காட்சி 25 / 47
காட்சி 25
காட்சி 25
மூல ஸ்கேன் 101, 102, 103, 104
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அமைச்சர், அரிஹரநாதர், குருநாதர்-மூவரும் இருக்கிறார்கள்)
அமை: எப்படி என் யோசனை! அசல் பைத்தியம் போலவே நடிக்கச் செய்து விட்டேன், பார்த்தீர்களா!
குரு: அபாரம் அமைச்சரே! அவன் மாத்திரம் நமக்கு சமயத்தில் கிடைக்கா விட்டால், சீமான்கள் சபை நம் மூவர் மீதும் சந்தேகப்பட்டிருக்கும்!
அரி: ஆமாம் - சந்தேகம் வலுத்திருந்தால், மதபீடம்...
(குருவைக் காட்டி)
அதிகார பீடம்...
(மந்திரியைக் காட்டி)
பிரச்சார பீடம்!
(தன்னைக் காட்டி)
மூன்று பீடங்களும் ஆடிப் போயிருக்குமே!
அமை: இந்த மூன்று பீடங்களும் ஆடாமல் இருக்க என் மூளை இப்போது பலமாக வேலை செய்கிறது!
குரு: இந்தப் பொம்மை ராஜனையும் அதிக நாள் நம்ப முடியாது ஸ்வாமி! அவனை எப்படியாவது அரசனைப் போல் கையெழுத்துப் போட வைத்து, அதிகாரமனைத்தையும் என் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்!
குரு: என்ன?
(மனக் குழப்பத்தை வெளிக்காட்டாமல்)
அமை: ஆமாம் - அப்போதுதான் நம் இஷ்டப்படி நடக்க முடியும். அதற்கு சரியான சந்தர்ப்பம் வாய்க்கப் போகிறது - அதாவது கல்நாட்டு விழாவுக்கு அரசன் வரப் போகிறான் என்று நாட்டு மக்கள் எல்லோரும் திரண்டு வருவார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் - இவன் பித்தன் என்று! அவர்களுக்கு நேராகவே, அதிகாரங்களை என் பெயருக்கு மாற்றித் தருவதாக, அவனைச் சொல்ல வைக்கப் போகிறேன் - எப்படி குருநாதரே, யோசனை?
குரு: பேஷான யோசனை!
(மனக்கசப்பை வெளியிடாமல்)
அமை: ஆகவே, அரிஹரநாதரே! நமது பத்திரிகையில் “அரசனின் பைத்தியம், குருநாதர் அருளால் நீங்கிவிட்டது” என்று ஒரு செய்தி போடும்! அப்போதுதான் அரசன் சுய சிந்தையோடு அதிகாரங்களை என் பெயருக்கு மாற்றுகிறான் என்று மக்கள் நம்புவார்கள்!
அரி: ஆமாம்! ஆமாம்!
(கசப்புடன்)
அமை: அப்படியானால் நான் ஆகவேண்டியதைக் கவனிக்கிறேன்! வருகிறேன் குருநாத்!
குரு: சரி, அமைச்சரே, சந்தோஷம் உண்டாகட்டும்!
(அமைச்சர் போகிறார். அமைச்சர் போனதும் குருநாதரும் அரிஹரநாதரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.)
குரு: அரிஹரநாதரே - கேட்டீரா!
அரி: கேட்டேன், ஸ்வாமி! கேட்டேன்.
குரு: நமது ஆதரவையும் பெருமையையும் அஸ்திவாரமாக அமைத்து அதன் மீது அதிகார மாளிகையைக் கட்டப் போகிறானாம் அமைச்சன் - அனுமதிக்கலாமா நாம்?
அரி: கூடாது! கூடாது!!
குரு: அந்தப் பொம்மை ராஜாவை வைத்துக் கொண்டு நம் காலேந்திக் கிடந்த குணசீலன், கோலேந்தப் போகிறான்! இதைத் தடுக்க குறுக்கு வழி காண வேண்டும்?!
அரி: ஆமாம் ஸ்வாமி!
குரு: கொலை! கொலை!! கொலையைத் தவிர வேறு வழியில்லை! அந்தக் கோணங்கிப் பயல் ராஜா வேஷத்தோடு கோயில் கல் நாட்டு விழாவுக்கு வரும்போது - கொலை செய்துவிட வேண்டும் அவனை! எந்தப் போலி அரசனின் வாய் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற எண்ணுகிறானோ அமைச்சன், அந்தப் போலி அரசனைக் கொலை செய்து விட வேண்டும் - என்ன சொல்லுகிறீர்?
அரி: அரசனைக் கொல்வது மட்டுமல்ல; அமைச்சர் குணசீலர்தான் அவனை அரசனாக நடிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டை குணசீலர் மீது சுமத்தி, அவரையும் ஒழித்து விட வேண்டும். பிறகு மணிமகுடத்தை மதபீடம் ஆளும்!
குரு: அதுவே சரி! அரசனைக் கொல்ல ஒரு ஆள் - ஒரு கூரிய வாள்! இரண்டும் தயார் செய்வோம்! குணசீலா! கூர்மை கெட்ட அமைச்சனே! என்னை ஏமாற்றி, நீ நாடாளப் பார்க்கிறாயா? எத்தனுக்கு எத்தன் - இடையே ஒருபித்தன்! பார்க்கிறேன், நீ ஜெயிக்கிறாயா - நான் ஜெயிக்கிறேனா என்று! ஹ....! மதமென்னும் பேயிடம் வால் நீட்டும் வஞ்சகனே! மண்டை கனத்த மந்திரியே! பார்ப்போமடா யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்! யார் ஜெயிக்கிறார்கள் என்று!
அரி: ஜெபமாலை தோற்றதாக சரித்திரமே கிடையாது ஸ்வாமி!
குரு: ஜெபமாலை - தண்டு கமண்டலம் - பக்திப் பொருள்கள் மட்டுமல்ல, பத்திரிகாசிரியரே - இதோ பாரும்! அவை பழிவாங்கும் படைக்கலன்கள் கூட - இதோ பாரும்!
(தண்டுவைக் கழற்ற அதில் ஒரு கூரிய கத்தி இருக்கிறது.)
அரி: ஆகா - வாள் தயார்! இனி ஆள்தான் தேவை - நம் சதியை வெற்றிகரமாக முடிக்க!
குரு: ஹ..ஹ...ஹ! அதுவும் விரைவிலே தயார்!