காட்சி 31 / 47
காட்சி 31
காட்சி 31
மூல ஸ்கேன் 121, 122
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அரண்மனையில் அல்லி தூக்கம் வராமல் படுத்திருக்கிறாள். அப்போது புதுமைப்பித்தன் அங்கு வந்து, விளக்கை சிறிது தூண்டுதல் - அல்லி திடுக்கிட்டு எழுதல்.)
அல்லி: யார்?
(புதுமைப்பித்தன் ஓடி வந்து அவள் வாயைப் பொத்தி)
புது: ஸ்.. சப்தம் போடாதே..
(வாயைப் பொத்தியிருக்கும் அவன் கையை, அல்லி, மெதுவாக ரசித்தபடி எடுக்கிறாள்.)
புது: அல்லி - இதுதான் சமயம் - வா அரண்மனையை விட்டு ஓடிவிடலாம்.
அல்லி: நீங்கள் எப்படி வந்தீர்கள்?
புது: அதெல்லாம் பிறகு சொல்லுகிறேன்... புறப்படு!
அல்லி: காவலர்கள் அதிகமாயிற்றே?
புது: கவலைப்படாதே! அரசனும் தூங்குகிறான் - அரண்மனையும் தூங்குகிறது. விழித்துக்கொண்டிருப்பவர்கள் நாம் இருவரும்தான்! வா...வா!!
(அவள் கையைப்பிடித்து அழைத்துச் செல்லுதல்.)
அல்லி: தப்பி ஓடுவது...
புது: (சந்தேகமாய்) குற்றந்தான்! ஆனாலும் நாளைக்குக் கொலைக் குற்றத்திலிருந்து நீ தப்பிக்க வேண்டாமா? சீக்கிரம் வா. உம்...
(இருவரும் வெளியேறுதல்.)