காட்சி 28 / 47
காட்சி 28
காட்சி 28
மூல ஸ்கேன் 108, 109, 110
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(கல்நாட்டு விழாப் பந்தல் - குருநாதர் வருகிறார் - அரிஹரநாதர் அவர் பின்னே வருகிறார். அரசனைக் கொல்ல ஏற்பாடு செய்த துரோகியின் கையிலே பளபளப்பான கத்தி மின்னிக் கொண்டிருக்கிறது - குருநாதர் அவனுக்குக் கண்ணஜாடை காட்டித் தைரியமூட்டுகிறார். அவனும் அவரிடம், காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதாக தலையசைத்துச் சம்மதம் தெரிவிக்கிறான்.)
அப்போது,
“கொடிக்கால் நகரை”
“அழிக்காதே”
(என்ற கோஷமுடன் ‘அல்லி, பொன்னழகன் முதலியோர் வருகிறார்கள், தொண்டர்களுடன்.)
குரு: இது என்ன புதிய கூச்சல்?
பொன்: கூச்சல் அல்ல; கொடிக்கால் நகரைப் பாதுகாக்க எழுந்த போர்க்கொடி!
குரு: ஆண்டவனே! உன் அருள்! சிறுவர்களே... அரசன் கோபத்தைக் கிளறாதீர்கள். குதிரைப் பட்டாளம் அவிழ்த்து விடப்பட்டால்... தூள் தூளாகப் போய்விடுவீர்கள்.
அல்லி: கவலையில்லை... சாவுக்குத் துணிந்தே வந்திருக்கிறோம்! இதோ-எங்களை சுட்டுக் கொன்று, எங்களது பிணத்தைத் தாண்டிக் கொண்டு பிறகு கல் நாட்டு விழா நடத்தட்டும் உங்கள் அரசன்... உம் தோழர்களே... மறியலைத் தொடங்குங்கள்!
(அனைவரும் படுக்கிறார்கள்.)
அரி: அய்யோ - இது அரசர் வரும் வழி - அநியாயமாய், சாகப் போகிறீர்கள்...
அல்லி: உம்மைப் போல் சாவுக்குப் பயப்படும் ஜாதி அல்ல இது... நீர் ஒதுங்கிக் கொள்ளும்! மணிமகுடபுரியிலே -கோயில் கொள்ளும் ஆண்டவன் அந்த நாட்டு மக்களுக்காக உழைக்கும் எங்களது பிணக் கொலுவைக் காணட்டும்! பிறகு நீங்கள் படைக்கும் பிரசாதத்தை அருந்தட்டும்.
(படுத்திருப்போரைப் பார்த்து - நின்றபடி)
தோழர்களே! அதோ துப்பாக்கி ஏந்திய பட்டாளம் புடைசூழ - துரோகிகள் ஆலவட்டம் சுழற்ற - தோகையர் நடனத்தோடு - தோடுடைய செவியனாம் மணிமாற மகாராஜா கல் நாட்டு விழா நடத்த வருகிறார். முழங்குங்கள் போர் முரசத்தை-
“கொடிக்கால் நகரை”
“அழிக்காதே!”
(கீழேயுள்ளவர் இதுபோல ஒலித்தல்.)
குரு: (அரிஹரநாதரிடம்) இதுவும் நல்லதுதான்! அரசன் செத்ததும், பழியை இவர்கள் மீது போட்டு விடலாம்.
அரி: ஆமாம்! ஆமாம்! எல்லாம் நன்மையாத்தான் முடியுது!
(அரசர் வருகிறார் - ஆடம்பரமாக - அப்போது, குருநாதர் துரோகியிடம் கண் காட்டுதல், அவன், அரசர் மீது பாய்தல், அப்போது அல்லி, அரசனைக் கண்டு, திடீரெனத் துரோகியின் கத்திக்கு நேரே பாய்கிறாள். அவளது தோளிலே பலத்த காயம் அதற்குள் துரோகி ஓடிவிடுகிறான். ஒரேகுழப்பம். அல்லி மயக்கமடைகிறாள். பொன்னழகன் முதலியோர் திடுக்கிடுதல் - குருநாதர் நழுவி விடுகிறார், அரிஹரநாதருடன் - குழப்பம் - துப்பாக்கிப் பிரயோகம் அதிகமாகவே மக்கள் ஓட்டம் - அமைச்சர் குணசீலரும் ஓடிவிடுகிறார்!)
அர: (காவலரிடம்) உம் இவளை என்னுடைய மாளிகைக்குத் தூக்கி வாருங்கள் - உம் உடனே!
(உலகப்பன், காவலர் - அல்லியை தூக்கி செல்லுதல்)