பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 29 / 47

காட்சி 29

காட்சி 29

மூல ஸ்கேன் 110, 111, 112, 113, 114, 115, 116, 117

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(அரசன் மாளிகை - கட்டிலில் அல்லி மயக்கத்தோடு படுத்திருக்கிறாள். கட்டுப் போடப்பட்டிருக்கிறது)

உல: (அரசனிடம்) நல்ல வேளை - காயம் அதிகமில்லை. இவுங்க மாத்திரம் குறுக்கே வராம இருந்திருந்தால் உங்களைக் கொன்றேயிருப்பான், அந்தப் பாவிப்பயல்!

அர: (மெதுவாக) சரி, உலகப்பா! நீ போ! அல்லி இங்கேயிருக்கிறவிஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்! அமைச்சர் வந்தால், உடனே என்னிடம் ஓடி வந்து சொல்லு.

உல: அவர் எங்கே வரப் போகிறாரு - வெளியே கிளம்பினால், தன் உயிருக்கு வேட்டு வைத்து விடுவார்களோ என்று வெடவெடத்துப் போயி, வீட்டிலேயே இருப்பாரு!

அர: சரி எதற்கும் வெளியே இரு...

(வெளியே போதல்)

உல: அப்படிச் சொல்லுங்கள் - உங்களுக்கு இடைஞ்சலா நான் ஏன் இங்கு இருக்கப் போகிறேன்! ஆனால், ஒண்ணு மயக்கம் தெளிஞ்ச பிறகு எழுப்புங்க!

அர: குறும்புக்காரா போ.. போ...

(அரசன் உலவிக் கொண்டேயிருக்கிறான். அல்லியைப் பார்த்தபடி - பிறகு ஒரு ஆசனத்தில், யோசித்தபடி உட்காருகிறான். உட்கார்ந்து அவளையே பார்க்கிறான்... அவன், இதய ஒலி...)

அர: “அல்லி, கண் நிறைந்த கனகவல்லி! மக்கள் மன்றமெனும் பொன் ஆரத்திலே மாணிக்கப் பதக்கமென ஒளிவிடும் புரட்சி ஓவியம், இந்த ஓவியத்தை என் இருதயச் சுவற்றிலே மாட்டி வைத்து அழகு பார்க்க முடியுமே தவிர, கண் பறிக்கும் இந்த சிங்காரச் சித்திரத்தை கன்னத்திலே ஒத்திக் களிப்படைய முடியாது - அவள் என்னைக் காதலிக்கிறாள் - மனப்பூர்வமாக என்னையல்ல - அரசன் மணிமாறனை அல்ல - அவன் கோட்டை கொத்தளங்களை அல்ல - அவள் காதலிப்பது கொள்கை முழங்கும் புதுமைப் பித்தனை; புயலில் சிக்கித் தவிக்கும் அந்த புது மனிதனை - மறைந்து வாழ வேண்டிய அந்த மர்ம ஜீவனை - அவள் காதலிக்கிறாள்... அரண்மனையிலே உலவும் அந்தஸ்து நிறைந்த ராணியாக வாழ விரும்பமாட்டாள். அல்லி - மக்களின் இதய ராணியாகவே வாழுவாள்! அதனால் தான் நானும் அந்தப் புரட்சிக்காரியைக் காதலிக்கிறேன்! அவள், அரசன் மணிமாறனைக் காதலித்தால், புதுமைப் பித்தன் அவளைக் காதலிக்க மாட்டான், வெறுத்து விடுவான் - அல்லி மணிமாறனைக் காதலிக்க மாட்டாள் - அவள் புரட்சிக்காரி - புரட்சிக்காரி - மக்கள் தலைவி - அதே சமயத்தில் மணிமாறனின் காதலி - மன்னின் காதலி அவள் பகைவனை அவள் விரும்புகிறாள் - நேசிக்கிறாள் - காதலிக்கிறாள் - ஆகவே அவள் அரசனின் காதலி.. அரசனின் காதலி... அரசனின் காதலி...

(அவளையே பார்த்து நிற்கிறான் - நினைவு அலைகள் - அரசன் அவளைத் தொட்டு)

அர: அல்லி.. கண்ணேஅல்லி.

(எழுகிறாள்)

அல்லி: யார்?

அர: என்னைத் தெரியவில்லையா அல்லி...?

அல்லி: நீங்களா?

அர: இதயராணி...

அல்லி: இதயராஜா...

அர: கண்மணி...

அல்லி: கண்ணாளா.

அர: அன்பே..

அல்லி: இன்பமே...

(நினைவு அலைகள் ஓய்கின்றன. அல்லி மயக்கம் தெளியாமலே படுத்திருக்கிறாள். அரசன் முன் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்ந்திருக்கிறான் - நினைவு அலை ஓய்ந்து எழுகிறான் - அவள் கட்டிலண்டை போகிறான் - அல்லி புரண்டு படுக்கிறாள். முகத்திலே தண்ணீர் தெளிக்கிறான். அல்லி எழுந்து உட்கார்ந்து அரசனைத் திகைப்புடன் பார்த்து சுற்றும் முற்றும் பார்க்கிறாள்.)

அர: என்ன பார்க்கிறாய்? ஏன் திகைக்கிறாய்? ‘கதைகளில் வரும் கதாநாயகிகள் திக்குத் தெரியாத இடத்தில் விடப்படும்போது - நான் எங்கேயிருக்கிறேன் - என்று வசனம் பேசுவார்களே; அதுபோலப் பேசத் தோன்றுகிறதா - நீ எங்கிருக்கிறாய், தெரிகிறதா? இதோ தகதகவென ஜொலிக்கும் மஞ்சள் நிறப்பட்டுத் திரைகள்! அதை அசைத்து விளையாடும் இளந்தென்றல் காற்றை வரவேற்பதற்கென அமைந்த வைரமிழைத்த பலகணி! பலகணி வழியே பார்வை செலுத்தினால் பால் நிலவிலே வர்ணங் காட்டி, சிரிக்கும் ரோஜாக் கொல்லை! முல்லைத் தோட்டம்! அவை தந்த மலர்மஞ்சம்! மயிலாசனம்! மாணிக்க நாற்காலி! மரகதச் சிலைகள்! பாதாமிட்ட பால்! பழம்! ரசம்! ஊண்! தேன்! இவைகளத்தனையும், இது மணிமாற ராஜனின் மாளிகை என்பதை உனக்குச் சொல்லவில்லையா?

அல்லி: அரசே நல்லவேளையாக... இங்கிருக்கும் அத்தனை பொருள்களுக்கும் பேசும் சக்தி கிடையாது...

அர: பேசும் சக்தி இருந்தால்?

அல்லி: விக்கிரமாதித்தன் சிம்மாசனத்துப் பதுமைகள் போல ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும்.

அர: உதாரணமாக...?

அல்லி: ஒன்றல்ல; ஓராயிரம் காட்டமுடியும். அதோ, செத்துப் போன யானையின் எலும்பு - சிலையாக மாறியிருக்கிறது? ஆனால், வர்ண விளக்குகளாய் - வைரப் பதுமைகளாய் சொர்ணச் சிம்மாசனங்களாய் மாறிக் கிடக்கும் இவைகள் எல்லாம் - சாகாத மனிதர்களின் எலும்பு என்பதை மறந்து விடக் கூடாது! மன்னர் பிரானே - யானையாவது தன்னுடைய தந்தத்தை அப்படியே தந்திருக்கிறது உமக்கு? மனிதனுடைய தந்தம் ஓடாகத் தேய்க்கப்பட்டல்லவா, இந்த உப்பரிகை உயர்ந்திருக்கிறது!

அர: புரியவில்லை, ஒன்றும்!

அல்லி: மன்னிக்கவும் - இது செவிடன் காது சங்கு மகாராஜா! அதிருக்கட்டும் - என்னை இங்கு அழைத்துவர வேண்டிய காரணம்?

அர: மயக்கம்!

அல்லி: என்ன?

அர: எனக்கல்ல!

அல்லி: பிறகு யாருக்கு?

அர: கேட்பவருக்குத்தான்! கத்திக்குத்து - அதன் காரணமாய் மயக்கம் - நடந்ததெல்லாம் நினைவிருக்கிறதல்லவா?

அல்லி: நினைவிருக்கிறது - அதற்காக நான் இங்கு வர வேண்டிய அவசியம்?

அர: மணிமகுடத்தின் மன்னனையே காப்பாற்றியிருக்கிறாய் - அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா?

அல்லி: தேவையில்லை நன்றி எனக்கு! விடை கொடுங்கள் வருகிறேன்!

அர: பெண்ணே!

அல்லி: என் பெயர் அல்லி!

(திடுக்கிட்டது போல் நடித்து)

அர: அல்லி - அல்லி- அடங்காப்பிடாரி அல்லி!

அல்லி: அவளல்ல - அது அர்ச்சுனன் மனைவி!

அர: தெரியும் - புரட்சிக்காரி அல்லி நீ - பொன்னழகன் கூட்டத்தைச் சேர்ந்தவள் - என்னைக் கொல்ல வந்த சதிக் கூட்டத்திலே ஒருத்தி!

அல்லி: புரட்சிக்காரிதான் - பொன்னழகன் கூட்டத்தைச் சேர்ந்தவள்தான் - ஆனால் சதிகாரி அல்ல!

அர: சதிக்கூட்டத்தின் தலைவி!

அல்: சதிக் கூட்டத் தலைவி, உம்மைச் சாவிலிருந்து மீட்டிருக்க மாட்டாள்!

அர: ஆமாம்! (குழப்பம்) பிறகு கொல்ல வந்தது யார்தான்? உங்கள் கூட்டத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவல்லவா அது!

அல்லி: கொடிக்கால் நகரில் கோயில் கூடாது என்பதுதான் எங்கள் தீர்மானமே தவிர, கொலை வெறித்தாண்டவமல்ல!

அர: அப்படியானால் அரசன் சாகக் கூடாது, என்பதிலே ஏன் அவ்வளவு அக்கரை உனக்கு?

அல்லி: அதுவும் தவறு! அரசன்மீது ஆசையோ - அக்கரையோ அல்ல! அபவாதமும், வீண் பழியும் எங்கள் மன்றத்தைச் சேருமே என்ற அச்சம்தான்! அதனால்தான்!... அதனால்தான் மன்னவரே, பாய்ந்துவந்த கத்தியைத் தடுத்தேன். மணிமகுடம் ஒரு மாபெரிய உத்தமரை இழந்து விடுமே என்ற மனப்பதட்டமல்ல, அதற்குக் காரணம்!

அர: நான் நினைத்ததுதான் தவறு - இரக்க சிந்தை உள்ளவளாக்கும் - மனிதப் பண்புகற்றவளாக்கும் - தியாகப் பெண்களின் வழி நடப்பவளாக்கும் - தேசப்பிதாவுக்கு வந்த ஆபத்தை தடுக்க முனைந்திருக்கிறாள் தியாகவல்லி என்று மகிழ்ந்தேன்! மகிழ்ச்சி, மறைந்து விட்டது. மக்கள் மன்றத்தின் பெருமையை நிலைநிறுத்த, அதற்குக் களங்கம் வராமல் காப்பாற்ற, சுருக்கமாகச் சொன்னால் சுயநலத்தின் காரணமாக என்னைக் காப்பாற்றியிருக்கிறாய் நீ!

அல்லி: இல்லை.. இல்லை.. ராஜபக்தியின் காரணமாகத்தான் இந்தச் செயல் புரிந்தேன் என்று கூறி, செங்கோலேந்தியின் சிரிப்பைப் பரிசாகப் பெற நான் விரும்பவில்லை! எனக்குத் தேவை, மன்னரின் புன்னகை அல்ல! மாநிலத்து மக்கள் அழாமல் இருந்தால், அது ஒன்றே போதும்!

அர: மக்கள் அழாமலிருக்க பிரார்த்தனை செய்கிறாயா?

அல்லி: இல்லை முயற்சிக்கிறேன்!

அர: மனிதன் அழுது கொண்டுதான் பிறக்கிறான், ஏன் தெரியுமா?

அல்லி: சிரித்துக் கொண்டு வாழ்வதற்காக!

அர: எப்போதுமே சிரித்துக் கொண்டிருந்தால், இளிச்சவாயன் என்பார்கள்.

அல்லி: தங்களை யாரும் அதுபோல் சொல்வதில்லையே?

அர: அரசன் அழுவதே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? என் நெஞ்சிலே காதை வைத்துக் கேள் - ஒப்பாரி சத்தம் உன் காதைத் துளைக்கும்!

அல்லி: புது நாடுகள் கிடைக்கவில்லையே என்ற புலம்பலுக்கும் - பழைய கஞ்சிக்கும் வழியில்லையே என்ற கதறலுக்கும் வித்தியாசம் நிறையவுண்டு வேந்தரே!

அர: அதென்னமோ - எல்லோரும் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்க முடியாது என்பது என் சித்தாந்தம்!

அல்லி: நான் மனித சமுதாயம் முழுவதையும் குறிப்பிடுகிறேன்! எல்லாருக்கும் வாழ்வு கிடைத்தால் - வளம் பங்கிடப்பட்டால் - செழிப்பும், சிரிப்பும் ஜெகத்தின் சம சொத்தாகி விடும்!

அர: சமசொத்து - சமமாகப் பங்கிடுவது - இந்த அரண்மனையை இடித்து, ஆளுக்கு ஒரு கல் கொடுக்க வேண்டும் - இல்லையா?

அல்லி: ஏன் மரத்தடியிலே வைத்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளவா? அரசே... உடைமை பொது என்றால் அரண்மனையை நொறுக்கி ஆளுக்கொரு கல் கொடுப்பதல்ல! அரண்மனை நிச்சயமாக இருக்கும்... ஆனால் ஒரு மன்னருக்கு மட்டும் நிழல் தரும் இடமாக இருக்காது! நாட்டின் எதிர்கால மன்னர்கள் அனைவருக்கும் பயிற்சியளிக்கும் அறிவுக் கலாசாலையாக இருக்கும்! அரசே.... இடித்து எடுக்க வேண்டிய கல், அரண்மனை! சுவற்றிலே இல்லை... அங்கு உலவும் அதிகாரிகளின் இருதயத்திலே இருக்கிறது! அது இடிக்கப்பட வேண்டும்... நொறுக்கப்பட வேண்டும்... தூள் தூளாக்கப்படவேண்டும்.

(உலகப்பன், அரசனிடம் அமைச்சர் அழைப்பதாக ஜாடை காட்டவே, அரசன் புறப்பட்டு)

அர: சரி. சரி..! உன் கொள்கையை என்னுடைய அரச பதவி ஒப்புக் கொள்ளாது.. நான் வருகிறேன்!

அல்லி: நான்?

அர: நீ...? நீ இங்கேயே இருக்க வேண்டியதுதான்! நாளைய தினம் அல்லது மறுநாள் விசாரணை இருக்கிறது; அது வரை, இது உனக்கு சிறைச்சாலை மாதிரிதான்!

அல்லி: இதுதான் நன்றி தெரிவிக்கும் அழகோ?

அர: அரண்மனைக்காரர்கள் அழகே தனி அழகுதான்! அல்லி - ஜாக்கிரதை கட்டுக்காவல் அதிகம் - தப்பி ஓட முயலாதே - தலைபோய்விடும்.

(அரசன் போகிறான். அல்லி, தனியாக - எதுவும் புரியாமல் உலவுகிறாள் - தரையில் படுக்கிறாள் - விளக்கை சிறிது அடக்கி விட்டு.)