பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 39 / 47

காட்சி 39

காட்சி 39

மூல ஸ்கேன் 136, 137

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(அரண்மனைப் பின்புறத்தில் நுழைகிறான் அரசன் - அவனைத் தொடர்ந்து வந்தபடியிருக்கிறான் பொன்னழகன்)

அர: (உலகப்பனிடம்) உலகப்பா - அல்லியிடம் நாளைக்கு எப்போது சந்திப்பு என்று சொல்ல மறந்து விட்டேன்!

உல: அதனால் என்ன பிரபு! அல்லியம்மாளே தேடிக் கொண்டு வந்துவிடுவார்கள்! நீங்கள் இருவரும் இப்படி தோட்டம் தரவில் சந்திப்பதை விட, அல்லியம்மாளை நமது அந்தப்புரத்திற்கே அழைத்து வந்து விடலாம்!

அர: உம்... நானும் அல்லியும் இணை பிரியாது வாழப் போகிற காலம் வராமலே போய்விடுமா என்ன? வரத்தான் போகிறது!

(பேசிக் கொண்டே போகிறார்கள், பொன்னழகன் கவனித்து நிற்கிறான்.)

பொன்: (தனக்குள்) அரசன் - மணிமாறன்! மணி மகுடத்தின் அதிபதி. அவனது காதலி அல்லி! விரோதியின் காதலி! பகைவனின் வெள்ளாட்டி! துரோக சொரூபம்! பெண் வடிவத்திலே வந்த ஐந்தாம்படை! மக்கள் மன்றத்திலே ஒரு சூன்யக்காரி! சூழ்ச்சியின் உருவமா? என்னையே என்னால் நம்ப முடியவில்லையே! வேவு பார்த்து வருவதாக வெளியே கிளம்புகிறாள் - இங்கே வேந்தனோடு குலவுகிறாள்! வெள்ளாட்டுத் தோலிலே வேங்கை!

விபரீதம்! விபரீதம்! தவிர்க்க முடியாத விபரீதம்! மக்கள் மன்றம் அழிந்தது! மணிமாறன் வென்றான்! மணி மாறன் வென்றான்! பொன்னழகா! உன் புரட்சி முழக்கமெல்லாம் பொடிப் பொடியாகி விட்டது! புயலாக நுழைந்து விட்ட பாலைவனையை நம்பிக் கெட்டேன்! நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நாசகாரியிடம் ஏமாந்தேன்! ஏமாந்தேன்! இனி என்ன செய்வேன்? என் லட்சியமெல்லாம் மண் தானா? ஈடேற முடியாத கொள்கைத்தானா மக்கள் மன்றத்தின் கொள்கை? இல்லை.. இல்லை? இப்போதே இதற்கு முடிவு காணுகிறேன்! அல்லி, சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்லுகிறேன்! சூதுக்காரி! உன்னை சுக்கல் சுக்கலாக ஆக்குகிறேன்! பொறுத்திரு பொன்னழகா பொறுத்திரு!

(போகிறான்.)