பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 32 / 47

காட்சி 32

காட்சி 32

மூல ஸ்கேன் 122, 123, 124, 125, 126, 127

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(தோட்டம் - அல்லியும் புதுமைப்பித்தனும் வருதல் - அல்லி தப்பி விட்டதை நினைத்து பெருமூச்சு விடுதல்)

அல்லி: அப்பாடா தப்பித்தோம்! யாருடைய கையிலாவது சிக்கியிருந்தால்...

புது: இதற்கெல்லாம் பயப்பட்டலாமா? செம்படவர்கள் கடல் அலைக்குப் பயந்தால்?

அல்லி: என்ன இருந்தாலும் உங்களுக்குத் துணிவு அதிகம்! இரவு நேரத்தில் அரண்மனைக்குள்ளே நுழைந்து - அதிருக்கட்டும். நான் அங்கேயிருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

புது: (சமாளித்து) தெரியாதா? நான்தானே உன்னை... ம்.. ம்.. தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன். கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டதும் மந்திரி முதலியோர் ஓடிவிட்டனர்! அரசன், உன்னைத் தூக்கிக் கொண்டு அரண்மனைக்கு வரச் சொன்னான் அதிருக்கட்டும்; அல்லி - நீ அரசனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?

அல்லி: என்னமோ, எனக்கே தெரியவில்லை! அரசனது முகத்தைப் பார்த்ததுமே, எனக்கு ஏதோ ஒரு வித உணர்ச்சி ஏற்பட்டது. மின்னல் போல மறுகணம் அவர் மீது கத்தி பாய்ந்தது; நான் என்னை அறியாமலே தடுத்து விட்டேன். அதுவும் நல்லதாய்த்தான் போயிற்று - அரசன் மாண்டிருந்தால் - பழி, மக்கள் மன்றத்தின் மீதல்லவா விழும்!

புது: ஆமாம்: ஆனால் ஒன்று! பொன்னழகன் முதலியோருக்கு நீ செய்த காரியம் பிடிக்காதென்றே நினைக்கிறேன்.

அல்லி: பிடிக்கா விட்டாலும் - மக்கள் மன்றத்திற்கு ஆபத்து வரக் கூடாது என்பதிலே அவர்களுக்கும் அக்கரை இருக்கிறதல்லவா? அதனால் என் மீது குற்றம் சாட்ட மாட்டார்கள்!

புது: சரி, அல்லி! நான் வருகிறேன்! நீயும் புறப்படு!

அல்லி: எங்கே போகிறீர்கள்? ஆமாம் நீங்க இப்போது எங்கேயிருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்?

புது: இப்போது, இங்கே- உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், இங்கிருந்து எங்கே போவேனோ தெரியாது?

அல்லி: தங்கள் எதிர்காலத் திட்டங்கள்...?

புது: எத்தனையோ உண்டு. மணிமகுடத்துக்கு நான் தான் சொந்தக்காரன் என்பது உனக்குத் தெரியுமா, அல்லி!

அல்லி: எந்த மணிமகுடத்துக்கு

புது: மணிமகுடம் பத்திரிகைக்கு! நாட்டுக்கு அல்ல! இப்போதைய எனது முயற்சி அதுதான்! ஏட்டின் மூலம் நாட்டு மக்களின் மனதைப் பண்படுத்தலாமென்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது - அல்லி என்னைப் பற்றிப் பொன்னழகனுக்கு என்ன அபிப்பிராயம்!

அல்லி: அவர், உங்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறார் - முதலில் சந்தேகப்பட்டதற்காக அடிக்கடி வருந்துகிறார் - உங்கள் பெயரைச் சொன்னாலே அவருக்குத் தனி ஆனந்தம்!

புது: அப்படியா மிகவும் நன்றி!

அல்லி: உங்களைப் பற்றி பொன்னழகனின் அபிப்பிராயத்தை மட்டும் கேட்டீர்களே; நான் என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறேன் என்று கேட்டீர்களா?

புது: கேட்காமலே சில விஷயங்களைப் புரிந்து கொள்ளும் சக்தி உண்டு எனக்கு!

அல்லி: அப்படியானால் உங்களுக்கு மனம் இருக்கிறது!

புது: அது இருப்பதால்தான் மக்களைப் பற்றி நினைக்க முடிகிறது!

அல்லி: அந்த மனதில் - புயல், புகைச்சல், போர், பூகம்பம் இப்படி மாறி மாறி வேதனைகளை மட்டுமே வாட்டமிட்டுக் கொண்டிராமல் - தீக்குப் பதிலாக தென்றலும் நுழைய வேண்டுமல்லவா?

புது: புரிகிறது எனக்கு! நீரின்றி வறண்டு கிடக்கும் நாக்கிலே ஒரு துளி தேன் விழுந்தால் - அதன் சுவையே வேறு தான் என்கிறாய், இல்லையா?

அல்லி: இருவர் எண்ணமும் ஒன்றாகத்தானிருக்கிறது! ஆனால்...?

புது: யார் முதலில் வெளிப்படுத்துவது என்பதிலே சிறிது வேறுபாடு இருக்கிறது!

அல்லி: ‘இருந்தது’ என்று சொல்லுங்கள்!

புது: அல்லி!

அல்லி: ஆங்..!

(நாணங் கலந்த இருவர் உணர்ச்சி - புதுமைப்பித்தன் அவளைத் தொடுகிறான். அல்லியும் அவனை நெருங்குகிறாள். இருவரும் சிறிது நேர ஊடல் நிகழ்ச்சிகள்.)

புது: எங்கே, என்னைப் பார்! பாரேன்! ஆகா... கணல் மட்டுமே கிளம்பும் இந்தக் கண்ணிலே, என்று கருதியிருந்தேன்! என்னைக் கவரும் காந்தமும் உண்டு என்று இப்போது தான் புரிந்து கொண்டேன் கண்ணழகி! அன்று, கொடிக்கால் நகரில் கோடையிடி பெண் வார்த்தைகளைக் கொட்டிய இந்த இதழ்களிலே, இவ்வளவு மென்மையிருக்கிறது என்று எனக்குத் தெரியாது மின்னலே...!

அல்லி: நீங்கள் மட்டும் என்னவாம்? எரிமலை என்று வர்ணித்தார்கள் உங்களை! எனக்கு நீங்கள் ஆனந்த அருவியாக அல்லவா இருக்கிறீர்கள்? கோடை வெய்யில் என்றார்கள்; குளிர் நிலவுங்கூட என்பதை இப்போதுதானே புரிந்து கொண்டேன்!

புது: அல்லி

அல்லி: என்ன?

புது: நம்முடைய போராட்டத்திற்கு இந்தக் காதல் முட்டுக்கட்டையாக இருந்து விடக் கூடாது!

அல்லி: இத்தனை நாள், நான் தயங்கியதும் அதற்காகத்தான்.

புது: கால் கொப்பளிக்கும் பாலைவனத்திலே பயணம் நடத்துகிறவனுக்கு இளைப்பாற ஒரு பேரிச்சமர நிழல் - அது போலத்தான் நமக்கு இந்தக் காதல்! இனிமேல் நான் ஓடியாடி உழைக்கும் போதும், மேடையேறி முழங்கும் போதும் அடக்கு முறைகளை உடைக்கும் போதும் - எனக்காக ஒருத்தி இருக்கிறாள்; களைத்த நேரத்தில் களிப்பூட்டுவாள் - களம் சென்று திரும்பினால் காயத்திற்கு மருந்து கட்டுவாள்! கடையேனே, மடையேனே என்பார் தீயோர் - ‘கண்ணாளா’ எனும் ஒரு சொல்லிலே அந்த சோகம் துடைப்பாள் - வேகம் தணிப்பாள் - என்கிற இதய எழுச்சி பிறக்கும் இன்னும் புதிய உற்சாகத்தோடு பணிபுரிவேன்!

அல்லி: களைப்புத் தீர்க்க மட்டுமல்ல கண்ணாளா! காயத்திற்கு மருந்து கட்டு மட்டுமல்ல இன்பமே! களத்திற்கு வழியனுப்பும் காரிகையாக இல்லாமல் - அந்தப் போர் முனையில் நீங்கள், இந்தப் போர் முனையில் நான் என்று திட்டம் தீட்டும் துணைவியாகவும் இருப்பேன்!

புது: அல்லி! நாம் இருவரும் புரட்சிக்காரர்களாக மட்டும் இல்லாவிட்டால், போர் முனையிலா இருப்போம் - அரண்மனையிலே நான் - அரிவாள் மனையிலே நீ?

அல்லி: நீங்கள் அரண்மனையிலா?

புது: ஆமாம், அரசுக்குத் துதிபாடும் ஆஸ்தான கவிஞனாக - அமைச்சருக்குப் பணியாளனாக - குருவுக்குச் சீடராக இப்படி ஏதோ ஒரு வேலை கிடைத்திருக்கும் இல்லையா?

(அப்போது காவலர்கள் வரும் ஓசை கேட்கிறது இருவரும் திகைப்பு.)

அல்லி: யாரோ வருகிறார்கள் போலிருக்கிறது?

புது: அரண்மனைக் காவலர்களாயிருக்கும்! சரி அதிக நேரம் தாமதிக்கக் கூடாது - புறப்படு, அல்லி!

அல்லி: நீங்கள்?

புது: நான்? நாளைக்கு சந்திக்கிறேன்!

அல்லி: எங்கே? எப்போது!

புது: இங்கேதான்! இதேநேரத்தில் தான்! உம் போய் விடு! காவலர்கள் வருவது போல் தெரிகிறது!

(இருவரும் தழுவிப் பிரிதல்.)

அல்லி: மறந்து விடாதீர்கள்!

புது: எப்படி மறப்பேன்.

அல்லி: வாட்டுமா?

(போகிறாள்.)

புது: ஆங் - ஒரு சேதி, மறந்து விட்டேனே - அந்தக் கலாராணி எப்படியிருக்கிறாள்?

அல்லி: (போனபடி) கலாராணியா? - நாளைக்குச் சொல்லுகிறேன்.

(புதுமைப் பித்தனும் சுற்றும் முற்றும் பார்க்க, உலகப்பன் வருதல்)

உல: போகலாமா பிரபு?

புது: போகலாம்!

உல: வேஷத்தைக் கலைங்க - இல்லேன்னா அரண்மனைக்குள்ளே நுழைய முடியாது!

(புதுமைப்பித்தனும் வேஷத்தைக் கலைத்தபடி, அரச உடையில் உலகப்பனுடன் புறப்படுகிறான் - அரசன், அல்லி போன பக்கம் திரும்பிப் பார்த்தல்)

உல: வாங்க வாங்க இன்றையோட உலகம் அழியவா போகிறது? வாங்க நாளைக்குப் பாத்துக்கலாம்!