காட்சி 36 / 47
காட்சி 36
காட்சி 36
மூல ஸ்கேன் 132, 133, 134, 135
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(மக்கள் மன்றம். அல்லியிருக்கிறாள் தனியாக. கருப்பு ரோஜா வந்து அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறான்.)
அல்லி: யார் கொடுத்தது?
க.ரோ: புதுமைப்பித்தன்.
அல்லி: கையெழுத்தைக் காணோம்?
க.ரோ: இதையெல்லாம் அவரை நேரில் பார்க்கும் போது கேட்டுக் கொள்ளுங்கள், நான் சாதாரண தூதன், அவ்வளவுதான்!
அல்லி: என்ன, கருப்பு ரோஜா - என்ன ஒரு மாதிரியா பேசுகிறாய்?
க.ரோ: அப்புறம் என்னாங்க! என்னைத்தான் உங்க சங்கத்திலே சேர்க்க மறுத்துவிட்டீர்களே!
அல்லி: ஓ அந்தக் கோபமா? சரி, சரி போ! சீக்கிரம் சேர்த்துக் கொள்கிறேன்!
க.ரோ: தயவு இருந்தால் சரி... ம்... கடிதம் காத்துக் கொண்டிருக்கிறது - படிங்க - நான் இருந்தால் வெட்கமாக இருக்கும் நான் போகிறேன்!
(போகிறான். அல்லி கடிதத்தைப் படிக்கிறாள். படித்து முடிக்கும்போது அங்கு வந்த கலாராணி கவனித்து, மறைந்திருந்து பார்க்கிறாள் - அல்லி, கடிதத்தை இடுப்பில் சொருகிக் கொண்டு, வெளியே போகிறாள். கடிதம் அவளை அறியாமல் கீழே விழுகிறது - அதை கலாராணி பார்த்து விடுகிறாள். படித்து விட்டு பத்திரமாக வைத்துக் கொள்கிறாள். அங்கே அப்போது பொன்னழகன் வருகிறான்.)
பொன்: கலாராணி அல்லி எங்கே?
கலா: சதா அல்லி அல்லி அல்லி... நானிருப்பது தெரியவில்லையா?
பொன்: இப்போது நீ என்ன சொல்கிறாய்?
கலா: தொட்டால் துவள நான் இருக்கிறேன் நீங்களோ எட்டாத கனிக்கு ஏணி வைக்கிறீர்கள் என்கிறேன்!
பொன்: இப்படி மனந்திறந்து பேசும் பெண்ணை நான் பார்த்ததேயில்லையம்மா! மானிகை ஜாதி என்றாலே தனி வகை தான் போலும்! ஒரு ஆடவனோடு பேசும் பண்பு தெரிய வேண்டாமா?
கலா: அதுபோல் ஆடவருக்கு பெண்ணோடு பேசும் பண்பு வேண்டும்! அவசரப்பட்டு தலையில் கை வைப்பது - காய்ச்சலா என்று தொட்டு பார்ப்பது - கூந்தலைக் கோதி விடுவது - ஓடும் போது கையை பிடித்திழுப்பது இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது!
பொன்: இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? அல்லி சொன்னாளா?
கலா: நானே பார்த்தேன்! ரசித்தேன்! சிரித்தேன்!
பொன்: சரி சரி! உன்னை இங்கிருந்து அனுப்பிவிட வேண்டியதுதான்!
கலா: சாஜூரைத் தவிர என்னை வேறாருக்கு அனுப்பாதீர்கள்!
பொன்: கலாராணி! எத்தனை முறை சொன்னாலும் உனக்குத் தெரியவில்லையே! நீயே ஒரு வழி சொல் - அல்லியை மறப்பதற்கு!
கலா: என்னை நினைத்துக் கொள்வது...
பொன்: அவளை மறந்தல்லவா - உன்னை நினைக்க வேண்டும்!
கலா: அவள் உங்களை நினைக்கவேயில்லையே!
பொன்: அதற்குள் முடிவு கட்ட முடியுமா? அழியாத சித்திரமாக அல்லவா பதிந்துவிட்டாள் அல்லி என் மனதில்! அவளை மறக்க முடியுமா? முடியாது! முடியாது!
கலா: மறக்க முடியுமா - முடியாதா என்பதை முடிவு கட்ட நான் ஒரு யோசனை சொல்லுகிறேன்! இப்போதே நீங்கள், அரண்மனைப் பக்கமுள்ள தோட்டத்திற்குப் புறப்படுங்கள் - அங்கே அல்லியைப் பார்ப்பீர்கள்!
பொன்: என்ன சொல்கிறாய் கலாராணி!
கலா: அல்லியை அள்ளிப் பருக அங்கே ஒருவன் காத்திருக்கிறான் - அல்லி, அங்கே போயிருக்கிறாள்!
பொன்: உண்மையாகவா?
கலா: ஏன் சந்தேகம்? போனால் தெரிகிறது?
பொன்: இப்போதே போகிறேன். அல்லி யாருக்குச் சொந்தமுடையவள் என்பதை அறிந்து வருகிறேன். கலா ராணி! இதுமட்டும் பொய்யாக இருந்தால், பிறகு பொன்னழகன் உன் வாழ்வில் புயலாக மாறிவிடுவான் ஜாக்கிரதை!
கலா: புலியாக மாறுவது பிறகு முதலில் புள்ளிமான் சங்கதி என்னவென்று தெரிந்து வாருங்கள்!
பொன்: ம்... இதோ இப்போதே!
(போகிறான், கலாராணி பெருமூச்சு விடுதல்.)