பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 40 / 47

காட்சி 40

காட்சி 40

மூல ஸ்கேன் 137, 138, 139, 140

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(சீமான்கள் சபை, அரசன், குருநாதர், அரிஹரநாதர், அமைச்சர்மற்றும் மக்கள் ஓர் புறத்தில் கவிஞர் - குருநாதர் பேசுகிறார்.)

குரு: அரசனைக் கொல்ல முயன்றது அந்தப் புதுமைப்பித்தன் - பொன்னழகன் கூட்டமேதான்! பொன்னழகனை விட புதுமைப்பித்தன் பயங்கரவாதி! அரசாங்கத்தின் கண்களையே ஏமாற்றிக் கொண்டு, அரசாங்கத்திற்கு எதிராக பெரியதோர் பிரச்சார சக்தியை உண்டு பண்ணியிருப்பது மட்டுமல்லாமல், இந்த அரசையும் அடியோடு கவிழ்ப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறான்! ‘மணிமகுடம்’ பத்திரிகை, மாயமாக வருகிறது - மாயமாக விற்பனையாகிறது! கண்ணனையும் தோற்கடிக்கும் தந்திரசாலி யார்? மணிமகுட புரியை நாஸ்திக பூமியாக ஆக்க வந்த நாசகாரன் யார்? பக்தர்களைக் கிண்டல் செய்யும் பாவி - மதத்தைக் கேலி புரியும் மண்டூகம் - கடவுள் கட்டளைகளுக்குக் காரணம் கேட்கும் கயவன் - பகுத்தறிவுக்கு மிஞ்சியது எதுவுமில்லை என்று கதையளக்கும் பாதகன் - புதுமை - புரட்சி - பொதுவுடைமை - என்றெல்லாம் பொதுமக்களைத் தூண்டிவிடும் பொல்லாத ஜந்து - புதுமைப்பித்தன்! புதுமைப்பித்தன்!! பயங்கரவாதி புதுமைப்பித்தன்! பட்டத்தரசைக் கொல்ல முயன்ற புதுமைப்பித்தன் உடனடியாகச் சுட்டுத் தள்ளப்பட வேண்டும்! கண்ட இடத்தில் அவன் சுடப்பட வேண்டும்! அந்தப் படுநாஸ்திகனின் பிணத்தைக் கொண்டு வருகிறவர்களுக்குப் பத்தாயிரம் மோகராக்கள் பரிசு தரப்படும் என்று பறை அறிவிக்க வேண்டும். தெய்வீக அவதாரம் - தேசம் புகழ் மன்னன் மணிமாற வேந்தனையல்லவா மரணக்குழியிலே தள்ளப் பார்த்தார்கள், மாதேன்மத்தர்கள்! ஆண்டவன் அரசனைக் காப்பாற்றினான்! நாம் அக்கிரமக்காரர்களை அழித்துத் தீரவேண்டும். இல்லாவிட்டால், அடிக்கடி அரசனைக் காக்க வேண்டிய அவசர வேலை ஆண்டவனுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்தச் சங்கடத்தை அடக்குவோம் மதிப்பு வாய்ந்த இந்த சீமான்கள் சபை, உடனே பொன்னழகன் கூட்டத்தாரைக் கைது செய்யவும் - புதுமைப்பித்தனைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்கிறேன்! இது தெய்வத்தின் கட்டளை - ஆண்டவனின் விருப்பம்!

அமை: சீமான்களே! குருநாதர் கூறியதனைத்தும் கேட்டீர்கள்! மணிமகுடபுரியின் க்ஷேமலாபங்களை கருதியும் மன்னரின் பாதுகாப்புக் கருதியும் - பொன்னழகன் கும்பலைக் கைது செய்யும்படியும் மக்கள் மன்றத்தைத் தடை செய்யும் படியும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகிறேன்.

சீமான்: சீமான்கள் சார்பில் அதை நான் வரவேற்கிறேன்!

(சீமான்கள் கோஷம்)

அமை: சந்தோஷம் - பொன்னழகன் கூட்டத்தைத் தடை செய்து, அவர்களைக் கைது செய்யும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறி விட்டது? ஒருவனைக் கூட்டிக் கொல்வதற்கு உத்தரவளிக்கும் உரிமை அரசரைச் சார்ந்ததாகும். ஆகவே புதுமைப்பித்தனைப் பற்றிய உத்தரவை அரசரே வெளியிட வேண்டுகிறேன்!

குரு: அரசர் மறுக்கப் போகிறாரா என்ன? அரசே தயக்கமின்றிச் சொல்லுங்கள் - அந்தத் தலைகனத்தவர்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்தச் சொல்லுங்கள்!

அரி: ஆமாம் - அதுதான்சரி!

அமை: உண்மைதான்! அவன் ஒழிக்கப்பட வேண்டியது நியாயந்தான்! அரசனை ஒழிக்க வந்தவனை, அரசாங்க சட்டம் ஒழித்தே தீரவேண்டும்! அரசர் ஆணைக்குச் சபை காத்திருக்கிறது!

அர: சீமான்களே - உங்கள் விருப்பம் போலவும் - குரு நாதர், அமைச்சர் ஆகியோரின் விருப்பம் போலவும் - புதுமைப்பித்தனை சுட்டுக் கொல்ல உத்தரவிடுகிறேன்.

(சீமான்கள் கரகோஷம், கவிஞர் ஆவேசத்தோடு அதை விட்டு அகலுகிறார்.)

அர: புதுமைப்பித்தன் பிணத்தைக் கொண்டு வருகிறவர்களுக்கு - குருநாதர் கூறியது போல - பத்தாயிரம் மோகராக்கள் பரிசளிக்கப்படும் என்று பறை மூலம் தெரிவிக்கவும் உத்தரவிடுகிறேன்!

(சீமான்களின் கரகோஷம்.)

குரு: சபாஷ், சபாஷ்! மணிமகுடம் பிழைத்தது! மன்னர் பிழைத்தார்! மத எதிரிகள் அழிந்தனர்! ஒழிந்தனர்! மதம் வாழ்க! கடவுள் வாழ்க! நீடூழி வாழ்க!

(அப்போது உலகப்பன் ஓடி வருகிறான் சில வீரருடன்)

உல: அரசரைக் கொல்ல வந்த சதிகாரன் அகப்பட்டு விட்டான்.

அமை: என்ன?

உல: கல்நாட்டு விழாவின் போது கத்தி வீசினானே அரசர் மீது! அந்தக் காதகனைப் பிடித்து விட்டோம் - காராக்கிரகத்தில் அடைத்து விட்டோம்!

குரு: பிடிபட்டானா சண்டாளன்? (வியப்பு, பயம்)

உல: ஆம் ஸ்வாமி - பிடிபட்டான், சிறையிலே அடைக்கப்பட்டான்.

குரு: சபையோர்க்கே - பார்த்தீர்களா? அவன் புதுமைப் பித்தன் ஆளாகத்தான் இருக்க வேண்டும் - இருங்கள்; இப்போதே போய் அவன் யார் - யாருடைய தூண்டுதலால் அரசனைக் கொல்ல வந்தான் - என்ற விவரங்களை, தெய்வீக சக்தியால் அந்தப் பயலிடமிருந்து கிரகித்து வருகிறேன்! ஒரு நொடியில் வருகிறேன்!

(குருநாதர் போகிறார் - சபை அமைதியாக இருக்கிறது. அரசன், ஆசனத்தை விட்டு எழுந்து, அமைச்சரைப் பார்த்து...)

அர: அமைச்சரே தாங்களும், இன்னும் இரண்டு சீமான்களும் மட்டும் தயவு செய்து என்னோடு வரவேண்டும்.

அமை: அரசே! (புரியாமல் திகைத்து, அதே சமயம் அலட்சிய பாவத்துடன்) என்ன சொல்கிறீர்கள்?

அர: தயவு செய்து எதையும் கேட்காதீர்கள் - நீங்களும் சீமான்களும் என்னைத் தொடர்ந்து வாருங்கள். (போய்க் கொண்டே அரசன்) சபை கலைய வேண்டாம் - நான் வரும் வரையில் சபை நடந்து கொண்டிருக்கட்டும்.

(அரசன் போகிறான். எதுவும் புரியாது அமைச்சரும் இரு சீமான்களும் தொடர்ந்து போகின்றனர்.)