காட்சி 26 / 47
காட்சி 26
காட்சி 26
மூல ஸ்கேன் 104, 105, 106, 107, 108
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அரசன் தனியிடம்; அரசன் பணிவாக நிற்கிறான். அமைச்சர் உட்கார்ந்திருக்கிறான்.)
அமை: சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும். மார்கழி ஏழாம் நாள் - கல் நாட்டு விழா மறந்து விடாதே!
அர: சரி ப்ரபூ! நீங்கள் சொன்னபடியே, உங்ககிட்ட ஜனங்களுக்கு நேரா அதிகாரத்தை ஒப்புச்சி விடுறேனுங்க!
அமை: சரி! ஜாக்கிரதை!
(அமைச்சர் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போகிறார். போனதும் அரசன் கம்பீரமாக அமர்ந்தபடி, சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான். உலகப்பன் பழரசம் கொண்டு வந்து தருகிறான்.)
அர: (அதை வாங்கியபடி) உம் நான் பழரசம் அருந்துகிறேன். அதோ கொடிக்கால் நகரத்து மக்கள் குழந்தை குட்டிகளோடு கஞ்சிகாய்ச்சி குடிப்பதற்கும் இடமில்லாமல் தவிக்கிற காட்சி தெரிகிறது!
உல: அந்தக் கஷ்டங்களைப் போக்கத்தானே இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்! களைப்பை நீக்கிக் கொள்ள, கொஞ்சம் சாப்பிடுங்கள் பிரபு!
அர: (அருந்தி விட்டு) உலகப்பா - ஒரே உப்பாக இருக்கிறது பழரசம்!
உலக: உப்பா? அய்யோ! திராட்டை பழம் புளிக்குமே தவிர - உப்புக் கரிக்காதே!
அர: உப்புதாண்டா உலகப்பா இது! இது பழரசம் இல்லையடா! பதை பதைக்கும் ஏழைகள் வடித்த கண்ணீரடா! கண்ணீரைச் சுவைத்ததில்லை நீ; கல்யாணமாகாதவனல்லவா? சுவைத்திருக்க மாட்டாய்? கன்னத்தோடு கன்னம் வைத்து, காதலிகள் கட்டிலறையில் அழுதிடும் போது இதழோரத்தில் வழிந்தோடும் அந்தக் கண்ணீரே இனிக்காது, கரிக்கும் என்கிறபோது, கட்டாந்தரையிலே, தொட்டால் எலும்பு குத்தும் பிள்ளைகள் அணைத்தபடி, கிடக்கும் ஏழைத் தாய்கள் அழுத கண்ணீரா இனிக்கப் போகிறது? இல்லை - இல்லை - அதோ, கொடிக்கால் நகரத்து மக்கள் கோவெனக் கதறுகிறார்கள்! என் கோட்டைச் சுவர்களைத் துளைக்கிறது அந்த ஒலி! அதோ கேட்கிறது - நீயும் கேள் அந்த ஒலியை! கேள், கேள், உலகப்பா கேள்!
(பழரசத்தை வீசுதல்)
உல: அரசே நிம்மதியாயிருங்கள்!
அர: நிம்மதி ஏதடா எனக்கு? ஏது எனக்கு நிம்மதி? ஒரு பக்கமா - இரு பக்கமா? எத்தனை பக்கத்திலிருந்து தாக்குதல்? தாக்குதல் என்றால், தரைப்படையும், கடற்படையும் கொண்டு தார் புனைந்த வேந்தர்கள் முடிபறிக்க முற்றுகையிட்டு விட்டார்கள் - என்ற சேதிகள் கோட்டைக்குப் பறந்து வருமே. அந்தத் தாக்குதலா? தாராளமாக வரவேற்றிருப்பேனே அந்தத் தாக்குதலை! வேலும், வாளுமில்லை, தோளும் தோளும் மோதிக் கொள்ள வேண்டும் என்று தூது விட்டானே, போர் முறையைக் கூறி - புலி நாட்டு வேந்தன் - கிலி கொண்டானா? எதிர்க்க வலிவுண்டு - வாராய் என வரவேற்பு இதழ் அனுப்பினே னேயல்லாமல், தாக்குதல் கேட்டுப் போக்கிடம் தேடவில்லையே நான்? உறங்கும் நேரம் ஊரம் அடங்கிய வேளை! உருவிய வாளுடன் ஒராயிரம் வீரர்கள் கோட்டைக்குள் நுழைந்தார்களே; கொடிமரத்தை நெருங்கினார்களே, அடியோடு அதைச் சாய்த்துவிட; அப்போதும் நூறு பேரோடு எதிர்த்து அவர்களைக் கூறு போடவில்லையா? அவையெல்லாம் தாக்குதல் அல்ல உலகப்பா - அவை எனக்கு வீர விளையாட்டுக்கள். வேலினும் கூர்மையுடைய - வாளினும் பளபளப்பு மிக்க - வேதம், சாஸ்திரம், புராணம், என்ற வேலிகளை அமைத்துக் கொண்டு, மதம் தாக்குகிறது என்னை? மண்டையைப் பிளக்கிறது உலகப்பா - மண்டையைப் பிளக்கிறது! மந்திரி பீடமோ, என்னை சாவுக்குழியிலே வைத்து, பூவும் பொரியும் தெளிக்க ஆசைப்படுகிறது. மக்களுக்காக உள்ள பிரச்சார சாதனம் ‘மக்கள் தொண்டன்’ மயக்கமூட்டும் திருநாமம் - மக்களை ஆடுகளாய் மாற்றி, என் மனப் புண்ணில் தணல் அள்ளிப் போடுகிறது! மதம் - ஏடு - மமதை பிடித்த அதிகாரம் - இவை மூன்றினாலும் தாக்கப்படும் மக்களோ இத்தனைக்கும் காரணம் நான்தான் என்று சபிக்கிறார்கள்! சாம்பலாகப் போகட்டும் இந்த சாம்ராஜ்யம் என்று சாபமிடுகிறார்கள்! அவர்களின் குரலை எதிரொலிக்கும் மக்கள் மன்றத்தினரோ - அடிப்படைக் காரணங்களை அகற்றிவிட எண்ணாமல், சீமான் சபை சொன்னபடி நான் ஆட வேண்டியவன் என்பதையும் கருதாமல், சீறுகிறார்கள் - என்மீது பாய்கிறார்கள் - அந்த சினவேங்கைப் புலிக் கூட்டத்தின் தாக்குதலுக்கும் - இலக்கு நான்தான் உலகப்பா - இலக்கு நான்தான்! மக்களின் தொல்லை நீக்க - என் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மதவாதியாம் குருநாதரைக் கண்டிப்போமென்றால், அப்போதும் இந்த மக்கள் என்னை எதிர்த்தே தீருவார்கள்! “அபச்சாரம் - ஆண்டவனின் பிரதிநிதியை அவமானப்படுத்தலாமா?” என்று அலறுவார்கள்! என்னதான் செய்வேன் - உலகப்பா - இதற்கு என்னதான் செய்வேன்! மக்கள் மன்றத்தைத் தக்கதோர் புரட்சி மன்றமாக மாற்றிடச் சென்றேன். தோல்விதான் - அங்கும் எனக்குத் தோல்விதான் - தொல்லை மேல் - தொல்லை - தோல்வி மேல் தோல்வி - துரோகிகள் வாழுகிறார்கள். துன்பம் படரா வாழ்க்கையின் தொடர்ச்சி கெடாமல்! என் தூய நற்கொள்கைகள் வாழ இடமில்லை! இடமில்லாமலே போய்விடுமா? இந்த ஜெகத்தில் கொள்கையுள்ள மனிதன் - குப்பை மேட்டிலும், கோணல் வழி செல்வோன் கோபுரத்திலுந்தான் இருக்க வேண்டுமா? இதை மாற்ற முடியாதா? ஏன் முடியாது? - மக்கள் சமுதாயத்திற்குத் தொண்டு செய்த எத்தனை எத்தனை மாணிக்கங்கள் புதைந்து கிடக்கின்றன - இந்த மண்ணில்! அந்த உத்தமர்களின் பெயரால் - அந்த தியாக சொரூபங்களின் பெயரால் - அந்த வீரத் திருவிளக்குகளின் பெயரால் - உலகப்பா, உனக்குச் சொல்லுகிறேன்; என் உள்ளத்திற்குச் சொல்லிக் கொள்கிறேன் - மணிமகுட புரியின் பிரஜைகளே - உங்களுக்கும் சொல்லுகிறேன் - என் உயிரைப் பணயமாக வைத்தாவது, உன்னத இலட்சியங்களை வெற்றி பெறச் செய்வேன் - வெற்றி - வெற்றி - வெற்றிதான்! வீழ்ந்தது மதகுருவின் அட்டகாசம்! அழிந்தது மமதையார் தர்பார்! இன்றோடு ஒழிந்தது இருட்டடிப்புப் பிரச்சார சாதனம்! வெற்றி! வெற்றி!வெற்றி! உலகப்பா...
உல: அரசே
அர: அமைச்சர் சொல்லி விட்டுப் போகிறார் - கொடிக்கால் நகரத்திலே கோயில் கட்ட நான் கல்நாட்டு விழா நடத்த வேண்டுமாம் - விழாவுக்குப் போகிறேன், வந்திருக்கும் மக்களிடத்தில் இந்த வஞ்சகரின் செயல்களை அம்பலப்படுத்துகிறேன்! மணிமகுடபுரியை - மக்கள் வசம் ஒப்புவிக்கிறேன்! சரியான சந்தர்ப்பம் - ஜனங்களை சந்திக்கும் சந்தர்ப்பம்! அமைச்சர் நினைத்திருப்பார் - அவருக்கு அதிகாரத்தை ஒப்படைப்பேன் என்று! அல்ல! அல்ல!! நாட்டு மக்களிடத்திலே நாட்டை ஒப்படைக்கிறேன். இந்த நரிகளை நடுத்தெருவில் விரட்டுகிறேன்!! வெற்றி! வெற்றி! வெற்றிகரமான சந்தர்ப்பம்! இதைத் தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது! நடக்கப் போவது கல் நாட்டு விழா அல்ல! புதிய குடி அரசுக்குக் கொடி நாட்டு விழா! கொடி நாட்டு விழா!