காட்சி 30 / 47
காட்சி 30
காட்சி 30
மூல ஸ்கேன் 117, 118, 119, 120, 121
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அரண்மனையில் வேறிடம் அரசன் உலகப்பன் இருவரும்)
அர: என்ன உலகப்பா... ஏன் அதற்குள் அழைத்தாய்; சுவையான கட்டத்தில்.
உல: சுவையான கட்டம் ஒன்றுமில்லையே பிரபு - எட்டி நின்று பேசிக் கொண்டுதானே இருந்தீர்கள்!
அர: எட்டி நின்று பேசினாலும் எட்டிப் பேச்சல்ல - வெட்டிப் பேச்சுமல்ல!
உல: வெல்லக்கட்டிப் பேச்சாக்கும்! அரசே! தாங்கள் இருக்கிறீர்களா, என்று பார்த்து வருமாறு, அமைச்சர் வேலைக்கார வஞ்சியை அனுப்பியிருக்கிறார்!
அர: அவளை ஏன் அனுப்பியிருக்கிறார்?
உல: ஊரிலே குழப்பமாயிருக்கும் போது மந்திரி வெளியே கிளம்புவாரா? அதனால் அவள் வந்திருக்கிறாள்; இவளிடம் முகத்தைக் காட்டுங்கள்! ஏ, வஞ்சி, வஞ்சி, இங்கே வா!
(அவள் வருதல்)
பார்த்துக்க இதோ இருக்காரு! பொம்மை ராஜா!
அர: எங்கம்மா வந்தே? மந்திரி எஜமான் பாத்துட்டு வரச் சொன்னாகளாக்கும்!
வஞ்சி: ஆமாம்!
அர: போய்ச் சொல்லு! இருக்கேன்னு - எஜமானை வெளியே கிளம்ப வேண்டான்னு சொல்லு - ஊர்ல ஏக ரகளையாயிருக்கு.
வஞ்சி: ஆகட்டும்.
அர: சரி நான் போய், தலையிலே ரெண்டு சொம்பு தண்ணி ஊத்திக்கிறேன் - குளிச்சி நாலு நாளாச்சு - உடம்பெல்லாம் அரிக்குது! உடையெல்லாம் மாத்திக்கணும் - இந்த உடை நமக்கு லாயக்குப்படுமா?
உல: போயி, குளிங்க, குளிங்க!
(அரசன் போகிறான், உலகப்பன் வஞ்சியிடம் நெருங்குகிறான்.)
வஞ்சி: சரி, சரி? என்னைப் பார்த்து ஒன்றும் சிரிக்கவும் வேண்டாம் - என் மனதை எரிக்கவும் வேண்டாம்!
உல: உன் மனதை எரிக்கிறேனா? அது என்ன அடுப்பா? அல்லது விறகா? நான் எரிப்பதற்கு!
வஞ்சி: நான் எவ்வளவு கவலையோடு இருக்கிறேன்! அதைப்பற்றி அக்கரை கொஞ்சமாவது இருக்கிறதா?
உல: அக்கரையில்லாமலில்லை அழகீ - இக்கரையிலே சிறிது இடைஞ்சல் - அவ்வளவுதான்!
வஞ்சி: சக்கரை போலப் பேசி விட்டால் போதுமாக்கும்?
உல: சிக்கலை வளர்க்காதே - சீக்கிரம் செய்தியைச் சொல்...
வஞ்சி: நேற்று இரவு தோட்டத்து வாசலிலே காத்துக் காத்துக் காலும் ஒடிந்து விட்டது - கண்ணும் பூத்து விட்டது.
உல: ஆ - கால் ஒடிந்தது - கண் பூத்தது, ஐயோ அப்படியானால் நடக்கவும் முடியாது - பார்க்கவும் முடியாதே - வஞ்சீ கண்ணிலே பூ விழுகிற வியாதியை முற்றவிடக் கூடாது - பிறகு பார்வையே பட்டுப் போய்விடும்!
வஞ்சி: கேலி செய்கிறீர் - தாலி கட்டப் போகும் காதலனுக்காக, நான் அந்த வேலி ஓரத்திலே தவித்து நின்றது கடவுளுக்கு மட்டுந்தான் தெரியும்.
உல: அய்யோ - கடவுளுக்குத் தெரிந்தால் சும்மாயிருக்க மாட்டாரே! கண்ணன் அவதாரத்தில் அங்கு வந்திருப்பாரே?
வஞ்சி: அப்படி வந்திருந்தாலும் பரவாயில்லையே...
உல: என்ன?
வஞ்சி: அவரையே உம்மிடம் தூது அனுப்பியிருப்பேன்!
உல: அதானே பார்த்தேன்! அர்ச்சுனனுக்காகத் தூது சென்ற ஆபத்பாந்தவராயிற்றே... அவர்! கண்ணே வஞ்சி.. கவலையை விடு.. (அருகே சென்று)
வஞ்சி: ஊஹும்... என்னைத் தொடவேண்டாம்?
உல: அடத் “தேடி வந்த வஞ்சி மானே.. மோடி செய்யாதே வீணே” என்று பாடட்டுமா?
வஞ்சி: பாடலால் ஊடல் தீருமா?
உல: ஆடலால்?
வஞ்சி: ஊஹும்
உல: கூடலால்
(வஞ்சி கண்ணை மூடிக் கொண்டு சிரிக்கிறாள்.)
உல: ஆகா விரல் இடுக்கின் வழியே, விழியைச் செலுத்தும் வெண்முத்துச் சிரிப்புக்காரி, சிங்காரி - ஒய்யாரி எங்கே - செந்தாமரை போல் சிவந்திருக்கும் உன் உள்ளங்கைகளை என்னிடம் கொடு!
(கையை எடுத்தல், முகத்தை வேறு பக்கம் திருப்புகிறாள் வஞ்சி.)
உல: முகத்தைத் திருப்பு! (திரும்புகிறாள்) ஆகா கூந்தல் போன்ற கூந்தல்! புருவம் போன்ற புருவம்! கண் போன்ற கண்கள்! முகம் போன்ற முகம்!
வஞ்சி: இது என்ன புது வர்ணனை!
உல: இதுதான் இயற்கை வர்ணனை - வில் போன்ற புருவம் - அம்பு போன்ற கண்கள் - கேடயம் போன்ற முகம் - என்றெல்லாம் சொல்லி, முகத்தையே ஒரு ஆயுதச் சாலையாக வர்ணிக்கிற வேலை எனக்குப் பிடிக்காது!
வஞ்சி: இப்படியெல்லாம் பேசிப் பேசி - எனக்கு மயக்கத்தை அதிகமாக்குகிறாய்... உன்னைக் கண்டதும் உச்சந் தலையிலே பாம்பு கடித்ததுபோல் இருக்கிறது எனக்கு?
உல: அய்யோ! அவ்வளவு விஷமா?
வஞ்சி: இல்லை - அவ்வளவு மயக்கம் - நீ மயக்கமூட்டும் பாம்பாகவும் இருக்கிறாய் - விஷத்தை இறக்கும் மந்திரவாதியாகவும் இருக்கிறாய்!
உல: ஆகா புதிய முறையில் காதல் பாஷை பேசும் என் கற்கண்டே! என் பூச்செண்டே!
வஞ்சி: பார்த்தாயா! கற்கண்டு, பூச்செண்டு - கரைவதைப் பற்றியும் கசங்குவதைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டாய்! பழைய வர்ணனை!
உல: சரி, கரையாத கற்கண்டே - கசங்காத பூச்செண்டே திருத்தம் போதுமா? தேனே! (பெருமூச்சுடன்)
வஞ்சி: (பெருமூச்சுடன்) என்னால் நிற்க முடியவில்லை. நான் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் கண்ணாளா!
உல: ஆங்.. எங்கே போகிறாய்? வஞ்சி! எங்கே போகிறாய்?
வஞ்சி: (மயங்கிச் சாய்ந்தபடி) இன்பலோகம் போகிறேன்!
உல: இதோ, நானும் வந்துவிட்டேன்! என்னையும் அழைத்துப்போ! ஆணோ, பெண்ணோ, தனியாய்போனால் - இன்பலோகத்துக்கு அனுமதிச் சீட்டு கிடைக்காது...
(அவள் விழுகிறாள் மயங்கி.)
உல: (தூக்கிக் கொண்டு) அய்யோ - இன்பலோகப் பிரயாணம் ரொம்ப கனமா இருக்கே!