரியின் சூழ்ச்சிகளுக்குத் துணண்டு கொடுத்தும், மணிமகுடபுரியின் மக்களிடத்திலே மாறாத வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது! இந்த வெறுப்பு விலகுவது என்பது சாதாரணமல்ல! இந்த மக்களுக்கு விடுதலை வழங்குவதின் மூலமாகத்தான் அந்த வெறுப்பை விலக்கிக் கொள்ள முடியும்! பொதுமக்களுக்காகப் பாடுபடும் பொன்னழகன் - புதுமைப்பித்தன் ஆகியோர் பயங்கரவாதிகள் என்று இந்தச் சபையிலே சற்று முன்பு பேசினோமே - நினைத்துப் பாருங்கள்! யார் பயங்கரவாதிகள்? ஜரிகை உடையிலே இருக்கும் அமைச்சர் - ஜப மாலையோடிருக்கும் மதகுரு - ஜனங்களை ஏய்த்துப் பிழைக்கும் பத்திரிகாசிரியன் - இவர்களை விடவா அவர்கள் பயங்கரவாதிகள்? கொடிக்கால் நகரை அழித்துக் கோயில் கட்டும் திட்டத்தை நான் தடுத்தும் கேட்காமல் தங்களுக்குள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் வலிமையாலும் - தந்திரத்தின் சக்தியாலும், அந்த ஏழைகள் பகுதியை இடித்து மண்ணாக்கினார்களே - சீமான சபையின் முத்திரையைக் குத்திக் கொண்டு; இவர்கள் அல்லவா பயங்கரவாதிகள்! அன்பு நிறைந்த பிரபுக்களே! நடந்தவைகள் நடந்தவைகளாயிருக்கட்டும் - இனி நடப்பவைகள் நல்லவையாக இருக்கட்டும்! அதற்கான அவசர முடிவை இந்தச் சபை இன்றைக்கே - இப்பொழுதே - இன்றிரவே செய்து முடிக்க வேண்டுகிறேன்!
சீ.1: என்ன செய்யவேண்டுமென்று அரசர் விரும்புகிறார்?
அர: சீமான்கள் சபை கலைக்கப்படவேண்டும்! அரசன் முடி துறக்க வேண்டும்!
சீ.2: என்ன?
சீ.3: இது முடிகிற காரியமா?
அர: நம்மால் முடியாததுதான்! ஆனால் மக்கள் இந்தக் காரியத்தை சுலபமாக முடித்துவிடுவார்கள்! அன்பு நிறைந்த பிரபுக்களே! என்மீதும், இந்தச் சபையின் மீதும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற ஆத்திரம் எங்கே போய் நிற்கும் என்று சொல்ல முடியாது! திடீரென்று ஒரு நாள் உங்கள் மன்னனின் தலை பந்தாடப்படலாம்; பாராளும் மன்றத்திலே அமர்ந்திருக்கும் சீமான்களாகிய உங்கள் தலைகள் - பனங்காய்கள் போல சீவப்படலாம்; இது ஆரூடமல்ல; அனுபவ உண்மை - அழியாமல் இருக்கும் சரித்திரங்கள் காட்டும் அபாய அறிவிப்பு! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற தத்துவத்தை உணராத எத்தர்களின் உடல்கள் சத்தெடுக்கப்பட்ட சதைகளாக வீசியெறியப்பட்டிருக்கின்றன - சரித்திரத் தெருவின் ஓரங்களிலே! எத்தனை நாளைக்கு, ஆண்டவன் விட்ட வழி என்று ஆயுளை நகர்த்திக் கொண்டிருப்பார்கள்? ‘ஏன்?’ என்ற கேள்வி கருவிலே வந்து விட்டால் - அந்தப் புரட்சிக் குழந்தை உதயமாகப் பத்து மாதங்கூடத் தேவையில்லையே! பழைய காலத்துப் புராணக் கற்பனையிலே - ரிஷிப் பிண்டம் இராத்தங்காது என்பார்களே; அதுபோல, உடனடியாகக் கூட உதயமாகி விடலாமே! அந்தக் கேள்வி, மணிமகுடத்திலே கிளம்பவில்லை என்று கருதுகிறீர்களா? ‘தூரப் போட்டா ஜாதி கெட்டவனே - பெரிய ஜாதிக்காரன் வருவது கண் தெரியவில்லை - கபோதிப் பயலே’ என்று பூசணிக்காய் வயிறு படைத்தோன் கேட்கிறானே, பழுதியடைந்த மேனியனைப் பார்த்து! அப்போது தோன்றுகிறதே - அந்த ஏன்? என்ற எக்காளக் கேள்வி! “பொன்மலையும் - பூரிப்பான வாழ்வும் எங்களுக்குத்தானடா சொந்தம் - மண்மேடும், மங்கிய வாழ்க்கையும் உங்கள் கர்ம வினையடா” என்று கர்ஜிக்கிறானே; கனம் - தனம் இரண்டும் படைத்தோன் - கண்ணிலே குளங் கொண்டவனைப் பார்த்து! அப்போது கொக்கரித்துக் கிளம்புகிறது கோமான்களே - நம் குரல்வளையை அமுக்கும் அந்த “ஏன்?” என்ற கேள்வி! “எட்டிப் போ - எமை நத்திக்கிட” - இனி செல்லாது சீமான்களே - செல்லாது! “நம்மை எதிர்ப்பதா? - ஆயுத மற்ற நிராயுதபாணிகளா? - சுட்டுப் பொசுக்கிவிட மாட்டோமா?” இந்த இறுமாப்பு நிறைந்த வீரப் பேச்சுக்கள் - வெறும் வெத்து வேட்டுக்கள்தான்! விடுதலை முரசு தட்டுவோரின் பக்கம் திரும்பியிருக்கும் துப்பாக்கி முனைகள், இன்றோ, நம்மை நோக்கித் திருப்பப் படலாம் - யார் கண்டார்கள்?
நம்முடைய படையிலே எத்தனை பேர் உள்ளத்திலே “ஏன்?” என்ற மந்திரம் பதிவாகியிருக்கிறதோ? எந்த நேரத்திலே அந்த மந்திரம் ஜெபிக்கப்பட்டுப் புரட்சி வேள்வியிலே, நம்முடைய உடலிலேயுள்ள கொழுப்பு, நெய்யாக வார்க்கப்பட இருக்கிறதோ? நேரமும் காலமும் சொல்ல முடியாது! புயலைக் கூட வருவதற்கு முன்பு கண்டுபிடித்து விடலாம் - புரட்சியைக் கண்டு பிடிக்க இயலாது! அதன் விளைவையும் கணக்குப் போட இயலாது. அந்தப் பயங்கரமான விளைவு தேவையென்று நீங்கள் விரும்புகிறீர்களா? புரட்சி எரிமலை வெடித்து - அதன் நெருப்புக் குழம்பிலே சிக்கி உருவற்றுப் போய் விட விரும்புகிறீர்களா, உண்மை நண்பர்களே! ஒருக்கணம் யோசித்துப் பாருங்கள்! புரட்சிக்காரர்களின் கையிலே சிக்கிவிட்டால் - என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்! “சிகைகளையும் - பசுக்களையும் - சிங்காரப் பெண்களையும் - சேர்த்து வைத்துக் கொளுத்திய சீமான சபையின் உறுப்பினரே! - இதோ - இந்தத் தீக்குண்டத்திலே உமது மனைவியோடு நீச்சல் விளையாட்டு நடத்தும்படி!” என்று கட்டளை பிறப்பிப்பார்கள் - கண்ணீர் மட்டுமே இதுவரை தங்கள் உடமையாகக் கொண்டிருந்தவர்கள்! “யாரப்பா நீர்? வரி போட்டு வாட்டிய சீமானா? - இதோ உமது முதுகெல்லாம் வரி போடுகிறேன்!” என்று கொள்ளிக் கட்டையால் கோடு போடுவார்கள்; குடல் கருகிச் செத்த குடும்பத்திலே மிச்சமிருப்பவர்கள்! “ஆகாகா, அகப்பட்டுக் கொண்டீரா - ஆடம்பரப் பிரபுவே! பன்னீர்க் குளியலும் பழரசபானமும் - கன்னியர் சூழ் கட்டிலறையும் இல்லாவிட்டால் உமக்குத் தூக்கம் வராதாமே? இதோ, நீர் விழுந்து புரண்டு தூங்குவதற்கு அருமையான இடமென்று சாக்கடை சகதியிலே தூக்கி எறிவார்கள்; - இதுவரையிலே சாக்கடை ஓரத்திலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்! இந்த முடிவுகளை வரவேற்க நீங்கள் தயார்தானா? - பயமுறுத்துகிறேன் - என்று எண்ணாதீர்கள்! பக்குவப்பட்டு விட்டது நாடு என்பதை அறிவிக்கிறேன்! அரசன், ஆண்டவனின் பிரதிநிதி! மதகுரு, மகேஸ்வரனின் அவதாரம் - என்றெல்லாம் நம்பிக் கிடந்தவர்கள் - புதுமைப் பித்தனின் பிரச்சாரத்தால் விழித்துக் கொண்டார்கள்! விதியை நொந்து கொண்டு விழியை நதியாக்கிக் கொண்டவர்கள் வேதனைக்குக் காரணம் - விதியல்ல என்பதை உணர்ந்து விட்டார்கள்! அறிவியக்கம் தலை தூக்கி விட்டது - வரட்டுப் பொதுவுடைமை மட்டும் பேசி வந்தவர் உள்ளங்களிலே கூட வளமான கருத்துக்கள் முளைவிடத் தொடங்கி விட்டன! சுயமரியாதைத் தனமும் - சுதந்திர அனலும் சூறாவளி வேகத்திலே பரவ ஆரம்பித்து விட்டன! இனி சுருட்டிக் கொள்ள வேண்டியது தான் நமது வாலை! என்ன சொல்லுகிறீர்கள்? - புதிய பாதை கண்டுபிடித்து புத்தியோடு நடக்கப் போகிறீர்களா? இல்லை பழைய பாதையிலே நடந்து - கத்திக்குத் தலைவணங்கப் போகிறீர்களா? - ‘முடி துறந்தேன்’ என்று சரித்திரம் வேண்டுமா? - ‘முடி சாய்ந்தது’ என்ற வரலாறு வேண்டுமா? - எது வேண்டும்? சமத்துவ அரசு - அல்லது நமக்கு ஆளுக்கொரு சவக் குழியா? சொல்லுங்கள்! நண்பர்களே - சொல்லுங்கள்!!
சீமா.1: அரசர் கூறுவதனைத்தும் சரியானதுதான்! புரட்சி வெள்ளம் கரை புரண்டு நிற்பதும் உண்மைதான்!
சீமா.2: அதைத் தடுக்க அரசரே ஒரு வழி சொல்லட்டும்!
அர: சொன்னேனே - முன்பே! ஒரே வழி! அறிஞர் வகுக்கும் வழி! அரசைப் பொதுவாக்குவதுதான்!
சீமா.1: அதற்கு மாற்று?
அர: மாற்று என்ன? - பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்! அதிலே போட்டியிட்டு வெற்றி பெறுகிறவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்!
சீமா.2: நிலைமை அதுவானால் - அதுவே உகந்த வழியானால் - அரசர் இஷ்டப்படி நடப்பதே நல்லது!
அர: எல்லோர் அபிப்பிராயமும் அதுதானே?
சீமா.1: ஆமாம்! (கைதூக்கல்)
அர: கை தூக்கி விட்டீர்கள்! மக்களின் கை நம்மை நோக்கித் தூக்கப்படுவதற்கு முன் - எச்சரிக்கையாக இப்போதே கை தூக்கி விட்டீர்கள்! மகிழ்ச்சி! நாளைக் காலையிலே - இந்த நாடு நல்ல செய்தி கேட்கும்! இன்றிரவு நான் நிம்மதியாகத் தூங்குவேன்!