காட்சி 33 / 47
காட்சி 33
காட்சி 33
மூல ஸ்கேன் 127, 128, 129, 130, 131
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(மக்கள் மன்றம் - அதே இரவு - பொன்னழகன் வருத்தமாக உட்கார்ந்திருக்கிறான் - அங்கே கலாராணி வருகிறாள்.)
கலா: இப்படித் தூங்காமல் வருத்தமாகவே உட்கார்ந்திருந்தால் அல்லி வந்து விடுவாளா?
பொன்: கலாராணி - நீ வேறு தொல்லை கொடுக்காதே போய்ப்படு!
கலா: உங்கள் துயரம் தீர்ப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறேன் - தொல்லையென்கிறீர்களா?
பொன்: நேரம் தெரியாமல் தொந்தரவு செய்கிறாய்!
கலா: இரவு நேரம் இதைப் பொறுத்தமற்ற நேரம் என்று யார்தான் கூறுவார்கள்?
பொன்: இப்போது நீ என்ன சொல்கிறாய்?
கலா: புதிதாக என்ன சொல்லப் போகிறேன்! நான் இங்கு வந்த நாள் முதல், என்னுடைய ஒவ்வொரு அசைவுகளும், உங்களிடம் சொல்லியிருக்கிறேனே - நான் என்ன நினைக்கிறேன் எதையெண்ணி ஏங்குகிறேன் என்பதை யெல்லாம் இன்னுமா சொல்லவேண்டும்?
பொன்: அரண்மனை ஜாதி என்பது சரியாக இருக்கிறது பார்! சேர்ந்த பழகிய ஒரு தோழியைக் காணவில்லை - என்ன ஆனாளோ தெரியவில்லை - நீ இப்போதுதான் காதல் கீதம் பாட வருகிறாய்.
கலா: அல்லிக்காக நான் கவலைப்படாமலா இருக்கிறேன்?
பொன்: உனக்கு எப்படியம்மா கவலை வரும்? அவள் தான் உனக்குப்போட்டி என்று கருதுகிறாயே.
கலா: இல்லையே! அவள் என்னோடு போட்டி போட்டுக் கொண்டு நான் காதலிக்கும் மனிதரையே அவளும் காதலிப்பதாகத் தெரியவில்லையே!
பொன்: உன்னிடம் சொன்னாளா அல்லி!
கலா: சொல்ல வேண்டுமா...? ஒரு பெண் இன்னொரு பெண்ணை சுலபத்தில் புரிந்து கொள்ள முடியும்!
பொன்: தப்புக் கணக்கு! அல்லி என்னுடையவள்! அதை மாற்ற யாராலும் இயலாது!
கலா: அப்படியானால் என்னை வெறுக்கிறீர்கள்! அதுதானே உண்மை!
பொன்: வெறுக்கவில்லை, கலாராணி! ஆனால் என் எண்ணம் முதலில் சென்றது அல்லியின் மீதுதான்! அதை மாற்ற இயலுமா? காதல் இலக்கணத்திலே அப்படி ஒரு விதிவிலக்கு இருக்கிறதா - தயவு செய்து என்னை மன்னித்து விடு. கலா.. போ.. போய்த் தூங்கு! நானும் தூங்கப் போகிறேன்!
(என்று விளக்கை அடக்கி விட்டுப் படுத்துக் கொள்கிறான். கலா போகிறாள். சிறிது நேரத்தில், அல்லி உள்ளே வந்து விளக்கைத் தூண்டுதல் - பொன்னழகன் திடுக்கிட்டெழுந்து ‘அல்லி’ என அலறுதல்.)
பொன்: அல்லி! வந்து சேர்ந்தாயா? என்ன நேர்ந்ததோ என்று துடித்துப் போனேன்! அய்யோ காயம் பலந்தானா?
(காயத்தைத் தொட்டுப் பார்க்கிறான் - சகஜமாக கையை அவள் மீது வைக்கிறான்.)
அல்லி: பலமொன்றுமில்லை - தப்பிவிட்டேன்!
பொன்: உன்னைத் தேடி நம் ஆட்களை எல்லாம் அனுப்பியிருக்கிறேன்! ஆமாம், எங்கே ஒளிந்திருந்தாய்!
அல்லி: அரண்மனையில் அடைக்கப்பட்டேன்!
பொன்: என்ன?
அல்லி: ஆமாம், புதுமைப்பித்தன் வராவிட்டால் தப்பியிருக்க முடியாது!
பொன்: புதுமைப்பித்தனா?
அல்லி: ஆமாம் - அவர்தான் என்னை ரகசியமாகத் தப்ப வைத்தார்!
பொன்: அப்பா! இந்தப் புதுமைப்பித்தன் பெரிய திறமைசாலி தான்! எதிரிகளின் கோட்டைக்குள்ளேயே புகுந்து வெற்றிமாலை சூடுகிறான் மனிதன்.. அல்லி இப்போது புதுமைப்பித்தன் எங்கே? எனக்குப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.
அல்லி: அவருக்குத்தான் ஓய்வே இல்லையாம்! அதோடு நம் மீது ஏற்பட்ட மனச்சங்கடம் இன்னும் தீரவில்லையாம்!
பொன்: பாவம் - நாம் தான் தவறு செய்துவிட்டோம்! நல்ல மனிதனை சந்தேகித்து மக்கள் மன்றத்தின் பலத்தைக் குறைத்துக் கொண்டோம். புரட்சியின் உருவம் என்றால் அது புதுமைப்பித்தனுக்கே சாரும்!
அல்லி: அவர் உங்களையும் அப்படித்தான் சொல்லுகிறார்!
பொன்: அப்படியா? சந்தோஷம் உம் அல்லி மிகவும் களைத்துப் போயிருக்கிறாய், எல்லா விஷயங்களும் காலையில் பேசிக் கொள்வோம் - தூங்கு முதலில்!
அல்லி: உம் சரி! ஆமாம் நான் அரசனைக் காப்பாற்றினேன் என்று ஏதாவது... தவறாக யாராவது?
பொன்: சொன்னார்கள்! அதற்கெல்லாம் நான் சமாதானம் சொல்லி விட்டேன்! மக்கள் மன்றத்தின் மீது பழி வராமல் பாதுகாத்தாள் என்று நமது கவிஞர் ஒரு பிரசங்கமே செய்து விட்டார்!
அல்லி: கவிஞர் எங்கே?
பொன்: அவர் வழக்கம் போல உளவறியப் போயிருக்கிறார்! மீதியைக் காலையில் பேசிக் கொள்ளலாம், தூங்கு அல்லி..! ஏன் இங்கேயே படுத்தையிருக்கிறது... தூங்கேனே நான் வெளியில் படுக்கிறேன் காற்றோட்டமாக..!
(அல்லி படுக்கையில் படுக்கிறாள்)
பொன்: அலட்டிக் கொள்ளாதே! கையை அதிகமாகவும் அசைக்கக் கூடாது! ஓய்வு நிறையத் தேவை...
(என்று கூறியபடி போர்வையை காலில் போட்டு மூடுகிறான் அவளுக்கு.)
பொன்: முகமே வாட்டமாயிருக்கிறது... தலைவலி எதுவும் இல்லையே?
(தொட்டுப் பார்த்தல்)
அல்லி: ஊஹும்!
பொன்: ம் தூங்கு பேசாமல் தூங்கு!
(அவள் தலைமயிரைக் கோதி விடுகிறான் - இதுபோல் சில அசம்பாவிதங்களான நிகழ்ச்சிகளைக் கண்ட அல்லி எழுந்து)
அல்லி: நான் உள்ளே போய்க் கலாராணிக்குத் துணையாகப் படுக்கிறேன், அவள் தனியாக இருப்பாள்...
(என எழுதல்)
பொன்: ஏன் அல்லி... ஏன்?
அல்லி: ஒன்றுமில்லை. நீங்கள் தூங்குங்கள்...
பொன்: அல்லி (கையைப் பிடித்தல்)
அல்லி: விடுங்கள் என்னை!
(போய்விடுகிறாள்! பொன்னழகன் குழப்பம் - கலாராணி இவைகளையெல்லாம் மறைந்து கவனித்தல்.)
பொன்: (தனக்குள்) சே! அவசரப்பட்டு விட்டேன், மிகவும் அவசரப்பட்டு விட்டேன்!