காட்சி 41 / 47
காட்சி 41
காட்சி 41
மூல ஸ்கேன் 141, 142, 143, 144
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(சிறைச்சாலை, குருநாதரின் ஆள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் - அங்கே குருநாதர் வருகிறார்.)
கையாள்: சாமி! என்னை காப்பாத்துங்க சாமி!
குரு: அடே மடையா! ஏண்டா சிக்கிக் கொண்டாய்?
கை: நான் என்னங்க பண்ணட்டும்! அந்த உலகப்பன் என்னை ஓட ஓட விரட்டி, கடைசியிலே கைது செய்துட்டான். எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க சாமி!
குரு: உன்னைக் காப்பாற்றுகிறேன், பயப்படாதே! ஆனால் ஒன்று! குற்ற விசாரணையின் போது, நான் சொல்லுகிறபடி நடந்து கொள்ள வேண்டும்.
கை: சரிங்க!
குரு: அரசனை நீ தான் குத்த வந்தாய் என்பதை ஒப்புக்கொள்!
கை: அய்யய்யோ!
குரு: கேளடா! அதோடு, புதுமைப்பித்தன் தான் அரசனைக் கொல்லும்படி சொல்லி அனுப்பினான் என்று கூறிவிடு!
கை: “முடியாது - முடியாது! யார் சொன்னால் என்னடா நீ ஏண்டா அரசனைக் கொல்லப் பாய்ந்தாய்?” என்று கேட்டுன்னைத் தூக்கிலே போட்டு விடுவார்கள்!”
குரு: நான் சொன்னபடி கேள் - இல்லாவிட்டால் தொலைந்து போவாய்!
கை: குருநாதரே! நீர் தப்பித்துக் கொள்ளத் தந்திரம் செய்கிறீர்! நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்!
குரு: அடே, மரியாதை கெட்ட பதரே! வீணே சாகாதே! நான் சொல்லுகிறபடி சொல்! புதுமைப் பித்தன் மீது பழியைப் போடு - அவனுடைய ஆள்தான் நீ என்று ஒத்துக் கொள்!
கை: அதைச் சொன்னாலும் போதாதா! என் தலை தப்புமா பிறகு? நீர் தான் அரசனைக் கொல்லும்படி கட்டளையிட்டதாக நான் சொல்லப் போகிறேன்! சரிதானா?
(அரசன், அமைச்சர், சீமான்கள், உலகப்பன் ஒதுங்கி கவனித்தல்.)
குரு: அடப்பாவி - என்ன காரியம் செய்தாய்? எவ்வளவு பணங்கொடுத்தேண்டா - உனக்கு! ஏய், இதைக் கேள்! குற்றத்தை நீயே ஒத்துக் கொள்! அப்படியே உனக்கு ஏதாவது பயங்கர தண்டனை விதிக்கப்பட்டாலும், நானிருக்கிறேன் உன் குடும்பத்தைக் காப்பாற்ற!
கை: என் கதி என்னாவது, குருநாதரே?
குரு: நான் சொன்னபடி சொல்! உன்னையும் காப்பாற்றுகிறேன்!
கை: நீர் சொன்னபடி சொன்னால் - நீரல்ல உன் தாத்தாவே வந்தாலும் என்னைக் காப்பாற்ற முடியாது!
(குருநாதர் யோசனை - தன் ருத்திராக்ஷ மாலையில் உள்ள பதக்கம் போன்ற டப்பாவைத் திறந்து.)
குரு: சரி- இந்தா - ஆபத்துக் காலத்தில் உபயோகிக்கும் ஆயுதம். ஆண்டவனின் விபூதிப் பிரசாதம் - இதைச் சாப்பிடு - எந்த தண்டனையும் உன்னை ஒன்றும் செய்யாது!
கை: உண்மையானா? அப்படியானால் கொடுங்கள் சாமி, அந்த அதிசய விபூதியை!
(கொடுக்கிறார்.)
குரு: அப்படியே வாயில் கொட்டிக் கொள்!
(கையாள் அதை முகர்ந்து பார்க்கிறான் - சந்தேகம் ஏற்படுகிறது.)
கை: விபூதியா இது? இல்லை - விஷம்! விஷம்!! அடப்பாவி! என்னை விஷத்தைக் கொடுத்துக் கொல்லவா பார்க்கிறாய்? இந்தா நீயே சாப்பிடு! (குருநாதர் வாங்குகிறார்.) இரு, இரு! நாளைக்கு உன் சதிகளையெல்லாம் சக்கரவர்த்திக்கு நேராக அம்பலப்படுத்துகிறேன்!
குரு: அப்படியானால், நீ என்னைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?
கை: ஆமாம்! ஆமாம்!
குரு: என்ன?
(அவன் கழுத்தை நெறிக்கிறார். அப்போது அரசன் முதலியோர் அங்கு வருதல்.)
அர: குருநாதரே, நில்லும், நில்லும்!
குரு: ஆ, யார்?
சீமான்கள்: யாரா? தெரியவில்லை? முழுவதுமே கேட்டுக் கொண்டுதானிருந்தோம்! அரசனைக் கொல்லத் திட்டம் வகுத்தது யார்? என்று புரிந்து கொண்டோம்! (காவலரை நோக்கி) உம் - உடனே இந்தப் போலி வேதாரியைக் கைது செய்யுங்கள்!
குரு: என்னையா கைது செய்யப் போகிறீர்கள்? அதுதான் என் அப்பன் ஆண்டவன் இருக்கும் வரையில் நடக்காது! நடக்காது!
(கையிலுள்ள விஷத்தை வாயில் கொட்டிக் கொள்கிறார்.)
குரு: ஹா..ஹா..ஹா! என்னை யாராலும் கைது செய்ய முடியாது! என்னை என்பது யாரை? - இந்த உடலையா? ஹா..ஹா..ஹா.. அதுதான் இல்லை! இந்த ஆத்மாவை! இதைத் தான் உங்களால் கைது செய்ய முடியாது என்கிறேன்! வெறுங் கூடு விட்டு ஆவி போவதற்கு முன்பு - இந்த குரு நாதர் செய்ய வேண்டிய வேலையை முடித்து விட்டுத்தான் போவார்! என்னைப் போலி வேதாரி என்று குறிப்பிட்டீரே! - சீமானே! நான் போலி வேதாரிதான்! நான் மட்டும் போலி வேதாரி இல்லை - இதோ இதோ.. இந்த (வாய் குளறுகிறது) இதோ நிற்கிறானே இந்த அரசன் - இவன்... இவன் (கையைக் காட்டிக் கொண்டே நெளிகிறார் - நிற்க முடியவில்லை) மணி மகுடத்தை மதம் ஆளும் - மதம் ஆள வேண்டும் - என்று கனவு கண்டேன்... அந்தக் கனவு பலிக்கவில்லை! இன்றில்லா விட்டால் நாளை.. என்போல் ஒருவன் தோன்றத்தான் போகிறான்! என்போன்ற மத குருமார்களை அழித்து விடலாமென்று யாரும் கருதாதீர்கள்! அழிக்க அழிக்க முளைத்துக் கொண்டுதானிருப்போம்! முளைத்துக் கொண்டு தானிருப்போம்!! போவதற்குள் ஒரு வார்த்தை! போலி வேதாரி.... போலி வேதாரி.. சீமானே - நான் மட்டுமல்ல போலி வேதாரி! இதோ இந்த அமைச்சர் ஆட்டி வைக்கும் போலி வேதாரி... என்ன திகைப்பு? ஹா..ஹா... என்ன நகைப்பு? வேதாரி. ஹா..ஹா... என்ன சிரிப்பு? ஹா..ஹா..ஹா.. என்ன பழிப்பு? விவரமாகச் சொல்லட்டுமா? இவன்.. இவன் அரசனல்ல! இவன் யார் தெரியுமா...? இவன் ஒரு நாள் மணிமகுடம்.. மணிமகுடம்....
(கீழே வீழ்கிறார் - சாகிறார் - சீமான்கள் அமைச்சரைப் பார்க்கிறார்கள் - அமைச்சர், அரசனைப் பார்க்கிறார்.)
அர: சாகிற காலத்தில் கூட இந்தச் சண்டாளர்கள் வாயில் நல்ல வார்த்தைகள் வருவதில்லை! ம்- அமைச்சரே - சீமான்களே... வாருங்கள், சபைக்குப் போகலாம். இவனும் வரட்டும்... சபைக்கு.. (கைதியைக் காட்டி) ம் உலகப்பா... இந்தப் பிரேதத்தை...
உல: கடலில் எறிந்து விடுகிறேன்!
அர: ஏய்...! (அதட்டி) நாளைக்கு, காட்டுக்கு வைக்க வேண்டும்!
உல: ஏங்க? காக்கா கழுகு கூட வந்து எட்டிப் பார்க்காதுங்க!
அர: ம்... சொன்னதைச் செய்!..
உல: சரிங்க!
(அரசன் முதலியோர் போகிறார்கள்.)